இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக, தேசிய காங்கிரசின் பாலமுனை பிரகடனத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

🕔 October 30, 2017

– மப்றூக் –

ரசியலமைப்பின் நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை, தாம் முற்றாக நிராகரிப்பதாக, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாலமுனை பிரகடனத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘பாலமுனை பிரகடனம்’ எனும் பெயரில், தேசிய காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை பொது விளையாட்டு மைததானத்தில் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் இறுதியில், தற்போதுள்ள அரசியல் விவகாரங்களை முன்னிறுத்தி, 05 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய காங்கிரசின் கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், குறித்த தீர்மானங்களை மக்கள் முன்னிலையில் வாசித்தார். அந்த தீர்மானங்களின் விபரங்கள் வருமாறு;

1. அரசியலமைப்பின் நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தல்.

2. எனவே, அரசாங்கத்தின் இடைகால அறிக்கை மீளப்பெறப்பட வேண்டும். அது எவ்வகையிலும் சட்டமாக்கப்படக் கூடாது. எல்லா சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான அரசியல் முறைமையொன்றைக் கருத்தில் கொண்டு, நமது நாட்டின் மூவினத்தினதும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கலந்து பேசி, தற்போதைய நமது அரசியல் யாப்பில் சில திருத்தங்களை மாத்திரம் செய்து, அவற்றினை சாத்தியப்படுத்த முடியும்.

3. புதிய திருத்தங்களாக பின்வரும் விடயங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும்.- இன, மத, மொழி நல்லிணக்கம் தொடர்பான விசேட ஏற்பாடுகள்.

– சிறுபான்மை மக்களின் உரிமை, நலன், பாதுகாப்பு தொடர்பான எச்செய்கைளும் பாரபட்சமாக கருதப்படலாகாது.

– சிறுபான்மை மக்களுக்கு ஆகக்குறைந்தது, மாவட்ட இன விகிதாசார அடிப்படையிலான காணி உள்ளிட்ட வளப் பகிர்வு

– பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், ஏனைய மதங்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தற்போதைய ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, சகல நிர்வாக மாவட்டங்களிலுமுள்ள இன, மத, மொழி பரம்பல் விகிதாசாரத்துக்கு அமைவாக, அங்குள்ள பெரும்பான்மைக்கு அவ்வந்த மட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.

– இனங்களுக்கிடையிலான குரோதப் பேச்சுகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள்.

– சட்டங்களின் நீதிமுறை மீளாய்வு.

– பொதுநல அக்கறை வழக்காட்டலுரிமை.- மக்களுக்கு அருகில் அதிகாரம் கொண்டுவரப்பட்டு, உள்ளுராட்சி அதிகார சபைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். காணி சட்டம், ஒழுங்கு விவாகாரங்கள் உள்ளுராட்சி அதிகார சபைகளின் இணக்கங்களோடு அமுல்படுத்துவதற்கான பொறிமுறையொன்றினை உருவாக்குதல்.

– சிறுபான்மை மக்களின்  உரிமை, நலன், பாதுகாப்பு தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள், சிறுபான்மை மக்களின் பொதுசன அபிப்பிராயம் பெறப்படாமல் மாற்றப்படக் கூடாது.

04. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்ற முறைமைக்கு புறம்பாக நிறைவேற்றப்பட்டதாலும்,  மக்கள் பிரதிநிதிகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பதாலும், அந்த சட்டத்தை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும்.05. சிறுபான்மை மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள், குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதிநிதிகள் மேற்சொன்ன நான்கு தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக செயற்பட வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்