கல்முனை மாநகரை பிரித்து, 04 சபைகளை உருவாக்க இணக்கம்: குழு அமைத்து, எல்லைகள் தொடர்பில் பேசவும் தீர்மானம்

🕔 November 17, 2017
– அகமட் எஸ். முகைடீன் –

ல்முனை மாநகர சபைக்குட்பட்ட எல்லையைப் பிரித்து, நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையினை பிரித்து, உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பது சம்பந்தமாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இவ் உயர் மட்டக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக எதிர்க் கட்சித் தலைவர் ரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், கோடீஸ்வரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், ஆசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை மாநகர சபை பிரிப்பு சம்பந்தமாகவும், குறிப்பாக சாய்ந்தமருது கல்முனை விவகாரங்கள் அலசி ஆராயப்பட்டது. இதனையடுத்து முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மூன்று சபைகளையும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு சபையுடான, மொத்தம் நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தரப்பு பிரதிநிதிகள் இதன்போது நியாயமற்ற கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துப் பேசியபோது, பிரதி அமைச்சர் ஹரீஸ் சரியான விளக்கத்தைக் கொடுத்து அவர்களைத் தெளிவுபடுத்தியமையினால், நான்கு சபைகளை உருவாக்குவது என்ற இணக்கப்பாடு காணப்பட்டது.

கல்முனையினை மாநகர சபையினை நான்கு உள்ளுராட்சி சபைகளாக பிரிப்பது தொடர்பில் கல்முனையில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாட்டை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு தெளிவுபடுத்தினார்.

குறித்த நான்கு சபைகளும் 1987 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த சபைகளின் எல்லைகளுடன் உருவாக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தினார். “இந்த எல்லைகள் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியினாலும் உருவாக்கப்பட்டதல்ல, 1897ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட எல்லைகளாகும். எனவே இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும்” என, பிரதியமைச்சர் ஹரீஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதேசங்களின் புதிய எல்லைகள் தொடர்பான கோரிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் 05 பேரையும் தமிழ் பிரதிநிதிகள் 05 பேரையும் கொண்ட குழு மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடாத்துவதென  முடிவெடுக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்