போர்ட் சிற்றி: இலங்கைக்குள் ஒரு சீன மாநிலம்

🕔 September 29, 2017

– பசீர் சேகுதாவூத் –

கொழும்பு காலிமுகத் திடலில் கடலை நிரப்பி சீனா அமைத்துவரும் நவீன துறைமுக நகருக்கென்று தனியான ஒரு சட்டம் இயற்றி, அதனை இலங்கையின் அரசியலமைப்புடன் இணைப்பதற்கான முஸ்தீபுகள் சீனாவின் அழுத்தமான வேண்டுகோளுக்கு அமைவாக இடம் பெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சட்ட நகல் தயாரிப்பில் சட்ட மாஅதிபர் திணைக்களமும் சீன சட்ட நிபுணர்களும் இணைந்து மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதிக்குள் கசினோ போன்ற உல்லாச வணிகமும், சூதும் வாதும், களியாட்டமும் இடம்பெற இருப்பதால் அதற்கான தனிச் சட்டம் தேவை என்று அரசாங்கம் சாட்டுச் சொல்லக் கூடும். ஆயினும் இச்சட்டம் நிறைவேறினால், தலை நகரில் அதுவும் சர்வதேசக் கப்பல்கள் தரித்து நிற்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள 320 ஹெக்டயர் விஸ்தீரணக் கடற்பரப்பு சீனாவின் முழுமையான ஆதிக்கத்துக்குள் வரும் நிலை ஏற்படலாம். இப்படியானால் நாட்டின் ஒரு பகுதி சீனாவின் ஒரு துளித் தனி மானிலம் போலவே இருக்கும் – இயங்கும். இவ்விடத்தில், பிரிட்டிசார் வரைந்த இலங்கையின் நூற்றாண்டுகால வரைபடம் இத்திட்டத்தின் வருகையினால் புதிதாக வரையப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டும்.

இனப்பிரச்சினை காரணமாகத் தனி நாடு கோரி 30 வருடங்களாக இடம்பெற்ற உக்கிரமான போரையும், அதனால் ஏற்பட்ட உயிர் உடமை அழிவையும், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட கிடுகிடு சரிவையும், இன்றைய ட்ரில்லியன் கணக்கான வெளிநாட்டுக் கடனையும் எதிர்கொண்டிருக்க வேண்டிய அவசியம், ஒரு சமஷ்டித் தீர்வை எழுபதுகளிலேயே வழங்கியிருந்தால் வரலாற்றில் ஏற்பட்டிருக்கமாட்டாது.

மேலும், இந்நாட்டில் ஆதிகாலம் தொட்டு கூடவே வாழ்ந்து வரும் சிறுபான்மையினருக்கு அரசியல் உரிமையிலும் நிலப்பங்கீட்டிலும் பெரும்பான்மையினர் நீதி செய்திருந்தால், தற்போது வெளிநாடொன்றுக்கு நமது கடலின் ஒரு பகுதியைத் தாரைவார்த்து நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்தவோ,கடனை அடைக்கவோ அவசியம் ஏற்பட்டிருக்காது. இது மட்டுமன்றி தேசத்தின் வரைபடத்தையே மாற்றும் நிலையும் தேவைப்பட்டிருக்காது.

இன்றுவரை இந்த எதார்த்தத்தைப் பேரின அரசியல்வாதிகளோ,பெருமதத்தின் பெருமிதத் துறவித் தலைவர்களோ உணர்ந்ததாகத் தெரியவில்லை. றோஹிங்கிய ஏழை அகதிகள் வெளிநாட்டவர் என்பதனால் உடனடியாக அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கலகம் செய்வோரின் கண்களுக்கு, ஊழிகாலம் வரை நமது நாட்டின் ஆழிக் கடலில் உரிமை கொண்டாட வந்துள்ள வெளிநாட்டவரின் திட்டம் தெரியவில்லை.

இவ்வளவும் நடந்த பின்னும், மேற் சொன்ன தலைவர்கள் நான்கு தசாப்த கால தேசியப் பிரச்சினைக்கு நியாயபூர்வமாக ஒரு சமஷ்டித் தீர்வை முன்வைக்கவோ முஸ்லிம் பெரும்பான்மை அலகை முன்மொழியவோ தயாரில்லை என்பதை, அண்மையில் வெளிவந்த புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது.

இவ்வறிக்கை வெளியான பின்னரும் சிறுபான்மைத் தலைவர்கள் சிலர் இணக்கத்தினூடாக தமது நியாயமான பங்கைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று பேசிவருகின்றனர். அறிக்கையில் இருந்தால்தானே வரைவில் வரும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ‘பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்கிற அற்புதமான தமிழ் முதுமொழியை இவர்கள் எங்கும் கேள்விப்பட்டதில்லையா?

சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் சீனாவும், அமெரிக்காவும் இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் விட தங்களுக்கு மிக அண்மையில் இருக்கின்றன என்று எண்ணியே செயல்படுகின்றன என்பதைக் கணிப்பிடுவது, சிறுபான்மைத் தலைவர்களுக்கு கடும் கடினமாக உள்ளது.

ஏனெனில் இத்தலைவர்கள் தமது மக்களின் நலன்களை விடவும், வெளி நாடுகளுகளின் நலன்களுக்கு மிக அண்மையில் இருக்கிறார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்