மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும்

🕔 October 11, 2017

– மரைக்கார் –

‘இலவு காக்கும் கிளி’ என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் இருந்து, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனை பிரதேசம் எதிர்பார்ப்பதைக் கூறலாம்.

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கக் கூடாது என்பதற்காகத்தான், அந்த ஊரைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நசீருக்கு (இப்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) மாகாண சுகாதார அமைச்சுப் பதவியினை ஹக்கீம் பெற்றுக் கொடுத்தார்.

இப்போது கிழக்கு மாகாணசபை கலைந்ததும், தனது ஆதரவாளர்களுடன் சென்று, ஹக்கீமை நசீர் சந்தித்தித்து தேசியப்பட்டிலைக் கேட்டதாக அறிய முடிகிறது.

நசீர் – மாகாணசபை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், அட்டாளைச்சேனையில் உள்ள மு.கா. பிரமுகர் ஒருவர் ஹக்கீமுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, நசீருக்கு தேசியப்பட்டில் வழங்கப்படுமா என்று கேட்டிருந்தார். அப்போது, “நசீருக்கு தேசியப்பட்டியலா” என்று கேட்ட ஹக்கீம், நக்கல் பாணியில் சத்தமாகச் சிரித்ததாக, சம்பந்தப்பட்ட மு.கா. பிரமுகரே நம்முடன் அப்போது கூறிவிட்டு, “நசீருக்கு ஹக்கீம் தேசியப்பட்டில் கொடுக்க மாட்டார்” என்று நம்மிடம் அடித்துக் கூறியிருந்தார்.

ஹக்கீம் எப்போதும் போலிக் கௌரவத்தைக் கடைப் பிடிப்பவர். கீழ் மட்ட போராளிகளை ஒரு மட்டத்துக்கு மேல், தன்னை நெருங்க அவர் அனுமதிப்பதில்லை. ஹக்கீமை மிக நுட்பமாக தெரிந்தவர்கள், இதனை அறிவார்கள். அதேபோன்றுதான்,  ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தான் இருக்கும் நிலையில், அதே போன்றதொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை – தனது கட்சி சார்பில், ஒருவர் வகிப்பதென்றால் அவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் ஹக்கீமிடம் உள்ளது. அநேகமாக கறுப்புக் கோட் அணியும் சட்டத்தரணிகள் மற்றும் ஆங்கிலத்தை சரளமாகப் பேசுபவர்களை ஹக்கீம் இதற்காக தேர்வு செய்வதுண்டு.

இந்த வகையில் பார்க்கும் போது, தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஹக்கீமுடைய பார்வையில் நசீர் பொருத்தமற்றவராவார்.

ஆனால், அட்டாளைச்சேனையில் நசீரைத் தவிர்த்து வேறு யாருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ஹக்கீம் வழங்கப் போவதுமில்லை என்பதையும், இந்த இடத்தில் குறித்துச் சொல்ல வேண்டும்.

தற்போதைய நிலையில் அட்டாளைச்சேனைக்கான  தேசியப்பட்டியல் குறித்து நமது பார்வை இவ்வாறிருந்த போதும், ஒரு சில அசாதாரண சூழ்நிலையில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் தீர்மானத்துக்கு ஹக்கீம் வரக்கூடும். அப்போது அந்தப் பதவி நசீருக்கே கிடைக்கும்.

அந்த சந்தர்ப்பங்கள் என்ன?

01) முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாகி, அதன் செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெறும் போது, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை ஹக்கீம் வழங்கலாம். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஓரளவாயினும் உயிர்த்துடிப்புடன் உள்ளது என்றால், அது அட்டாளைச்சேனையில்தான். மற்றைய பிரதேசங்களில் நிலைமை பாடுகேடாகும். எனவே, அட்டாளைச்சேனைக்கு – அதுவும் நசீருக்கு தேசியப்பட்டியலை வழங்கினால்தான், அந்தப் பிரதேசத்தையாவது தக்க வைக்கலாம் என்று ஹக்கீம் நினைக்கலாம்.

02) வடக்கு – கிழக்கை இணைப்பதற்கு ஆதரவான சமிக்ஞையினை அண்மைக் காலமாக ஹக்கீம் காட்டி வருகின்றார். முஸ்லிம்கள் மத்தியில் இதற்கு ஆதவு கிடைக்காது. உண்மையாகவே, வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஹக்கீம் ஆதரவு தெரிவித்தால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், கடுமையான எதிர்ப்புக் கிளம்பும். அந்த சமயத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை ஹக்கீம் வழங்கக் கூடும்.

ஆயினும், இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலம் தற்காலிகமாக தனது நெருங்கிய நண்பர் சல்மானிடம் கொடுத்து வைத்திருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்று, அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கு ஹக்கீம் நினைத்தாலும், அதனை வைத்திருக்கும் சல்மான் ராஜிநாமா செய்து கொடுப்பாரா என்கிற சந்தேகமும் ஒருபுறம் உள்ளது.

இன்னொருபுறம், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரும், மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் –  கண் வைத்துள்ளதாகவும் ஒரு கதை உலவுகிறது. அநேகமாக ஹாபீஸ் நசீர் இவ்வாறு ஆசைப்படும் பதவிகளை, ‘எப்படியாவது’ பெற்றெடுப்பதில் கெட்டிக்காரர் என்கிற பேச்சு பரவலாக உள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஆகியவற்றையெல்லாம் ஆசைப்பட்டவுடன் ஹாபீஸ் நசீர் அடைந்து விட்டார்.

இலங்கையிலுள்ள  பெருங் கோடீஸ்வரர்களில் ஹாபிஸ் நசீரும் ஒருவர் என்பதை நாம் அறிவோம். பணம் பாதாளம் வரை பாயும் என்பதையும் நாம் அறியாமலில்லை.

எனவே, மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹாபீஸ் நசீர் பெற்றெடுப்பதற்கான சந்தர்ப்பமும் உள்ளது.

அதற்காக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்  ஏ.எல்.எம். நசீரை, ஹாபீஸ் நசீர் சமரசப்படுத்தி சந்தோசமும் படுத்தக் கூடும். ஹாபீஸ் நசீரின் சந்தோசத்தில் திளைக்கும் அட்டாளைச்சேனை நசீர், “எனக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி  வேண்டாம், கட்சியின் நன்மைக்காக அதை, பிரதித் தலைவர் ஹாபீஸ் நசீருக்கு வழங்கச் சம்மதிக்கிறேன்” என்று கூறி, தியாகியாகவும் மாறலாம்.

பிறகென்ன, அட்டாளைச்சேனை நசீர் – தேசியப்பட்டிலை வேண்டாம் என்று கூறியதற்கும், ஹாபீஸ் நசீருக்கு தேசியப்பட்டியலை வழங்கியதற்கும் நியாயங்களைக் கூறி, மு.கா. தலைவர் ஹக்கீமுடைய போராளிகள் பேஸ்புக்கில் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருப்பார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்