கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

🕔 December 5, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தன்னைச் சந்திக்கச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொள்வதாக, மு.காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா குற்றம்சாட்டினார்.

மேலும், கிழக்கு மாகாணசபையின் நிதியினை தனது சொந்த வியாபாரத்துக்காகப் பயன்படுத்தியமை குறித்து, ஹாபிஸ் நசீருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

பாசிக்குடா ஹோட்டல் ஒன்றில் வைத்து, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில், அலிசாஹிர் மௌலானாவை முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அசிங்கமாத் திட்டியதோடு, தாக்குவதற்கும் முற்பட்ட சம்பவமொன்று, நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பிலும் தனது உரையில், நாடாளுமன்ற உறுப்பினர் மௌலானா விளக்கமளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், அவரைச் சந்திக்க வரும் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும், தொலைபேசியில் காமக் கதைகள் பேசுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக, தனதுரையில் மௌலானா குறிப்பிட்டார்.

எனவே, இவ்வாறான நாகரீகம் கெட்ட, மரியாதை தெரியாத, மோசமான பேர்வழியுடன் இணைந்து அரசியல் செய்ய முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

அலிசாஹிர் மொலானாவும், ஹாபிஸ் நசீரும் ஏறாவூரைச்சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்பான செய்தி: அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

வீடியோ

Comments