சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு

🕔 November 30, 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 07 பேர் இறந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, 05 பேர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கைக்கு கிழக்காக உள்ள அரேபிய கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தற்போது கொழும்பிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் சில மணித்தியாலங்களில் அது சுழல்காற்றாக மாற்றமடையும் எனவும் மேற்கு – வடமேற்கு திசையில் சுழல் காற்று கடந்து செல்லும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென்மேற்கு திசையில் கடந்து செல்லும் மழை மற்றும் கடும் காற்று மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கம் செலுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் அதிக மழை வீழ்ச்சி 100 – 150 மில்லிமீற்றர் வரை பதிவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்