சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வேண்டாமென கூறிய, பிரதியமைச்சர் ஹரீசின் நிதியை, வேறு பள்ளிவாசல்கள் கோருவதாக தகவல்

🕔 November 4, 2017

– அஹமட் –

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு பிரதியமைச்சர் ஒதுக்கீடு செய்த 15 லட்சம் ரூபா பணத்தினை ஏற்றுக் கொள்வதில்லை என, அந்தப் பள்ளிவாசல் நிருவாகம் அறிவித்துள்ள நிலையில், சாய்ந்தமருதிலுள்ள வேறு சில பள்ளிவாசல்கள் அந்த நிதியினை தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதியமைச்சர் தரப்பு இந்தத் தகவலை ‘புதிது’ செய்தித் தளத்திடம் தெரிவித்தது.

இந்த நிலையில், குறித்த பள்ளிவாசல் நிருவாகத்தினர் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அந்த நிதியினை வழங்குவேன் என பிரதியமைச்சர் அந்தப் பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கூறியுள்ளதாகவும் அந்தத் தரப்பு கூறியது.

பிரதியமைச்சரின் நிதியினை ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் வேண்டாமென அறிவித்ததன் பின்னர், சாய்ந்தமருதிலுள்ள வேறு பள்ளிவாசல் நிருவாகத்தினர், பிரதியமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் பிரதியமைச்சருக்கு எதிராக சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளபோதும், அதனை அந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், சாய்ந்தமருதிலிருந்து பலர் பிரதியமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் அவரின் தரப்பு மேலும் தெரிவித்தது.

எனவே, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் மேற்கொண்ட தீர்மானமானத்தினை, ஒட்டு மொத்த சாய்ந்தமருதின் தீர்மானமாக கருத முடியாது எனவும் பிரதியமைச்சர் தரப்பு சுட்டிக்காட்டியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்