முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்

🕔 November 6, 2017

–   ஏ.எச். சித்தீக் காரியப்பர் –

“எதிர்வரும் உள்ளராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து சுயேட்சைக் குழு ஒன்றை நாங்கள் களத்தில் இறக்கவுள்ளோம். எமது சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருக்கக் கூடாது. எமது சுயேட்சைக் குழுவில் அவ்வாறானவர்கள் போட்டியிட வேண்டுமாயின் தாங்கள் தற்போது அங்கத்துவம்  வகிக்கும் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்து விட்டு வரட்டும்” என்று,  சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை அடுத்து, அப்பிரதேச பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் தற்போது தளர்ச்சி நிலைமை காணப்படுவதாக பேசப்படுகிறது. எனவே, இது தொடர்பான உண்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.  ஹனீபாவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கமாட்டாது என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தினத்தன்று, எங்களால் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது தொடர்ந்தும் அமுலிலிருக்கும். இந்த விடயத்தில் சிலர் கூறுவது போன்று விட்டுக் கொடுப்புக்கோ நெகிழ்வுத் தன்மைக்கோ இடமில்லை.

இந்தப் பிரச்சினையின் பின்னர், அமைச்சர்களான ரவூப் ஹக்கீமோ ரிஷாத் பதியுதீனோ எம்முடன் தொடர்பு கொண்டு,  தங்களின் கருத்துகளை எமக்குத் தெரிவிக்கவில்லை.  மாறாக நாங்களாகவும் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் இல்லை.

எதிர்காலத்தில் எவருடன் பேசுவதாயினும் சரி, அவர்கள் முதலில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை பிரகடனப்படுத்திய பின்னரே எம்முடன் பேச வேண்டும்.

மேலும் எதிர்வரும் உள்ளராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து சுயேட்சைக் குழு ஒன்றை நாங்கள் களத்தில் இறக்கவுள்ளோம்.

அவ்வாாறு எமது சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களாக, முக்கியஸ்தர்களாக இருக்கக் கூடாது. அவர்கள் எமது குழுவில் போட்டியிட வேண்டுமாயின் தாங்கள் தற்போது அங்கத்துவம்  வகிக்கும் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்து விட்டு வரட்டும். பின்னர் அது தொடர்பில் தீர்மானிக்கலாம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்