தாருன் நுஸ்ரா அநாதை விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை, நான் திருமணம் செய்ய விரும்புகிறேன்

🕔 December 6, 2017
– றாஸி முகம்மத் (அக்கரைப்பற்று) –

டொக்டர் மரீனா தாஹா ரிபாய்க்கு,

கதையொன்று சொல்கிறேன் கேளுங்கள்.

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர்  ஒரு வாலிபன் உங்கள் தாருன் நுஸ்ராவின் வாசற்கதவை வந்து தட்டினான்.
ஒரு பெண்மணி கதவைத் திறந்தார். அப்பொழுது தாருன் நுஸ்ரா தெஹிவளை ஸ்டேஷன் வீதியில் இருந்தது.

அந்த இளைஞன் அவனது பெயரைச் சொன்னான். “நான் உங்கள் அநாதை விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை அப்பெண் ஒரு ஹாபிழாவாகவும் மௌலவியாவாகவும் இருக்க வேண்டும்” என்றான் அந்த இளைஞன்.

“மாஷா அல்லாஹ். நல்ல விடயம்.உங்கள் தொலைபேசி இலக்கத்தைத் தாருங்கள். நாம் தொடர்பு கொள்கிறோம்” என்றார் அப்பெண்மணி.

சில நாட்கள் கழித்து அந்த இளைஞனுக்கு தாருன் நுஸ்ராவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த இளைஞனின் நிபந்தனைக்கேற்ப ஒரு பெண் இருப்பதாகக் கூறினார்கள்.

அந்த இளைஞன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்தான். அன்று அவனது சொந்தங்கள் என்று அவனுக்கிருந்தது தாருன் நுஸ்ராவின் அந்த அனாதைகள்தான்.

ஒவ்வொரு நாளும் அவன் தனது மனைவியைக் கூட்டிக் கொண்டு தாருன் நுஸ்ராவிற்குச் செல்வான். அங்கிருக்கும் அனாதைக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டு,அவர்களின் ஏழ்மையைக் கேட்டு, அவர்கள் வாழ்வில் பட்ட துயரங்களைக் கேட்டு அந்த இளைஞன் அதிகம் அழுதிருக்கிறான்.

அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மாலை நேரங்களில் தாருன் நுஸ்ராவின் அனாதைக் குழந்தைகளின் மடிகளில் வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தையின் சொந்தங்களும் அந்த அனாதைகள்தான்.

அந்த இளைஞனுக்கு தாருன்னுஸ்ராவில் எத்தனை கதவுகள் இருந்தன. அதில் எத்தனை பூட்டுகள் இருந்தன வரைக்கும் அனைத்தும் தெரியும்.

சில காலங்களுக்கு பின்னர் அந்த இளைஞன் கொழும்பை விட்டுச் சென்று விட்டான். தூரத்தில் ஒரு ஆற்றங்கரையில் ஆளரவம் இல்லாத ஒரு  இடத்தில் அவனது மனைவியோடும் குழந்தைகளோடும் அவன் வாழ்ந்து வருகிறான்.

எந்த அனாதை இல்லத்தில் இருந்து தனது மனைவியை அவன் அழைத்து வந்தானோ அந்த அநாதை இல்லத்தில் பாலியல் துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும் அந்த இளைஞன் இடிந்து விழுகிறான். அவனது இதயம் விம்மி வெடிக்கிறது.

அனாதாரவான வாழ்வின் வலியை அவன் ஒவ்வொரு இரவும் கண்ணீரோடு கேட்டிருக்கிறான். அநாதையின் வலி அவனுக்கு நன்றாகப் புரியும். ஏழ்மை எத்தனை கொடியது என்பதையும் அவன் நன்கறிவான்.

அந்த இளைஞன் யார் தெரியுமா மரீனா ரிபாய் அவர்களே,

அந்த இளைஞன் நான்தான். இது எனதும் எனது மனைவினதும் கதைதான்.

அந்த அனாதைகளின் மடியில் வளர்ந்த குழந்தை எனது மூத்த மகள்தான்.

ஆகவே மரீனா அவர்களே உண்மை தெரியாமல் பேசுகிறார்கள். தாருன் நுஸ்ராவின் சொத்துக்களை அபகரிப்பதற்காக மனீஷா என்ற பெண் இதனை இட்டுக்கட்டி இருக்கிறார், இது ஷீயாக்களின் சதி என்று நடந்த உண்மையை உங்கள் கௌரவங்களுக்காக மூடி மறைக்கப்பார்க்காதீர்கள்.

இன்று அந்த அநாதைக் குழந்தைகளிடம் பாலியல் துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது.
ஒரு 12 வயது சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பிள்ளையை, பரிசோதித்த அரச வைத்தியசாலை, தனது அறிக்கையில் ‘பாலியல் வன்புணர்ச்சி’ என்று எழுதித் தந்திருக்கிறது. குழந்தைகள் ஆடைமாற்றும் இடத்தில் CCTV கெமெரா வைக்கப்பட்டிருக்கிறது. இதை விட என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு.

அவதூறு பேசுகிறீர்கள் மறுமையைப் பயந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் எந்த றப்பைப் பற்றி எச்சரித்தீர்களோ அந்த றப்பின் அர்ஷைப் பிடித்துக் கொண்டு நானும் எனது மனைவியும் அந்த அப்பாவி அனாதைக் குழந்தைகளும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வோம்.

அநாதைகளின் பொறுப்புதாரி என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு டொக்டர் அவர்களே?

இனி வழக்கு அந்த துஷ்டனுக்கு அல்ல. அநாதைகளின் பொறுப்புதாரியாக இருந்த உங்களுக்கு.

அனாதரவான அநாதைகளின் வாழ்வோடு விளையாட நினைப்பவர்களுக்கு நீங்கள் இனி ஒரு பாடமாவீர்கள்.

டொக்டரே, இந்த ஏழை இளைஞனின் கதை உங்களுக்கு இனிக்கிறதா இல்லை உறைக்கிறதா?

இப்பொழுது சொல்லுங்கள்.அந்த அனாதைகளுக்காக நீங்கள் மூடி மறைக்கும் உண்மையைப் பேச நான் தகுதியானவனா?தகுதியற்றவனா?

அந்தப் பச்சிளம் பிள்ளைகளின் கண்களில் புன்னைகையைக் காணூம் வரைக்கும் உம்மை நாம் விடப்போவதில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்