அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

🕔 December 4, 2017

ட்டக்களப்பு மாவட்ட மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை பாசிக்குடா ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தெரியவருவதாவது;

நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை சந்திப்பபதற்காக தனது மகன், கட்சி முக்கியதர் நஸீர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோருடன் பாசிக்குடாவிலுள்ள ஹோட்டலொன்றுக்கு, இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் சென்றிருந்தார்.

அப்போது மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், காலை உணவு எடுப்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இவர்களும் காலை உணவை ஹக்கீமோடு பகிர்ந்து கொண்டனர்.

அப்போது,கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்டும் அங்கு வருகை தர, எல்லோருமாக காலை உணவை உட்கொண்டிருக்கும் போதே மாவட்ட அரசியல் விடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினர்.

இதன்போது, அலிசாஹிர் மௌலானாவுடன் வந்திருந்த கட்சி முக்கியஸ்தரான நசீர் என்பவர்; “ஏறாவூர் விடயங்கள் குறித்துப் பேசுவோம்” என்றார். இதனையடுத்து, “எனது அறைக்குள் சென்று பேசுவோம் வாருங்கள்” என்று ஹக்கீம் அழைக்க, அனைவரும் அங்கு சென்றனர்.

அதற்கு முனனர், ஏறாவூர் நகரசபைத் தேர்தலில் வேட்பாளர் நியமிக்கும் விடயமாக மு.கா. தலைவர், அலிசாஹிர் மௌலானாவிடம் கேட்ட போது; “ஹாபிஸ் நசீரும், நானும் இணைந்து இணக்கப்பாட்டுடன் வேட்பாளர்களை நியமிப்போம்” என, மொலானா கூறினார்.

ஹக்கீமுடைய ஹோட்டல் அறைக்கு அனைவரும் சென்ற போது; “ஏறாவூர் விடயமாக பேசுவதாக இருந்தால், அங்கு அலிசாஹிர் மௌலானா தவிர வேறு யாரும், இருக்கக்கூடாது என்று, மு.கா. தலைவரிடம் ஹாபிஸ் நசீர் கூறினார்.

இதனையடுத்து, அலிசாஹிர் மௌலானாவின் மகன் மற்றும் கட்சி முக்கியஸ்தர் நசீர் ஆகியோர் அறையிலிருந்து வெளியேறி, அருகிலிருந்த கண்ணாடி அறையினுள் இருந்துள்ளனர்.

இதன்போது  மு.கா. தலைவர், அலிசாஹிர் மௌலானா, ஹாபிஸ் நசீர் மற்றும் மு.கா. தலைவரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஆகியோர் மட்டுமே, அந்த அறையில் இருந்துள்ளனர்.

சில நிமிடங்கள் கடந்திருக்கும், மு.கா. தலைவரின் அறையினுள் உயர்ந்த குரலில் சத்தம் கேட்டது. வெளியிலிருந்த நஸீர் மற்றும் மௌலானாவின் மகன் ஆகியோருடன் மேலும் பலர் அந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தனர்.

அப்போது கண்ட காட்சி இதுதான்;

முன்னாள் முதலமைச்சரை மு.கா. தலைவர் ஹக்கீமும், அலிசாஹிர் மௌலானாவை மு.கா. தலைவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இறுகப் பிடித்துக்கொண்டிருக்க, ஹாபிஸ் நசீர் அகமட், மௌலானாவை பார்த்து “நீ ஒரு ஹராமிடா, ஹராமிடா ” என்று  சத்தமிட்டுக் கத்திக் கொண்டு, தனது செருப்பை கழட்டி அடிப்பதற்கு முயற்சித்துள்ளார்.

அந்த வேளை மு.கா. தலைவர் தங்கியிருந்த அறை, கிட்டத்தட்ட யுத்த களமாக மாறியிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்