நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

🕔 October 30, 2017
– ஏ.எல். நிப்றாஸ் –
மது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு வர்ணம்பூசி, அலங்கார சோடனைகள் செய்து,எப்படியாவது திருமணம் முடிந்துவிட்டால் போதும் என நினைப்பது போலிருக்கின்றது, இன்றைய முஸ்லிம் அரசியலின் போக்கு!

புதிய தேர்தல் முறைமையினாலும் உள்ள10ராட்;சி தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தாலும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படப் போகின்ற சிக்கல்கள், பிரதிநிதித்துவ இழப்புக்கள், பின்னடைவுகளை சரிசெய்வதற்கான மாற்று முயற்சிகளை மேற்கொள்ளாமல்,முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் அடுத்த தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருப்பதைப் போல ஒரு கேடுகெட்ட நிலைமை வேறொன்றுமில்லை.

முஸ்லிம் அரசியலைப் பொறுத்தமட்டில் இது வழக்கமான நடைமுறைதான். அதாவது,எந்தவொரு இமாலயப் பிரச்சினை ஏற்பட்டாலும், அதுபற்றி மூன்று வாரங்களுக்கு மேல் முஸ்லிம் சமூகம் வாதப் பிரதிவாதங்களை நடத்துவது கிடையாது. எவ்வாறான ஒரு பெரிய விவகாரம் என்றாலும் ஒரு மாதத்தில் முஸ்லிம்கள் மறந்து விடுவார்கள் என்பது அவர்களது அரசியல்வாதிகளுக்கும் தெரியும்,அந்த அரசியல்வாதிகளை வசியப்படுத்தி வைத்திருக்கின்ற ஆட்சியாளர்களுக்கும் தெரியும்.

இவ்வாறான ஒரு பண்பியல்பு தமிழர்களின் அரசியலில் என்றும் இருந்தது கிடையாது. ஒரு பிரச்சினை தீரும் வரை அதற்கான போராட்டத்தை அவர்கள் கைவிட்டதும் இல்லை. ‘அது போனால் போகட்டும்,நாம் அடுத்த வேலையைப் பார்ப்போம்’ என்ற தோரணையில் அவர்கள் அடுத்த காரியத்திற்குள் அடியெடுத்து வைப்பதும் இல்லை. தமிழர் அரசியலோடு முஸ்லிம்கள் ஒன்றித்துப் பயணித்திருந்தாலும் அதிலிருந்து கற்றுக் கொள்ளாத நிறைய விடயங்களுள் இதுவும் ஒன்று எனக் கூற முடியும். 

சட்டவாக்க முயற்சிகள்

நாட்டில் மிக அண்மைக்காலத்தில் பல சட்டவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, உள்ள10ர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் வந்தது. அதன் பின் மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் முன்னகர்த்தப்பட்டது.மிக, முக்கியமாக தேர்தல் முறைமை மாற்றப்பட்டது. கடைசியாக, அரசியலமைப்பை வரைவதற்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதில் 20ஆவது திருத்தம் மாத்திரமே கைவிடப்பட்டது. மற்றவை, முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

ஆனால், மேற்படி சட்ட மூலங்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். ‘முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தால் எதிர்ப்போம்’ என்ற தொனியில் அந்த அறிக்கைகள் இருந்தன. இவை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது,குரலில் கொஞ்சம் கடுமையை குறைத்து பேசினார்கள். ‘இதில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருக்கின்றது. எனவே இதனை சரிசெய்தால் அல்லது அதற்கான வாக்குறுதியை தந்தால் மாத்திரமே ஆதரவளிப்போம்’ என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறிநின்றனர்.

ஆனால், இவை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது எல்லோரும் ஏகமனதாக ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். ஏன் இவ்வாறு திடீரென நிலைப்பாட்டை மாற்றி ஆதரவளித்தீர்கள்? என்று கேட்டால், மழுப்பலான பல காரணங்களைமுஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்கின்றனர். குறிப்பாக, தேர்தல் முறைமை விடயத்தைப் பற்றிக் கேட்டால்,’நாங்கள் போராடி 50இற்கு 50 என்று மாற்றியிருக்கின்றோம் தானே. இது முஸ்;லிம்களுக்கு சாதகமானது தானே’ என்று முஸ்லிம் கட்சித்தலைவர்களும் எம்.பி.க்களும் சொல்கின்றனர்.

சரி,புதிய தேர்தல் முறைமைய முஸ்லிம்களுக்கு எவ்வாறு சாதகமாகும்? புதிய கலப்பு தேர்தல் முறையில் ஒற்றை வாக்குச்சீட்டில் வாக்களிப்பதிலும்,50;:50 அடிப்படையில் பிரதிநிதித்துவம் ஒதுக்கீடு செய்யப்படுவதிலும் இன்னபிற விடயங்களிலும் முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடிய இழப்புக்களுக்கு பரிகாரம் என்னவென்று அவர்களைக் கேட்டால்,அவர்களிடம் பதில் இல்லை.

ஆனால், இந்த அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்காமல் அல்லது அதற்கான காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ளாமல் தேர்தல் ஒன்றைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் பரவலாக மேற்கொள்ளப்படுவதைக் காண்கின்றோம். விரைவில் தேர்தலொன்று நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில்,முஸ்லிம் இளைஞர்கள் சிலர் தம்மை தாமே வேட்பாளர்களாக சுயபிரகடனம் செய்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தத் தேர்தல் முறையால் முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடிய பிரநிதிநிதித்துவ இழப்புக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள், அதிலுள்ள உள்ளரங்கங்கள் குறித்தோ சாதக பாதகங்கள் குறித்தோ பிராந்திய மட்டத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவும் இல்லை.

சிறுபிள்ளை அரசியல்

இவ்வாறான சூழலிலேயே சிலர் தாங்கள் அடுத்த தேர்தலில் குறிப்பாக உள்ள10ராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. அரசியலில் இருந்து சிலர் ஒதுங்கியிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், ஒரு சில இளைஞர்கள் இதில் ஆர்வமாய் இருப்பது நல்லதே என்றாலும்,இவர்களுள் அநேகர் ‘அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்’ என்ற வகையறாவைச் சேர்ந்தவர்களாகவே தெரிகின்றார்கள். அரசியல்பற்றி தெரியாமல், தேர்தல் முறைமை பற்றி அறியாமல், வெறும் ஆசையால் மட்டும் உந்தப்பட்டு வருபவர்களாகவே பலரை கணிக்க முடிகின்றது.

இப்போது என்ன தேர்தல் நடைபெறும் என்பது இன்னும் உறுதியில்லை. அதில் என்ன சின்னத்தில் போட்டியிடுவது (கூட்டாகவா தனித்தா?) என்று முஸ்லிம் கட்சிகள் அறிவிக்கவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இப்புதிய தேர்தல் முறைமையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்கையில், பிராந்திய, பிரதேச மட்டங்களில் கட்சிகள், ஆள்பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்,விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்படுவது போல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதும், முஸ்லிம் அரசியலின் பக்குவப்படாத தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு

இப்போது நாட்டில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு என்பதே மிகப் பிரதானமானது. இந்த நாட்டின் இனிவரும் பல தசாப்தங்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு அடிப்படை ஏற்பாடாக அது இருக்கும். இதில் நுட்பமான வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக முஸ்லிம்களுக்கு பாதகமான பல விடயங்கள் புகுத்தப்பட்டிருக்கின்றன என்பதை அரசியல் ஆய்வாளர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.

அந்த வகையில், இப்போது சொல்லப்படுகின்றன அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டினால் முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள், ஏகிய ராஜிய (ஒற்றையாட்சி) மற்றும் ஒருமித்த நாடு என்ற முரண்நகையான வார்த்தைப் பிரயோகங்கள், சுயநிர்ணயம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய சூழலில் சமஷ்டி வழங்கப்படுதல் மற்றும் அதனூடாக தனிநாட்டுக்கான சாத்தியங்கள், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம் என இடைக்கால அறிக்கையில் உள்ளடங்கியுள்ள ஏகப்பட்ட விடயங்களில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சமகாலத்தில், தேர்தலொன்று நெருங்கி வந்து கொண்டிருப்பதால் புதிய தேர்தல் முறையில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பாதகங்களை போக்குவதற்கு எல்லா அழுத்தங்களையும் கோரிக்கைகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்க வேண்டும். கட்டார் விஜயம் போல, கிடைக்கின்ற எல்லா சந்தர்ப்பங்களையும் தமக்காக அன்றி, முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

எல்லா விதமான சட்ட ஏற்பாடுகளுக்கும் ஆதரவாக கையை உயர்த்தி விட்டு,’ஒன்றைக் காட்டி ஒன்றை நிறைவேற்றி விட்டனர்’ என்றும் ‘கண்ணை திறந்துகொண்டே குழியில் விழுந்துவிட்டோம்’ என்றும் சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைவிடுவதும்,’அந்த அரசியல்வாதி பிரமதரின் காதுக்குள் எதையோ சொல்லி விட்டார். ஆதலால் நாமும் ஆதரவளிக்க வேண்டியதாய் போயிற்று’ என்று கற்பிதம் கூறுவதையும் முதலில் நிறுத்த வேண்டும்.

அத்துடன், இந்த நாட்டில் முஸ்லிம்களின் எல்லா விவகாரங்களையும் ஹக்கீமும் றிசாட்டும் மட்டுமே கையாள வேண்டும் என்றும், பைசர் முஸ்தபாவும் ஏனைய 18 எம்.பி.க்ளும் பார்வையாளராக இருந்துவிட்டுப் போகலாம் என்ற தோரணையில் செயற்படுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. எனவே, புதிய தேர்தல் முறைமையில் உள்ள முரண்பாடுகளை எவ்வாறு களைவது என்பது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

தேர்தல் அறிவிப்புக்கள்

எந்தவொரு தேர்தல் தொடர்பாகவும் அறிவிப்பதற்கான உத்தியோகபூர்வ அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவும் அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுமே பெற்றிருக்கின்றனர். அரசியல்வாதிகள் அதுபற்றி அறிவிக்க இயலாது. ஆனால், அண்மைக்காலத்தில் இதோ தேர்தல் நடைபெறப் போகின்றது என்ற பாணியிலான அநேக அறிவிப்புக்களை அரசாங்க தரப்பினரே வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையாளர் விசனத்தையும் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் எல்லாத் தேர்தல்களையும் ஒத்திப் போடுவதையே பெரிதும் விரும்பியது. ஆனால்,அது சாத்தியமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றமை கண்கூடு. உடனடியாக உள்ள10ராட்சி சபை மற்றும் மாகாண சபை தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம், மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கு முன்னதாக தேர்தல் ஒன்றை நடாத்தி ஜனநாயகத்தின் ஆளுகை நாட்டில் இருப்பதையும் மக்கள் ஆணை தமக்கிருப்பதையும் சர்வதேசத்திற்கு குறிப்பால் உணர்த்த வேண்டிய தேவையும் ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது. எனவேதான், தேர்தல் குறித்த அறிவிப்புக்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன எனலாம்.

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி, தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக மாகாண எல்லைகளை மீள்நிர்ணயம் செய்ய வேண்டியிருப்பதால் இன்னும் சில மாதங்கள் தாமதமாகலாம். ஆனால், இச்சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது பிழையானது என்ற விதத்தில் தீர்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், நிலைமைகள் தலைகீழாக மாறலாம். மாகாண சபை தேர்தலையும் காலகெதியில் நடத்த வேண்டி வரலாம்.

எது எவ்வாறிருப்பினும் இன்றைய நிலவரப்படி முதலில் உள்ள10ராட்சி தேர்தலை நடாத்துவதற்கே அரசாங்கம் தயாராகி வருவதை அவதானிக்க முடிகி;ன்றது. அந்தவகையில் ஜனவரி 27ஆம் திகதி உள்ளுராட்சி தேர்தல் நடைபெறலாம் என்று அரசாங்க தரப்பினர் கூறியுள்ளனர். எனவே,எந்தத் தேர்தல் நடந்தாலும் தேர்தல் முறைமையின் செல்வாக்கும் தாக்கமும் இருக்கும் என்பதால், அது குறித்து முஸ்லிம் கட்சித் தலைவர்களும் எம்.பிக்களும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

புதிய தேர்தல் முறைமை

இந்தக் காலகட்டத்தில், புதிய தேர்தல் முறையால் முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடிய சாதக பாதக நிலைகள், இது முஸ்லிம்கள் சிறுதொகையாக வாழும் இடங்களிலும் எவ்வாறான பெறுபேறுகளை பெற்றுத் தரும் என்பது குறித்த விடயங்கள், அதேபோல், இதனால் சிறு கட்சிகளும் சிறுபான்மைச் சமூகமும் பலமிழப்பதற்கு ஏதுவான நிலைமைகள் குறித்தெல்லாம் விரிவாக ஆராயப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இங்கு இரண்டு தேர்தல் முறைமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். முதலாவது,விகிதாசாரமும் தொகுதியும் முறை. இரண்டாவது, விகிதாசாரத்திற்குள் தொகுதி என அழைக்கப்படும் (எம்.எம்.பி.) முறையாகும். இலங்கையில் 2015ஆம் ஆண்டு தேர்தல் முறை மறுசீரமைப்பை கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்தது. அப்போது கொண்டுவரப்படவிருந்த முறைமை முதலாவது வகையாகும். ஆனால் இப்போது, கொண்டுவரப்பட்டுள்ளது கலப்பு முறை என்று சொன்னாலும் அது உண்மையில் விகிதாசாரத்திற்குள் தொகுதி என்றே அழைக்கப்பட வேண்டுமென அரசியல் நோக்கர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் பின்பற்றப்படும் முறையை ஒத்த இப்புதிய தேர்தல் முறையின் படி வழக்கமான விகிதாசார முறை போலவே வாக்கு எண்ணும் நடவடிக்கையும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான ஆசனங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் நடைமுறையும் மேற்கொள்ளப்படும். ஒரு கட்சிக்கான ஆசன ஒதுக்கீடு செய்யும் போதே இந்த கலப்பு முறை கேட்பாடு நடைமுறையில் பிரயோகிக்கப்படும் என்று கூறப்படுவதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.

அதாவதுஒரு மாவட்டத்தில் ஒரு கட்சிக்கான ஆசனங்கள் 5 என கணிப்பிடப்பட்டுள்ளதாக எடுத்துக் கொள்வோம். அப்படியாயின், அந்தக் கட்சி குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்குமாயின் அந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். மீதமுள்ள 2 பேரும் அந்தக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் இருந்து அல்லது பட்டியலில் இருந்து (தேசியப்பட்டியல் மாதிரி) செயலாளரினால் நியமிக்கப்படுவார்கள் என அறிய முடிகின்றது.

இந்நிலையில், தொகுதிக்கும் விகிதாசாரத்திற்கும் இடையிலான  விகித அடிப்படை 50இற்கு50 ஆக இருந்தாலும் 60இற்கு 40ஆக இருந்தாலும் கட்சி ரீதியான உறுப்புரிமையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே இருக்கும். ‘ஓவர்ஹேங்’ மற்றும் ‘திரெஸ்ஹோல்ட்’ போன்ற விஷேட சந்தர்ப்பங்கள் ஏற்படாதவிடத்து, மொத்த உறுப்பினர்களில் எத்தனை பேர் தொகுதி வெற்றியாளராக நியமிக்கப்படுவார்கள் என்பதையும் எத்தனைபேருக்கு பட்டியலில் அதிஷ்டம் கிடைக்கும் என்பதையுமே இந்த 50:50 அல்லது 60:40 தீர்மானிக்கும். இதுவே பாராளுமன்ற தேர்தலில் எம்.பி.க்கள் ஒதுக்கீட்டிலும் பின்பற்றப்படும். எனவே, தாங்கள் போராடி 50:50 பெற்றதாக மார்தட்டி சந்தோசப்படத் தேவையில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தென்பகுதியில் பாதிப்பு-இந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் சாதக பாதகங்களை ஆராய முடியும். குறிப்பாக முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாகாணம் போன்ற இடங்களில் இந்தத் தேர்தல் முறை இல்லாமல் இதைவிடச் சிக்கலான தேர்தல் முறை வந்தாலும் முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் குரல் கொடுப்பது தென்னிலங்கை முஸ்லிம்களுக்காகவே என்பதை புரிந்து கொள்வதும் அவசியம்.

அதாவது,தென்பகுதியில் முஸ்லிம்கள் சிதறுண்டு வாழ்வதால் அங்கெல்லாம் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகள் உருவாக்கப்படுவது சாத்தியமில்லை. ஓரளவுக்கு இப்போதிருக்கின்ற அடிப்படையிலேயே தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்படும். இந்நிலையில், சிங்கள பெரும்பான்மை தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை பெருந்தேசியக் கட்சிகள் நிறுத்தாது. நிறுத்தினாலும் வெற்றிபெறுவது கடினம். பெற்றிபெறாத முஸ்லிம் வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதும் சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வழிவகுக்கும். எனவே,விகிதாசாரத்திற்கான பட்டியலின் மூலமே முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஆகவே, முஸ்லிம்களுக்குஅதிகப்படியான தொகுதிகளும் இல்லாமல் அந்த தொகுதிகளில் பெரும்பான்மைக் கட்சியூடாகவோ முஸ்லிம் கட்சியூடாகவோ வெற்றிபெறுவதும் குதிரைக் கொம்பாக இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், புண்ணியத்தில் கிடைக்கும் பட்டியல் பிரதிநிதித்துவங்களை நம்பிக் கொண்டிருப்பதால் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. இதனால் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் கணிசமாக குறைவடையும்  வாய்ப்புள்ளது. இதனை 50:50 சூத்திரத்தால் ஈடுசெய்ய முடியாது.

எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும். இதற்கு பரிகாரங்களில் ஒன்றாக இரட்டை வாக்குச் சீட்டு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று முஸ்லிம் அரசியல் செயற்பாட்டாளர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் தொகுதியில் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க ஒரு வாக்கும், (விகிதாசார பட்டியலுக்காக) விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க ஒரு வாக்கும் பிரயோகிக்கப்படும். இதில் முதலாவது வாக்கை ஒரு கட்சிக்கும் இரண்டாவதை வேறு கட்சியின் வேட்பாளருக்கும் (குறுக்கு வாக்களிப்பு) அளிக்கும் நடைமுறையும் உள்ளது.

எது எப்படியோ, தேர்தல் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி,தடபுடலாக வேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, புதிய தேர்தல் முறையால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக நடவடிக்கை எடுப்பது அவசரமானது.

கல்யாணக் களியாட்டத்தை விட, நோயை தீர்ப்பது முக்கியமானதில்லையா?

நன்றி: வீரகேசரி (29.10.2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்