அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

🕔 December 9, 2017

– முன்ஸிப் –

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

இவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியினூடாக, கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு தடவை தெரிவாகியிருந்தார்.

ஆயினும், நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர், அதாஉல்லாவிடமிருந்து விலகி, ஆளும் தரப்புடன் நட்புப் பாராட்டத் தொடங்கிய அமீர், மாகாண சபையிலும், ஆளும் தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இதனையடுத்து, இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக, அதாஉல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாகாண சபையின் எதிரணி ஆசனத்துக்கு அமீர் மாறியதோடு, அதாஉல்லாவுடனான உறவை புதுப்பித்துக் கொண்டார்.

இவ்வாறு அரசியல் தடுமாற்றங்களுடன் இருந்து வந்த அமீர், நேற்று வெள்ளிக்கிழமை, அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுதீனைச் சந்தித்து, அவரின் கட்சியில் இணைந்து கொண்டார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், சம்மாந்துறையைச் சேர்ந்தவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்