முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும்

🕔 October 7, 2017

– பசீர் சேகுதாவூத் –

ல்லாட்சியமைந்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் நான்கு செயலமர்வுகளை நடாத்தியுள்ளது.

மட்டக்களப்பு நட்சத்திர ஹோட்டலில் நடந்த முதலாவது செயலமர்வில் அரசாங்க சார்பு நிலைப்பாடு கொண்ட விரிவுரையாளர் ஒருவரும், தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணருமான சுமந்திரனும் வளவாளர்களாகப் பங்கு கொண்டிருந்தனர்.

விளையாட்டு அமைச்சின் மண்டபத்தில் இடம் பெற்ற இரண்டாவது அமர்வில் பிரதானமாக ஒரு வெளிநாட்டு நிபுணர் வளவாளராகப் பங்கு பற்றியிருந்தார், அமைச்சர் மனோ கணேசனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கொழும்பு அஞ்சலக மண்டபத்தில் நடந்த செயலமர்வில் அமைச்சர் மனோவும், அரசாங்கம் சார்பான அரசமைப்பு நிபுணரொருவரும் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

நான்காவதாக கடந்த ஐந்தாம் திகதி தாருஸ்ஸலாம் அரங்கில் இடம்பெற்ற அமர்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாப்பமைப்பு நிபுணருமான ஜயம்பதியும், மனோ கணேசனும் பங்கு கொண்டு உரையாற்றினர்.

கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்கு கொண்ட இந்த நான்கு செயலமர்வுகளிலும் கட்சியின் தலைவர் ஹக்கீம் சிறப்புரையாற்றினார்.

முதல் மூன்று அமர்வுகளும் அரசமைப்புக்கான வழிகாட்டல் குழு, இடைக்கால அறிக்கையை அரசியலமைப்புப் பேரவைக்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இடம்பெற்றன.

வியாபாரம்

இவ்வமர்வுகளில், முஸ்லிம் சமூகம் சார்பான எழுத்து மூல விதந்துரைகளை வழிகாட்டல் குழுவுக்குக் கட்சி சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் கருத்துக்களை முக்கிய உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்ளப்படவில்லை. பதிலாக, அரசமைப்பு தொடர்பில் அரசாங்கத்தினதும் தமிழரசுக் கட்சியினதும் திட்டங்களை இவ்வுறுப்பினர்களுக்கு ஊடாகவும், ஊடகங்களுக்கூடாகவும் முஸ்லிம் மக்களுக்குள் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இம் மூன்று செயலமர்வுகளும் நடத்தப்பட்டன.

நீதிமன்றத் தீர்ப்பினால் நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாது போன 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரம் வழங்கியதனாலும், நிறைவேற்றப்பட்ட மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்கியமையாலும், வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ள சூழலில்,  எழுத்து மூல விதந்துரைகள் எதையும் வழிகாட்டல் குழுவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்திருக்கவில்லை என்கிற துரோகம் பகிரங்கப்பட்டிருப்பதாலும், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப்படலாம் எனும் கதையாடல் பரவியமையால் கிழக்கு முஸ்லிம் மக்களுக்குள் ஒரு விதப் பதட்டம் தொற்றியிருப்பதாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் தலைவர் மீதும் கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் ஏகோபித்த கோபத்தில் வன்மம் தீர்க்கக் காத்திருக்கின்றனர்.

இக் காலகட்டத்தில் முக்கிய கட்சி உறுப்பினர்களைச் சமாளித்துத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இவர்களுக்கூடாக பொய்க் கருத்துப் ‘புரூடாக்களை’ மக்களுக்குள் பரப்பி அவர்களை சாந்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நான்காவது செயலமர்வு அதிக பணச் செலவு இல்லாமல் ‘ஓசி’ தாறுஸ்ஸலாம் மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்தது.

இதன்மூலம், முன்னர் நடந்த மூன்று செயலமர்வுகளும் வேறு சக்திகளால் பண உதவி செய்யப்பட்டு அந்த சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, முஸ்லிம் சமூகத்தை வசப்படுத்துவதற்காக செய்யப்பட்டவை என்பதும் நான்காவது அமர்வு தலைவரின் தலையைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்பட்டது என்பதும் புலனாகின்றது.

செயலமர்வுகள் எதிர்கால செயற்பாடுகளை வடிவமைக்கும் நோக்கில் முன்கூட்டிச் செய்யப்படும் அறிவூட்டல் அரங்குகளாகும். ஆனால் இந்த நான்கும் மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்ட செயலற்ற அமர்வுகளாகவே அமைந்திருக்கின்றன.

ஏமாற்று வேலை

நான்காவது செயலமர்வில் தலைவரால் ஆற்றப்பட்ட உரையின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முறை பற்றிச் சிலாகிக்கின்றார். இவ்வுரையில், 60:40 என்ற இத்தேர்தல் முறையானது பிரதிநிதித்துவத் தேர்தல் முறைதான், விருப்பு வாக்கு மட்டும்தான் இல்லை என்றும், எல்லா வாக்குகளையும் எண்ணி கட்சிகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்று முதலில் கணக்குப் பார்த்துவிட்டு பின்னர்தான் வட்டாரத்தில் யார் வென்றிருக்கிறார்கள் என்று பார்ப்பார்கள் என்கிறார்.

01) ஆம், 40% வீதத்தில்தான் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்று பார்க்கப்படும். இதனைக் கொண்டு எந்தக்கட்சி ஆட்சியமைக்கும் என்று முடிவெடுக்க முடியாதல்லவா? முதலில் எல்லா வாக்குகளும் எண்ணப்பட்டு வீதாசார அடிப்படையில் 40% உறுப்பினர் தெரிவு செய்யப்படுவர் என்பதைக் கொண்டு எவ்வாறு இதுவும் வீதாசாரத் தேர்தல்தான், இதில் முஸ்லிம்களுக்கு 100% வீதாசாரத் தேர்தல் முறையினால் கிடைத்த அனுகூலங்கள் கிடைக்க முடியும் என்பதற்கான உங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறோம் தலைவரே!

02) இலக்கத்துக்குப் புள்ளடியிட்டு வேட்பாளர் பட்டியலில் இருக்கும் தமக்கு விருப்பமானவரைத் தமது பிரதிநிதியாகத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்கள் இழப்பார்கள்.வட்டாரத்துக்கு கட்சி பெயரிடும் ஒருவரை மட்டுமே தெரிவு செய்யும் நிர்ப்பந்தம் ஒரு தொகுதி மக்களுக்கு ஏற்படும். அதேவேளை கட்சியால் கொடுக்கப்படும் இரண்டாவது பெயர்ப் பட்டியலில் இருந்து ஒருவரையோ அல்லது வட்டாரத்தில் தோல்வியடையும் ஒருவரையோ தலைவரான உங்களால் நியமிக்கப்படும் – உங்களுக்கு கை கட்டி வாய் பொத்தி அடிமைச் சேவகம் செய்யும் செயலாளர் பெயர் குறித்து உறுப்பினராய்த் தெரிவு செய்வார். எனவே இப்போது இருப்பதை விட, அதிகமான சர்வாதிகாரத்தை இத்தேர்தல் முறையால் நீங்கள் பெறுவீர்கள் என்பதை ஏன் கூறாமல் மறைத்தீர்கள் தலைவரே?

03) இது மட்டுமல்ல, ஒரு சபையில் 04 உறுப்பினர்கள் வீதாசார அடிப்படையில் தெரிவாகிற வாய்ப்பிருந்து இதில் 2 உறுப்பினர் உங்களது கட்சிக்குக் கிடைத்தால் இருவருக்கு முதல் இரண்டரை வருடங்களும் பட்டியலில் இருக்கும் மற்ற இருவருக்கும் இறுதி இரண்டரை வருங்களுடம் வாய்ப்புத் தருவேன் என்று கூறிச் சமாளிக்கும் வாய்ப்பும், தேசியப்பட்டியலை வைத்து ஊர்களை ஏமாற்றுவது போல சில சபைகளையும் ஏமாற்றும் சந்தர்ப்பமும் உங்களுக்குக் கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் விட்டதேன் தலைவரே?

04) வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ளராட்சித் தேர்தல்களை தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து எதிர்கொள்ளும் நிலையில், இரண்டாவது பட்டியலில் நமது கட்சி கொடுக்கும் பெயரைத் தேசியக்கட்சித் தலைமை உறுப்பினராகத் தெரிவு செய்வதை விட, அவருடைய கட்சியியைச் சேர்ந்த ஒருவரைத் தெரிவு செய்யும் வாய்ப்புத்தான் அதிகமாக உள்ளது. இது சிறிய கட்சிகளுக்குப் பாதகமானது என்ற உண்மையை ஏன் மறைத்தீர்கள் தலைவரே?

05) முன்னைய தேர்தல் முறையில் ஒரு வாக்காளர், தான் விரும்பிய ஒரு வேட்பாளருக்கு மூன்று விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும் என்றிருந்தமையால், பெரிய சபைகளில் முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்தாலும் சபைத் தலைவராக ஒரு முஸ்லிமைத் தெரிவு செய்து, தமது சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு முஸ்லிம்களுக்கு இருந்தது. ஆனால் புதிய முறையில் இந்த அனுகூலம் அற்றுப் போய்விட்டது என்பதைக் கூற, வசதியாக மறந்ததேன் தலைவரே?

06) ஜே. ஆர் ஜெயவர்தனா கொண்டு வந்த தேர்தல் திருத்தத்தில் ஆரம்பத்தில் விருப்பு வாக்கு முறை இருக்கவில்லை. இதனால்தான் ஜே.ஆர். காலத்தில் நடந்த மாவட்ட சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதையும், அத்தேர்தலில் கட்சி வழங்கும் பட்டியலில் இருக்கும் வரிசைக் கிரமத்தினடிப்படையில்தான் உறுப்பினர் தெரிவு நடைபெற்றதால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதையும், வீதாசாரத் தேர்தல் முறையில் விருப்புவாக்கு முறை பிந்தி அறிமுகப்படுத்துவதற்கு இம்மாவட்டத்தேர்தலில் கிடைத்த சிக்கலான அனுபவமே காரணமாகும். எனவே தற்போதைய புதிய முறையினாலும் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதையும் எந்த மூலை முடுக்கில் வீசி எறிந்தீர்கள் தரைவரே?

இந்த அமர்வில் தலைவர் நிகழ்த்திய சிறப்புரையில் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய கருத்துக்கள் தொடர்பில் அடுத்த பதிவில் கருத்துரைக்க எண்ணியுள்ளேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்