ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி

🕔 August 9, 2015

Ranil - Kalmunai - 001

– எம். சஹாப்தீன் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமும், அமைச்சர் கருஜயசூரியவும் பேசி எடுத்துள்ள முடிவுக்கு அமைய, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்கிக் கொடுப்போம் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் ரணில் மேற்கண்ட உறுதிமொழியினை வழங்கினார்.

கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டார்.

இக் கூட்டத்தில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“கல்முனையை மிகவும் நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக கல்முனையை மாற்றுவோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தன் மூலமாக, மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்தோம். இன்று நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத ரீதியாக மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. எல்லோரும் இலங்கையர் என்ற ரீதியில் – சாதி, மத பேதங்களின்றி ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆயினும், இன்று மஹிந்தராஜபக்ஷ இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார். இனவாதம் பேசி அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை. மஹிந்தவை துரத்தி அடிப்பதோடு, இனவாதத்தையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்காகவே, ஐ.தே.கவின் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்கின்றோம். நிம்மதியுடன் சகல இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஐ.தே.கவுக்கு வாக்களிக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமைப்பட்டதனைப் போன்று – ஹெலஉறுமய, மலையக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் எல்லோரும் எங்களுடன் இணைந்துள்ளார்கள். அவர்களின் கட்சிகளும் எம்முடன் உள்ளன. இந்த ஒற்றுமையுடன் ஐ.தே.கவின் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஐ.தே.கவின் ஆட்சி வேண்டுமென்று கேட்கின்றார்கள். 10 லட்சம் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கல்முனை நகரையும், அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் நவீன முறையில் அபிவிருத்தி செய்து, கல்முனையை பாரிய அபிவிருத்தியை கொண்ட நகரமாக மாற்றுவோம்.

மேலும், ரஊப் ஹக்கீமும், கருஜயசூரியவும் பேசி எடுத்துள்ள முடிவுக்கு அமைய, சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ள – சாய்ந்தமருதிற்கான பிரதேச சபையை தேர்தலின் பின்னர் ஏற்படுத்துவோம்.

மகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் 16 ஆயிரம் ஹெக்டயரில் வேளாண்மையை செய்வதற்கும் தீர்மானித்துள்ளோம்” என்றார்.Ranil - Kalmunai - 003Ranil - Kalmunai - 002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்