ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் களமிறங்குவார்: அமைச்சர் ஹிஸ்புல்லா

🕔 November 14, 2017

– எம்.ஜே.எம். சஜீத் –

றாவூர் நகர சபைக்கான தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபையிரை தலைமை வேட்பாளராக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் ஏறாவூர் பிரதேச பொது நிறுவனங்களுக்கு நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,  மேற்கண்ட தகவலை அமைச்சர் வெளியிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர். அவ்வாறு  அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் காரணமாகவே, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

எனவே எந்த நேரத்திலும் எவ்வாறான தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை முகங்கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். இருந்தாலும் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

எனவே எதிர்வருகின்ற தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்கு, முன்னாள் அமைச்சர் சுபையிர் தலைமையிலான சிறந்ததொரு அணியினரை களமிறக்கவுள்ளோம். ஆகவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் அமைச்சர் சுபையிர் தலைமையிலான அணியினரை ஏறாவூர் மக்கள் ஆதரித்து அவர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

அவர்களினூடாகவே ஏறாவூர் மக்களின் தேவைகளையும் அபிவிருத்திகளையும் நிறைவேற்ற முடியும். குறிப்பாக ஏறாவூர் மக்கள் இந்தவிடயத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் யார் மிக அக்கரையுடன் செயற்படுகிறார். அதேபோன்று இந்த பிரதேச மக்களின் நலனில் யார் ஆர்வம் செலுத்துகின்றார் என்பதனை ஆழமாக சிந்திக்க வேண்டும்.

அந்த வகையில் சுபையிரை நல்லதொரு அரசியல் தலைமைத்துவமாக நான் கான்கின்றேன். அவர் ஏறாவூர் பிரதேசத்தின் அபிவிருத்தியில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதனை யாரும் மறக்க முடியாது. அவருக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தினை வைத்து ஏறாவூர் பிரதேசம் மாத்திரமல்ல கிழக்கு மாகாணம் பூராகவும் பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரின் வெற்றிக்காக ஏறாவூர் மக்கள் தொடர்ந்தும் உழைக்க வேண்டும்” என்றார்.

ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மு.காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜாங்க அமைச்சர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் இருவரும், ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்