அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு

🕔 October 28, 2017
– அகமட் எஸ். முகைடீன் –

க்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை இருவார காலத்திற்குள் நிவர்த்திக்குமாறு ஒப்பந்தகார நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பணிப்புரைவிடுத்துள்ளார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குறித்த நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை பார்வையிட்டு அவற்றை நிவர்த்திப்பதற்கும் பாடசாலை மைதானத்தின் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான அமைச்சின் உயர்மட்டக் குழு, இன்று சனிக்கிழமை நேரடி விஜயம்செய்தபோது மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின்போது விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளர் சம்பத் திசாநாயக்க, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், பாடசாலை அதிபர் அஸ்-ஷேஹ் யு.எல். மன்சூர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை பார்வையிட்டு அதற்கான தீர்வினை வழங்க உத்தரவிட்டதோடு, பாடசாலை விளையாட்டு மைதானத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து தருவதாகவும் பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் பாடசாலைக்கான பேன்ட் வாத்தியக் கருவிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்குமாறு அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் ஹரீஸ், கடின பந்து விளையாட்டு உபகரணங்களையும் பேன்ட் வாத்தியக் கருவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு குறித்த நீச்சல் தடாகத்தின் மூலம் பிரதேச மாணவர்கள் நன்மையடையும் வகையிலான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், நீச்சல் தடாக பராமரிப்பை உரியமுறையில் மேற்கொள்வதற்குமான ஆலோசனைகளை விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்ப பிரிவினர் இதன்போது வழங்கினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்