புள்ளடிகளும், சிலுவைகளும்

🕔 November 7, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

டைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.

அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன.

கட்சிகளில் அதிகாரம் மிக்கவர்கள் தீர்மானிப்பதற்கு முன்பாகவே, அந்தந்தக் கட்சி ஆதரவாளர்கள், தமக்கான அபேட்சகர்கள் யாராக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு ஊரிலும் தேர்தல் சூடு தொடங்கி விட்டது.

குறிப்பாக, தேர்தலை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்கள், மிக நன்றாகவே களைகட்டத் தொடங்கி விட்டன. இம்முறை, முஸ்லிம் பகுதிகளில் களமிறங்கும் கட்சிகளும், அதிகமாக இருக்கும்போல் தெரிகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், புதிய கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐ.தே.கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள், முஸ்லிம் பிரதேசங்களில் களமிறங்கத் தயாராக உள்ளன. எனவே, இந்தமுறை நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல், கலகலப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் பிரதேசங்களில் அரசியல் செய்வதற்கு, இம்முறை பெருந்தேசியக் கட்சிகள் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, முஸ்லிம் பகுதிகளில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதிக அக்கறை காட்டுவதுபோல் தெரிகிறது.

இதன் காரணமாக, முஸ்லிம் பிரதேசங்களில் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை நியமித்து வருகின்றது. ஆனால், இவ்வாறான நியமனங்களில் கணிசமானவை, ஏமாற்றமளிப்பவையாக உள்ளன.

சமூகத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களையும், பணபலம் உள்ளவர்களையுமே அரசியல் கட்சிகள் தமது பிரதேச அமைப்பாளர்களாக நியமிப்பது வழங்கமாகும். ஆனால், சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரதேச அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர், ‘காகிதக் கூடு’களாக உள்ளனர் என்கிற விமர்சனம் பரவலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்குமா எனத் தெரியவில்லை.

சுதந்திரக் கட்சி, தனித்துக் களமிறங்குமாயின், முஸ்லிம் பிரதேச அமைப்பாளர்கள் எவ்வாறு வெற்றி இலக்கை நோக்கி, தமது கட்சியைக் கட்டி இழுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

இன்னொரு புறம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் கட்சிக் காரியாலயங்களைத் திறந்து வைத்துக் கொண்டு, தமது ஆதரவாளர்களை உசார்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், இவர்களுக்கும் தேர்தலில் களமிறங்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது இன்னும் இறுதியாகவில்லை.

காரணம், வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்திருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாங்கள் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டியிடுவதற்கு மு.கா அனுமதிக்குமா என்பது கேள்விக்குரியதாகும். “வடக்கு, கிழக்குக்கு வெளியில், உங்களுடன் நாங்கள் கூட்டு வைத்துக் கொள்வதாயின், வடக்கு, கிழக்கில் நீங்கள் போட்டியிடக் கூடாது” என்று, ஐ.தே.கட்சியிடம் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கையொன்றை முன்வைக்கக் கூடும். அதற்கு ஐ.தே.க தலைமை என்ன பதிலளிக்கும் என்பதைப் பொறுத்துத்தான், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலிலே ஐ.தே.கட்சி என்ன ஆகும் என்பது பற்றிப் பேச முடியும்.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் இவ்வாறான கோரிக்கைக்கு, கடந்த காலங்களில் ஐ.தே.கட்சி இணங்கியமையால்தான், முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்து போனதாக, அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப், அண்மையில் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, கிழக்கு மாகாணத்தில் ஐ.தே.கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்று, கட்சியின் தலைமையைத் தாம் வலியுறுத்தி வருவதாகவும், அண்மையில் அவர் கூறியிருந்தார்.

இன்னொருபுறம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும், கடந்த காலங்களைப் போன்று, முஸ்லிம் பிரதேசங்களில் அந்தக் கட்சியினால் கோலோச்ச முடியுமா என்பது சந்தேகம்தான். இப்போதைய நிலையில், தனது தளமான அம்பாறை மாவட்டத்திலேயே, முஸ்லிம் காங்கிரஸ் தன்னைத் தக்க வைப்பதென்பது சவாலானதொரு விடயமாக மாறியிருக்கிறது என்பதுதான் கள நிலைவரமாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது பிரதேசத்துக்கு, உள்ளூராட்சி சபையொன்றைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வாக்குறுதியொன்றை வழங்கியிருந்த நிலையில், அது நிறைவேற்றப்படாமையினால், ஆத்திரம் கொண்ட அப்பிரதேச மக்கள், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹர்த்தால் மற்றும் வீதி மறியல் போராட்டங்களை நடத்தினார்கள். இறுதியில் மு.கா தலைவர் உள்ளிட்டவர்களின் உருவப் பொம்மையையும் எரித்தனர். இதன்போது, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டன.

எவ்வாறாயினும், சாய்ந்தமருது மக்களின் அதிகபட்சமான வாக்குகளையும், அதனூடாக கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகளையும் அதிகளவில் பெற்றுக் கொண்ட கட்சி எனும் வகையில், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுக் கொடுப்பதற்கான பாரிய பொறுப்பு, முஸ்லிம் காங்கிரஸுக்கே உள்ளது. அதனால்தான், இந்த விவகாரத்தில் அப்பிரதேச மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீது அதிகளவில் தமது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கிடைக்கும்வரை, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தமது பிரதேசம் ஆதரவளிக்கப் போவதில்லை என்று, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் அறிக்கை விட்டுள்ளது. மேலும், எதிர்வரும் தேர்தல்களில் சாய்ந்தமருது பிரதேசம் சார்பாக பள்ளிவாசலின் நெறிப்படுத்தலில் சுயேச்சைக் குழுவொன்று களமிறக்கப்படும் என்றும், பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு எப்போதும் ஆதரவுத்தளமாக இருந்து வரும் அட்டாளைச்சேனை பிரதேசத்திலும், தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிரான மனநிலை பரவலாக உருவாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக மு.கா தலைவர் ஹக்கீம் வாக்குறுதியளித்து விட்டு, இன்றுவரை நிறைவேற்றாமல் வருகின்றமையை அந்த மக்கள் மறக்கவில்லை.

அட்டாளைச்சேனை மக்களும் தேசியப்பட்டியலை வழங்குமாறு மு.கா தலைவரிடம், கேட்டுக் கேட்டு அலுப்படைந்து போன நிலையில், “இரண்டு வருடங்களுக்கு மேல், பதவிக் காலம் முடிவடைந்த அந்தத் தேசியப்பட்டியல் எமக்கு இனித் தேவையில்லை” என்று கூறும் நிலைக்கு வந்து விட்டனர்.

ஆயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் வேளையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனைக்கு மு.கா தலைவர் வழங்கி, அங்கு தமது கட்சியின் ஆதரவைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கலாம் என்கிற பேச்சுகளும் உள்ளன.

அப்படி, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமாயின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கே, அப்பதவி கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

ஆனால், நசீருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுவதை கட்சிக்குள் எதிர்க்கும் பலர் இருக்கின்றனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இருந்தாலும், சவால்களுக்கு மத்தியில் தேர்தலொன்றை எதிர்கொள்ளும் ஆற்றல், நஷீரிடம் இருக்கிறது என்பதை, மு.கா தலைவர் அறிந்து வைத்துள்ளமையினால், தேசியப்பட்டியல் விவகாரத்தில் மு.கா தலைவரின் தெரிவாக, நசீர்தான் இருப்பார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, முஸ்லிம் கூட்டமைப்புப் பற்றிய பேச்சுகளும், எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற நிலையில், இன்னமும் அவ்வாறானதொரு கூட்டமைப்பு உருவானதாகத் தெரியவில்லை. எம்.ரி. ஹசன்அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரைக் கொண்ட, தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியினர், கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் சமூகத்துக்குள் அரசியல் ரீதியாகக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்ட சிலர், அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து – கூட்டமைப்பாக இணைந்து செயற்படுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுமாயின், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், முஸ்லிம் கூட்டமைப்பு பாரிய வீச்சுடன் களமிறங்கும் சாத்தியம் உள்ளது.

தூய முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவை இந்தக் கூட்டமைப்பில் இடம்பெறலாம் எனவும் நம்பப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மேற்சொன்னவாறான முஸ்லிம் கூட்டமைப்பொன்று களமிறங்கினால், முஸ்லிம் காங்கிரஸுக்கு அது, பெருத்த சவாலாவே அமையும். முஸ்லிம் காங்கிரஸின் பிரதான தளமான அம்பாறை மாவட்டத்திலேயே அந்தக் கட்சி இழப்புக்களை கொள்ளும் நிலைவரம் ஏற்படக் கூடும்.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக முஸ்லிம்களின் வசமுள்ள உள்ளூராட்சி சபைகள் ஏழு உள்ளன. பொத்துவில் பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகரசபை ஆகியவை முஸ்லிம்களின் ஆட்சியின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளாகும். இவற்றில் நான்கு சபைகளைக் கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது.

ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், முஸ்லிம் கூட்டமைப்பும் உள்ளூராட்சித் தேர்தலில் குதிக்குமாயின், தான் வைத்திருந்த நான்கு சபைகளையும் மு.கா தக்க வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமாகும்.

முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில், அதன் வரலாற்றில் எப்போதுமில்லாததோர் இக்கட்டான அக, புற சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலொன்றை இம்முறை சந்திக்கவுள்ளது. மு.காவுக்குள் ஏற்பட்ட உள்ளக உடைவு மற்றும் ஹசன்அலி, பஷீர் உள்ளிட்ட அணியினரின் வெளியேற்றம் ஆகியவற்றின் விளைவுகளை அந்தக் கட்சி மிகவும் உக்கிரத்துடன் சந்திக்கும் ஒரு தேர்தலாக எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் நிச்சயம் அமையும்.

மேற்சொன்ன விடயங்கள் அனைத்தும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் சவால்களாகும்.

அதேவேளை, அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம் பிரதேசங்களில் எதிர்கொள்ளக் கூடியதொரு பொதுவானதொரு சவாலும் உள்ளது. அதுதான், வேட்பு மனுவில் 25 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையாகும்.

இதை நிறைவேற்றுவதென்பது முஸ்லிம் பிரதேசங்களில் பெரும் சவாலாகவே அமையும். ‘வாயால் நுரை தள்ளும்’ அளவுக்கு இந்த விடயத்தில் கட்சிகள் களைப்படையப் போகின்றன.

அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு, இலங்கையில் பெண்கள் இன்னும் தயாராகவில்லை. குறிப்பாக, இப்போதைய நிலையில் முஸ்லிம் பெண்கள் அரசியலை விரும்பவே மாட்டார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் குடும்பக் கட்டமைப்பு, வாழ்க்கைச் சூழல், சமய நம்பிக்கை மற்றும் பண்பாடு போன்றவை இதற்குக் காரணங்களாக உள்ளன.

எனவே, முஸ்லிம் பிரதேசங்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்புமனுக்களை 25 சதவீதமான பெண்களால் நிரப்பிக் கொள்வதற்கு பெரும்பாடுபட வேண்டியிருக்கும்.

வேட்பு மனுக்களில் வெறுமனே பெண்களின் பெயர்களைச் சாட்டுக்கு நிரப்பி தப்பிக்க முடியாது. 25 சதவீதமான பெண்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு செல்வதும் உறுதி செய்யப்படுதல் அவசியமாகும்.

எனவே, இதுவரையும் ஆண்களால் மட்டுமே மிக அதிகபட்சமாக நிரம்பிப் போயிருந்த உள்ளூராட்சி சபைகள், இனி பெண்களாலும் அழகு பெறப் போகின்றன என்பது மகிழ்ச்சியான விடயம்தான்.

ஆனாலும், வெற்றிகரமான அரசியலை, இவ்வாறு தெரிவாகும் பெண்களால் தொடர்ச்சியாகச் செய்ய முடியுமா என்கிற கேள்வியும் மக்களிடம் பரவலாக உள்ளதையும் நாம் மறந்து விடலாகாது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல், கலப்பு முறையில் நடைபெறும் முதல் தேர்தலாகும். முன்னைய தேர்தல் முறையில் கட்சிகளுக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி, அதனூடாகவே தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து வந்தனர்.

இம்முறை அதில் மாற்றம் ஏற்படும் எனப் பலரும் நம்புகின்றனர். தனி மனிதர்களின் ஆளுமைகள் இந்தத் தேர்தலில் பெரிதும் உயர்ந்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிகளை விடவும் அல்லது கட்சிகளுக்கு ஈடாக வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் அதிகம் கவனிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

எனவே சண்டியர்களையும், புதுப் பணக்காரர்களையும் தேர்தலில் தெரிவு செய்து மகிழும் முட்டாள் தனத்தை, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலாவது கை கழுவி விடுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், நமது புள்ளடிகளையே, பின்னர் சிலுவைகளாக நாம் சுமக்க நேரிடும்.

நன்றி: தமிழ் மிரர் (07 நொவம்பர் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்