சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல

🕔 November 5, 2017

– தராசு முள்ளர் –

சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கைப் போராட்டத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உருவ பொம்மையுடன் இணைத்து, அமைச்சர் றிசாட் பதியுதீனின் உருவ பொம்மையினை எரித்தமையில் எவ்வித நியாய தர்மங்களும் இல்லை.

சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆணையினை பெற்றுக்கொண்ட கட்சி எனும் வகையில், அந்த ஊருக்கான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவது, மு.கா.வின் பொறுப்பாகும் என்று கூறிய ஹக்கீமின் பொம்மையுடன் சேர்ந்து, சாய்ந்தமருது மக்களின் எவ்வித ஆணையினையும் பெற்றுக் கொள்ளாத, சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து ஒரு உள்ளுராட்சி சபை உறுப்பினரைக் கூட பெற்றுக் கொடுக்காத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீனின் உருவ பொம்மையினையும் எரித்தமையானது நேர்மையற்ற செயற்பாடாகும்.

“எனக்கு தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை” என்று கூறி, ஒருவர் தன் தந்தை மீது குற்றம் சுமத்த முடியும். அதே குற்றச்சாட்டினை பக்கத்து வீட்டுக்காரர் மீது சுமத்துவது நியாயமாகுமா.

சாய்ந்தமருது அரசியலைப் பொறுத்த வரையில், அந்த ஊர்காரர்கள் – ரஊப் ஹக்கீமை தந்தை போலும், றிசாட் பதியுதீனை பக்கத்து வீட்டுக்காரர் போலவுமே கடந்த காலங்களில் ஏற்று, அவர்களின் கட்சிகளுக்கு வாக்களித்திருந்தனர்.

ஒரு பிள்ளைக்கு தந்தை எந்த வசதிகளையும் செய்து கொடுக்கின்றான் இல்லை என்பதை அறிந்து கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், ‘அந்த வசதிகளை நான் செய்து தருகிறேன்’ என்று சொல்கிறார். ஆனால், பக்கத்து வீட்டுக்காரரையும் உதவி செய்யாமல், அந்தத் தந்தை தடுத்து விடுகின்றான். இந்த நிலையில், தந்தைக்கு பாடம் கற்பிக்க நினைக்கும்பிள்ளை, பக்கத்து வீட்டுக்காரருக்கும் சேர்த்து பாடம் கற்பிக்க நிலைப்பது புத்திசாலித்தனமாகுமா.

ஆனால், சாய்ந்தமருதிலுள்ளவர்கள், இந்தக் காரியத்தைத்தான் செய்திருக்கிறார்கள்.

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து அவர் வாயாலேயே, சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வழங்குவேன் என, றிசாட் பதியுத்தீன் வாக்குறுதி வழங்க வைத்தார்.

ஆனால், அதன் பிறகு சாய்ந்தமருதுக்கு வந்த ரஊப் ஹக்கீம்; “சாய்ந்மருது மக்களின் அதிகபட்ச ஆணையினை பெற்றவர்கள் நாங்கள்தான். அவர்களுக்கு நாங்கள்தான் உள்ளுராட்சி சபையினைப் பெற்றுக் கொடுப்போம். அதிலே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய நினைத்தால், அது – முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடத்தில் பலிக்காது. சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவோம் என்பது, மு.கா. தலைமை கொடுத்துள்ள வாக்குறுதியாகும். அதை நிறைவேற்றியே ஆகுவோம்” என்று சூழுரைத்து விட்டுப் போனார்.

அதாவது, “எங்களுக்கு அதிகபட்ச வாக்குகளை வழங்கிய மக்களுக்கு நாங்கள்தான் உள்ளுராட்சி சபையினை வழங்குவோம். அதை நீங்கள் செய்ய முடியாது” என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசிடமும் அமைச்சர் றிசாத் பதியுதீனிடமும் சாய்ந்தமருதில் வைத்துச் சொல்லி விட்டுச் சென்றிருந்தார் ரஊப் ஹக்கீம்.

அப்படியானால் – நீதி, நியாயம் மற்றும் தர்மங்களின் படி, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு ஹக்கீமுடையது இல்லையா? சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கிடைக்கவில்லை என்றால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர் ஹக்கீம்தானே?

சாய்ந்தமருது மக்களே. உங்களுக்குரிய கடமைகளைச் செய்யத் தவறிய ஒரு போக்கிரித்தனமான தகப்பனை மட்டும் தண்டிக்க வேண்டிய நீங்கள்….

உணர்ச்சிகளால் அறிவு மழுங்கிய நிலையில், உதவிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரரையும் சேர்த்துத் தண்டித்து விட்டீர்கள்.

இதற்காக, நீங்கள் வருத்தம் தெரிவித்தே ஆகவேண்டும். அதுதான் உங்களின் நல்ல குணத்தையும், நாகரீகத்தினையும் வெளிப்படுத்தும்.

ஹக்கீம் பேசிய வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்