வடக்கு – கிழக்கு விவகாரத்தில், அலட்டிக்கொள்ள மாட்டோம்: ஹக்கீம் தெரிவிப்பு

🕔 October 15, 2017

டக்குடன் கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நிகழ்வொன்று, காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்ற போது, மு.கா. தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தேவையற்ற கருத்துகளை சிலர் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக்கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர். அதனை வைத்து மக்கள் மத்தியில் சிலர் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் தொடர்பான புரிதல் இருக்க வேண்டும். சாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கின்ற தரப்புகளின் தலைமைகளுக்கு வடகிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்தின் சாத்தியப்பாடு சம்பந்தமாக என்ன தெரியும் என்கின்ற விடயம் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நாட்டிலே இருக்கின்ற தெளிவான அரசியல் ஞானம் இருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான் அரசியல் யாப்பு சொல்கின்ற விடயம். முஸ்லிம் காங்கிரஸினுடைய நிலைப்பாடு என்னவெனில் நாங்கள் இணைப்பு, பிரிப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

நாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப்போவதுமில்லை, சிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்படவேண்டிய அவசியமுமில்லை. தமிழர்களுக்கு நல்லவை எவையும் நடப்பதை எங்களை பாவித்து சிங்கள சமூகம் தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரு நடுநிலையான சமூகம்.

ஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைவது என்றால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களின் அபிப்பிராயங்களை கேட்காமல் செய்யமுடியாது. நாடாமன்றத்தின் பெரும்பான்மையில்லாமல் மாகாணங்கள் இணையமுடியாது. இது அரசியல் யாப்பில் உள்ள விடயம். இவ்வாறு இருக்க, அதனை வேறு வகையில் சொல்லி பீதியை கிளப்ப சிலர் முயல்கின்றனர்.

வடக்கு கிழக்கை இணைப்பது என்றால், முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையுமாகும். அதில் இருந்து நாங்கள் மாறவில்லை. இணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கின்றது. அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும்.

சர்வதேசம் வந்து வலுக்கட்டாயமாக வடகிழக்கினை இணைத்துவிட்டு எங்களை நட்டாற்றில் விட்டுவிடும் என சிலர் கருதுகின்றனர். தமிழ் தேசிய தலைமைகளுக்கும் தெரியும் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் அது சாத்தியமில்லையென்று. அவர்கள் மிக தெளிவாக கூறுகின்றனர்.

நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர். எனக்கு பொறுப்புணர்ச்சி இருக்கின்றது. தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதில் அர்த்தமில்லை. சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுக்கமுடியாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்