தேசியப்பட்டியல் தேவையென்றால், சாய்ந்தமருது மக்களைப் போல், அட்டாளைச்சேனை களத்தில் இறங்க வேண்டும்

🕔 November 1, 2017

– ஹபீல் எம். சுஹைர் –

சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு பிரதேச சபை வேண்டும் என்பதற்காக வீதியில் இறங்கி மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தமை போன்று, அட்டாளைச்சேனை மக்களும் தமக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. தலைவர் வழங்க வேண்டும் என்று களத்தில் இறங்க வேண்டும்.

அட்டாளைச்சேனைக்குச் சொந்தமான தேசியப்பட்டியல், சல்மானுக்கு வழங்கப்பட்டு அதன் காலம் கரைந்து கொண்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆட்சிக் காலம் அரைவாசியைக் கடந்தும் விட்டது.

இருந்தாலும் மு.கா. தலைவர் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியமைக்கு இணங்க, அட்டாளைச்சேனைக்கு அந்தப் பதவியை கொடுப்பதாக இல்லை. அட்டாளைச்சேனை மக்கள் உரிய முறையில் கேட்பதாகவும் இல்லை.

அட்டாளைச்சேனை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற சம்மாந்துறையை சேர்ந்த மன்சூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவருக்கு அவரின் சொந்த ஊரான சம்மாந்துறையில் கூட அதிகமாக வாக்குகள் கிடைக்கவில்லை. தேசியப்பட்டியலை வழங்குவதாகக் கூறித்தான் அவருக்கு வாக்களிக்குமாறு மு.கா. தலைவர் ஹக்கீம் அட்டாளைச்சேனை மக்களிடம் கேட்டார். அப்படியில்லாது விட்டால், அட்டாளைச்சேனை மக்கள் வேறு தீர்வை நோக்கி நகர்ந்திருப்பார்கள்.

இந்த நிலையில், தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு, சாய்ந்தமருது மக்களைப் போன்று துணிந்து போராடும் திராணி அட்டாளைச்சேனை மக்களுக்கு இல்லையா? அட்டாளைச்சேனை மக்கள் துணியும் வரை, அந்த ஊரை ஹக்கீம் ஏமாளியாகவே பார்ப்பார். தற்போது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதில் என்ன தடை உண்டு எனத் தெரியவில்லை.

அட்டாளைச்சேனைக்கு வாக்குறுதியளித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹசனலி கேட்கின்றார் என்று ஹக்கீம் தரப்பு கூறியவுடன், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலில் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் கூடி, ஹசனலிக்கு தேசியப்பட்டியல் கொடுக்கக் கூடாது என்று, ஒற்றுமையாக முடிவெடுத்தனர்.

அப்படியென்றால், அதேபோன்று, பள்ளிவாசல் தலைமையில் ஒன்று கூடி, தங்களுக்கான தேசியப்பட்டியலை வழங்குமாறு கோரி, அட்டாளைச்சேனை மக்கள் ஏன் போராட்டமொன்றினை முன்னெடுக்கக் கூடாது.

உரிய முறையில் கேட்காத வரை, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கிடைக்கப் போவதில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்