அஷ்ரஃபின் மரணம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் ஒளித்து விளையாடுவதாக பசீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

🕔 October 16, 2017

முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, உண்மையைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரி, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்திருந்த  முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், இன்று திங்கட்கிழமை, ஆணைக்குழு முன்னிலையில் வாய்மொழி மூலமான விளக்கமொன்றினை வழங்கினார்.

அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை வெளியிடுமாறு கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகத்துக்கு பசீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றினை சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்தார்.

ஆயினும், குறித்த அறிக்கையானது தேசிய சுவடிக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,  தற்போது அந்த அறிக்கையினை தேடிப் பெற முடியாதுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து பசீருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு பசீர் மேன்முறையீடு செய்திருந்தார்.

இதற்கிணங்க, குறித்த ஆணைக்குழு, அழைத்தமைக்கு அமைவாக, இன்றைய தினம் அங்கு சென்ற அவர், வாய்மொழி மூல விளக்கமொன்றினை வழங்கினார்.

இது குறித்து பசீர் சேகுதாவூத் தெரிவிக்கையில்;

“ஜனாதிபதி செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிச் செயலாளர் ஒருவர் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று வந்திருந்தார். அவர் ஆணைக்குழு உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில்; அந்தக் ‘கோவை’ தேசிய சுவடிக் கூடத்துக்கு 2007 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், சேகுதாவூதின் விண்ணப்பத்துக்கு பதிலனுப்புவதற்காக, அந்தக் கோவையை மீண்டும் சுவடிக் கூடத்திடமிருந்து ஜனாதிபதி செயலகம் பெற்றது. ஆனால், அந்தக் கோவைக்குள் உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அறிக்கை இருக்கவில்லை என்று, பிரதிச் செயலாளர் சட்ட நுணுக்கத்தோடு அங்கு பதிலிறுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் எனது விண்ணப்பத்தை நிராகரித்து அனுப்பிய கடிதத்தில், அவ்வறிக்கையைத் தங்களால் தேடி எடுக்க முடியவில்லை என்றுதான் கையை விரித்திருந்தார். பின்னர் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு நான் நேரடியாக மேன்முறையீடு செய்தேன்.

மேன் முறையீட்டையொட்டி ஜனாதிபதி செயலகத்திடம் ஆணைக்குழு எழுத்து மூலம் விளக்கம் கேட்டது. ஆணைக்குழுவுக்கு விலாசமிட்டும் எனக்குப் பிரதியிட்டும் செயலகம் அனுப்பிய பதில் கடிதத்தில், தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் தங்களுக்கு அனுப்பிய ‘கோவையில்’ அறிக்கை காணப்படவில்லை. ஆதலால் அறிக்கையை வழங்க முடியாதிருக்கிறது என்று கூறி, வெற்றுக் கோவை விளையாட்டை ஆடியிருந்தது.

ஜனாதிபதி செயலகமும், தேசிய சுவடிக்கூடத் திணைக்களமும் இணைந்து அஷ்ரஃபின் மரணத்துக்கான காரணத்தை பகிரங்கப்படுத்துவதைத் தடுப்பதற்காக, ஒழித்து விளையாடுவதை அனுமானிப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் குறைந்தது 30 வருடங்களுக்குக் கட்டாயமாக ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று, சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

2007 இல் அறிக்கைக் கோவை சுவடிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் ஒத்துக்கொள்கிறது. ஆக, அந்த அறிக்கையை சுவடிக் கூடம் பெற்று பத்து வருடங்கள்தான் கடந்திருக்கிறது. சட்டப்படி இன்னும் 20 வருடங்களுக்காயினும் திணைக்களம் இவ்வறிக்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும்.

சட்ட நுணுக்கத்தைப் பாவித்து எங்கள் தலைவனின் மரணத்துக்கான காரணத்தை மண் போட்டு மூடுவதற்கு நினைத்தால், அதே சட்டத்தால் ‘கிண்டி’ வெளியில் எடுத்து குற்றவாளிகளின் தோள்களில் போட்டு, அவர்களை வெய்யிலில் நிற்க வைத்து உலர வைப்போம்” என்றார்.

ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில், விசாரணையை நொவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் நடத்துவது என்றும், அன்றைய தினம் தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியை விசாரணைக்கு அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்