இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

🕔 October 5, 2017

– அஹமட் –

றக்காமம் பிரதேசத்தையும், அங்குள்ள மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொடர்ந்தும் கறி வேப்பிலை போல் பயன்படுத்தி வருகிறது என, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத்தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் குற்றம்சாட்டினார்.

இறக்காமத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மு.கா. தலைவர், அவை குறித்து கணக்கில் எடுக்காமல் தட்டிக் கழித்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறக்காமம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இறக்காமம் பிரதேச மக்கள் கடந்த தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு கணிசமான வாக்குகளை வழங்கியிருந்தனர். இருந்தபோதும் கடந்த மாகாணசபைத் தேர்தலில் கூட இறக்காமம் பிரதேசம் சார்பில் ஓர் உறுப்பினரைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இறக்காமம் பிரதேசம், அரசியல் அதிகாரமற்று ஓர் அநாதையாகவே இருக்கிறது.

ஆயினும், இந்த பிரதேசத்துக்கு ஓர் அரசியல் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டுமென மு.கா. தலைவர் ஹக்கீம் சிந்திக்கவில்லை.

சம்மாந்துறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோடு, மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இருந்தார். கல்முனையில் ஒரு பிரதியமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும், நிந்தவூரில் பிரதியமைச்சர் ஒருவரும் மாகாண சபை உறுப்பினரும், அட்டாளைச்சேனையில் மாகாண அமைச்சர், அக்கரைப்பற்றில் மாகாண சபை உறுப்பினர் என்று இருந்த நிலையில், இறக்காமம் பிரதேசம் வாய் பார்த்துக் கொண்டு இருந்தது – இருக்கிறது.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் நசீருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கொடுக்கப் போகிறது என்றும், நசீரின் மாகாணசபை உறுப்பினர் பதவியை இறக்காமத்துக்கு வழங்கப் போவதாகவும் மு.காங்கிரசுக்குள் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால், அது வெறுங்கதையாக மட்டுமே இருந்தது. கிழக்கு மாகாண சபையும் கலைந்து விட்டது.

முஸ்லிம் காங்கிரசின் தலைமைப் பதவியை ரஊப் ஹக்கீம் அபகரித்துக் கொண்டதிலிருந்து இறக்காமத்தின் நிலை இப்படித்தான் உள்ளது. ஹக்கீமை நம்பினால்  இனியும் இப்படித்தான் இருக்கும். எனவே, மு.கா. தலைவரை இறக்காமம் இனி நம்பக் கூடாது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், இறக்காமத்தைச் சேர்ந்த எனக்கு, இந்தப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பதவியை, எமது தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா, ஜனாதிபதியிடம் பேசி பெற்றுத் தந்திருக்கின்றார். இந்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவி மூலம், என்னால் முடிந்தளவு அபிவிருத்திகளையும், நன்மைகளையும் இறக்காமத்துக்கு நான் பெற்றுக் கொடுத்திருக்கிறேன் என்பதை, மிகவும் அடக்கத்துடன் கூறி வைக்க விரும்புகிறேன்.

இறக்காமம் குடுவில் குளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக, அதற்குரிய அமைச்சரை பல முறை சந்தித்து கோரிக்கை விட்டமைக்கு இணங்க, தற்போது அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கரும்புக் காணிகளில் இம்முறை நெற் செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.

இப்படியான நன்மைகளை எனக்குக் கிடைத்துள்ள ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பதவியின் ஊடாக பெற்றுக் தந்து கொண்டிருக்கிறேன்.

எனவே, இனியும் நம்பக் கூடாதவர்களை நம்பி வாக்களித்து விட்டு ஏமாறுவதிலிருந்தும் இறக்காமம் மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்