ஜின்தோட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; நடந்தது என்ன?

🕔 November 17, 2017

காலி – ஜின்தோட்ட பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, சிலர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

என்ன நடந்தது

சில தினங்களுக்கு முன்னர் இப் பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றது. சிங்களவர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் – முஸ்லிம் பெண் மற்றும் அவரின் பிள்ளை மீது மோதியுள்ளது.

இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்தியவரைத் தாக்குவதற்கு அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் முயற்சித்ததாகவும், பதிலுக்கு சிங்களவர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் நீட்சியாகவே தற்போது வரையிலான பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மன்னிக்க தயாரில்லை

பிரச்சினையினைத் தீர்த்து வைக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட முஸ்லிம் தரப்பினர் மன்னிப்புக் கோரிய போதும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் சிங்களவர்கள் இல்லை என அங்கிருக்கும் ஒருவர் கூறுகின்றார்.

எது எவ்வாயினும், சிலருக்கு இடையில், ஒரு விபத்தினால் ஏற்பட்ட பிரச்சினையானது, தற்போது இனப் பிரச்சினையாக மாறியிருக்கின்றது.

பள்ளிவாசல் மீது தாக்குதல்

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை  காலி – சப்புகொரல்லயிலுள்ள ஹுசைன் பள்ளிவாசல் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த மூன்று முஸ்லிம்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலக்கு வைக்கப்பட்ட மாணவர்கள்

இதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை சிங்களப் பாடசாலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் 08 பேர் மீது, பாடசாலை விட்டு வரும் போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சமாதானப் பேசச் சென்றவர் சிக்கிய பரிதாபம்

இது இவ்வாறிருக்க, இந்தப் பிரச்சினையில் சுமூக நிலையை ஏற்படுத்துவதற்காக அப்பிரதேசத்தைச் சேர்ந்த  கியாஸ் ஹுசைன் எனும் முன்னாள் மக்கள் பிரதிநிதியொருவர் முயற்சி செய்ததாகவும், ஆனால் அவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் அப்பகுதி முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, மேற்படி கியாஸ் என்பவரை விடுதலை செய்யக் கூடாது என்றும், அவரை விடுவித்தால் பிரச்சினை ஏற்படும் எனவும் சிங்களவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவரை விடுவிக்குமாறு முஸ்லிம்கள் கோருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் முஸ்லிம்கள் மீது தற்போது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகிறது. சில வீடுகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படை பின்வாங்கல்

இந்த நிலையில், அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர், தற்போது அங்கிருந்து விலகிக் கொண்டுள்ளதாக அப்பகுதி முஸ்லிம்கள் கூறுகின்றனர். இது – தாக்குதல் மேற்கொள்வோருக்கு சாதகமானதொரு சூழ்நிலையாக அமைந்துள்ளதாகவும் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்