நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர்

🕔 August 10, 2015

Nizam kariyapper - 021– முன்ஸிப் –

ல்முனை நகரில் அமைக்கப்பட்டிருந்த, கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல் அடித்து நொறுக்கப்பட்டமை குறித்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர மேயரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

சட்டவிரோதமான காரியமொன்றினைச் செய்வதற்காக ஒன்று கூடியமை, அரச சொத்துக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த முறைப்பாடு தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு கல்முனை பொலிஸார் அறிவித்துள்ளதாகவும் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.

கல்முனை நகர் பகுதியில் வீதியொன்றுக்கு, எம்.எஸ்.காரியப்பர் வீதி எனும் பெயர் சூட்டப்பட்டு, அதற்கான நினைவுக்கல் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் சிலரும் – அவர்களுடன் வந்த ஆதரவாளர்களும், குறித்த நினைவுக்கல்லினை அடித்து நொறுக்கி விட்டுச் சென்றிருந்தனர்.

குறித்த வீதிக்கு, சட்டவிரோதமான வகையில் இரவோடிரவாக பெயர் வைக்கப்பட்டு, நினைவுக்கல் நிர்மாணிக்கப்பட்டதாககத் தெரிவித்தே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள், அந்த நினைவுக் கல்லினை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவியுள்ள நிலையிலேயே, மேற்படி குற்றச் செயலைப் புரிந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பர் இதுகுறித்து நம்மிடம் மேலும் கூறுகையில்; நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்முனை நகருக்கு வருகை தரவிருந்த நிலையில், பிரதமரின் வருகையினைத் தடுக்கும் நோக்குடன், குறிப்பிட்ட நபர்கள் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டார்களாக என்கிற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் கைது செய்தால், அவர்களின் தரப்பினர் பெரும் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தி, கல்முனை நகரில் பதட்டமானதொரு சூழ்நிலையினை ஏற்படுத்துவதனூடாக, பிரதமரின் வருகையினைத் தடுப்பதற்கான திட்டங்கள் இருந்ததும் எமக்குத் தெரியவந்தது.

எவ்வாறாயினும், இக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என, தான் நம்புவதாகவும் மேயர் நிஸாம் காரியப்பர் கூறினார்.

தொடர்பான செய்தி: எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்