எம். எஸ். காரியப்பர் வீதிக்கல்லு சொல்லும் பாடம்

🕔 August 11, 2015

Article - 06

ல்முனை சந்தைப் பகுதியில், அண்மையில் ஹென்றி மகேந்திரன் என்பவரால், பட்டப்பகலில் அரங்கேற்றப்பட்ட காடைத்தனம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உள்ளுராட்சிமன்ற மாநகர கட்டளைச்சட்டம் 71 இன் பிரகாரம், குறித்த உள்ளுராட்சிக்கு பொறுப்பான முதலமைச்சர் – தனது சுயமான முன்னெடுப்பிலோ அல்லது மாநகர சபையொன்றின் பிரேரணை முன்மொழிதல் மூலமோ எந்தவொரு வீதியையும், எந்த நேரத்திலும் பெயர்மாற்றம் செய்யும் அதிகாரமுடையவர். இதன் மூலம் மேற்குறித்த வீதி பெயர்சூட்டும் நிகழ்வு சட்டவிரோதமற்றது என்பது நிரூபனமாகிறது. சட்டம் இவ்வாறிருந்தும்,  இந்த அடாவடித்தனத்தை அரங்கேற்றினார் ஹென்றி மகேந்திரன் எனும் அரசியல் வியாபாரி.

ஹென்றி மகேந்திரன் செய்த காடைத்தனத்தை விடவும், மிக்க கவலை தரும் விடயமெனில் மேற்குறித்த சம்பவத்தை நம்மவர்கள் அணுகும் முறையாகும்.

நம்மில் பலர் இதனை கல்முனை மாநகர சபை முதல்வரின் தனிப்பட்ட விடயமாகவும், இன்னும் சிலரோ இது முஸ்லிம் காங்கிராஸ் கட்சி சார்ந்த விடயமாகவுமே காண்கின்றனர். கல்முனை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரிதும் சேவையாற்றிய கல்முனை மண்ணின் பிதாவாக எல்லோராலும் போற்றப்படும் கேட் முதலியார் எம். எஸ். காரியப்பரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லை நாசமாக்கியது மட்டுமல்லாது, கல்முனை மக்களின் இதயம் என அறியப்படும் கல்முனை பஷாரின் மத்தியில், பட்டப்பகலில் எல்லோரும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், ஹென்றி மகேந்திரன் தன்னுடைய அரசியல் லாபத்துக்காக அரங்கேற்றிய வில்லன் நாடகத்தை பார்த்து ரசித்து, மனதிற்குள் கூப்பாடு போட்டவர்களே நம்மில் அதிகம்.

உங்களிடம் ஒரு வினையமான வேண்டுகோள்;

நீங்கள் எந்த கட்சிக்கும் போராளியாக இருந்துவிட்டுப் போங்கள். எந்தவொரு அரசியல்வாதியின் பக்தனாக இருந்து மோட்சம் பெறுங்கள். அது உங்கள் சுயம் சார்ந்த விடயம். ஆனால் எமது சமூகத்திற்கு தீய சக்திகளால் இழுக்கு, பிரச்சினை என்று வரும் போது உள்ளக பிரிவினைகளை ஓரங்கட்டிவிட்டு, ஓரணியில் திரண்டு அநீதிக்கெதிராக குரல் கொடுக்க முன்வாருங்கள்.

கடந்த காலங்களில் மறக்கமுடியாத பல பாடங்கள் நமக்குண்டு. சிங்கள பேரினவாதம் முதன்முதலில் அனுராதபுரத்திலுள்ள ஒரு ஷியாரத்தை உடைத்து தரைமட்டம் செய்யும் போது, நம்மவர்கள் அது ஒரு ஜமாஅத் சார்ந்த பிரச்சினையாகவே அணுகி கைகட்டி வேடிக்கை பார்த்தனர். இன்னும் சிலர் மனதுக்குள் கூப்பாடும் போட்டனர். தொடர்ந்து காவிப்பயங்கரவாதம் தனது அகோரத்தாண்டவத்தை நாட்டிலுள்ள பல பாகங்களிலுமுள்ள பள்ளிவாசல்களையும், நம்மவர்களின் வர்த்தக நிலையங்களையும் பதம் பார்த்து, எமெக்கெல்லாம் பர்மாவை ஞாபகப்படுத்தி சென்ற வரலாறுகள் இன்னும் மறக்கவில்லை.

இரண்டு தசாப்தத்திற்கு மேலாக – அரச ஆவணங்கள் உட்பட அனைத்திலும் பயன்பாட்டிலுள்ள, முஸ்லிம்கள் நூறு வீதம் வாழும் ஒரு வீதிக்கு, ‘கடற்கரைப்பள்ளி வீதி’ என பெயர்மாற்றம் செய்ய உரிமையில்லை இல்லாமல் போனது. எல்லா இனமக்களும் கூடும் கல்முனை பழைய பஸ் நிலையத்தை புனருத்தானம் செய்து, ‘ஐக்கிய சதுக்கம்’ என பெயர் மாற்ற உரிமை இல்லை நமக்கு. கௌரவ ஏ.ஆர்.எம். மன்சூர் எம்.பி உருவாக்கிய கல்முனை பொது நூலகத்திற்கு, அவரின் பெயரை சூட்டுவதற்கும் உரிமை இல்லை நமக்கு. நமது வைத்தியசாலைக்கு சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை பாதுகாக்க முடியவில்லை நமக்கு. இப்படி எம்மை நோக்கி பல திட்டமிடப்பட்ட சதிகள் தொடர்ச்சியாக நடக்கும் போது, நமக்குள் உள்ள வேற்றுமைகளால் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கின்றோம்.

ஆகவே, அடுத்தவரை குறை கூறி ஆவது ஒன்றுமல்ல. பிரச்சினையும் தீர்வும்  நமக்குள்ளேதான் இருக்கின்றன. இனிமேலாவது, நமது சமூகத்திற்கு எதிராக எந்த சக்தியும் செயற்படும் போது, உள்ளகப்பட்ட அனைத்து வேற்றுமைகளான – அரசியல் வேறுபாடு, கட்சி வேறுபாடு, ஜமாஅத் வேறுபாடு, இன்னும் உள்ள எல்லா வேறுபாடுகளையும், தனிப்பட்ட குரோத தாபங்களையும் களைந்து, ஓரணியில் திரண்டு செயற்படுவோமாக! வேற்றுமைகளிலும் ஒற்றுமை காண்போமாக!!

Comments

புதிது பேஸ்புக் பக்கம்