கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

🕔 October 16, 2017

– அஹமட் –

திகாரிகளின் அலட்சியம் காரணமாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று அடியுடன் சரிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அக்கரைப்பற்று பிரதான வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த மரமொன்று, வீழும் நிலையில் இருந்துள்ளது. எனவே, குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் அதன் மூலம் திடீரென மரம் வீழும் போது ஏற்படும் ஆபத்துக்களை முன்கூட்டியே தடுக்குமாறும் கோரி, அங்குள்ள சிலர் இணைந்து அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்த போதும், யாரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர், அக்கரைப்பற்று பிராந்திய மின் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆகியோருக்கு மேற்படி எழுத்து மூலமான கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தும், அவர்கள் அனைவரும் இது தொடர்பில் பாராமுகமாகவே இருந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த மரம் இன்று திங்கட்கிழமை பிரதான வீதிக்குக் குறுக்காக வீழ்ந்துள்ளது. இதனால், இரண்டு கடைகள் இயங்கி வந்த கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, மின்சார கம்பிகளும் எரிந்துள்ளன.

சம்பந்தப்பட்ட மரத்தினை உரிய நேரத்தில் வெட்டி அகற்றியிருந்தால், இந்தளவு விபரீதம் ஏற்பட்டிருக்காது.

இதேவேளை, மேற்படி மரம் வீழ்வதற்கு முன்னராக அக்கரைப்பற்றினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எல். நிப்றாஸ், பல அதிகாரிகளுடன் பேசியதாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அடுத்தவர் மீது பொறுப்புகளைச் சுமத்தி விட்டு, தாம் கழன்று கொண்டதாகவும் புதிது செய்தித்தளத்திடம் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இது பற்றி மாநகர ஆணையாளருக்கு இன்னுமொருவா் ஊடாக நான் தெரியப்படுத்தினேன். ஆனால், மரம் விழுந்த பிறகு சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்வதுதான் மாநகர சபைக்குரிய வேலை என்று கூறப்பட்டது.

இன்று திங்கட்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் சக்கியை தொடர்பு கொண்டு மரம் விழலாம் என்பதைத் தெரியப்படுத்தினேன். அவர் ஆணையாளருக்கு தெரிவித்ததாகவும், ஆணையாளர் பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் முன்னாள் மேயர் கூறினார்.

மேலும், மரத்தை வெட்டி அகற்றுவது வீதி  அபிவிருத்தி அதிகார சபைக்குரிய பொறுப்பாகும் என்றும் சொல்லப்பட்டது.

இதனையடுத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று அலுவலக்தின் 067 2279151 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு, பொறியியலாளருடனும் நிறைவேற்று பொறியியலாளருடனும் பேசினேன்.

மரம் விழுந்த பிறகே தமது பணி ஆரம்பிக்கும் என்று நிறைவேற்று பொறியியலாளா் என்னிடம் சொன்னார். மரத்தை தறிப்பது வனபரிபாலன திணைக்களத்தின் பணியெனவும், அவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

இவ்வாறு பொறுப்பு வாய்ந்தவா்கள் சாட்டுச் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் மரம் விழுந்து விட்டது. இவர்களில் யாராவது கொஞ்சம் முன்கூட்டி நடவடிக்கை எடுத்திருந்தால் சேதங்களைத் தடுத்திருக்கலாம்” என்றார்.

எது எவ்வாறாயினும், மேற்படி அனர்த்தத்துக்கு அனைத்து அதிகாரிகளும் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும்.

மட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த அதிகாரிகளிடமிருந்து நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேவேளை, இதனால் உயிரிழப்புகள் எவையும் ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பு எனவும் பொது மக்கள் கேட்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்