கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி

🕔 September 28, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாணசபை நாளை மறுநாள் 30ஆம் திகதி கலையவுள்ள நிலையில், அந்த சபையின் நிருவாகத்தை ஆளுநரிடம் கையளிக்காமல், தற்போதுள்ள அமைச்சரவையிடம் கையளிக்கச் செய்வதற்கான முயற்சியொன்றில், அச் சபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு தெரிவித்தன.

கிழக்கு மாகாணம் நாளை மறுநாள் கலைந்தாலும், அடுத்த தேர்தல் வரை, அதன் நிருவாகம் தற்போதுள்ள அமைச்சரவையிடம்தான் ஒப்படைக்கப்படும் என்பதில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், உறுதியான நம்பிக்கையோடு உள்ளார் எனவும் மேற்படி வட்டாரங்கள் கூறின.

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் இன்னும் மூன்று நாட்களில் கலையவுள்ள நிலையில், கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் நிருவாகங்கள் மட்டும் ஆளுநரிடம் வழங்காமல், அந்தந்த சபைகளின் அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்படும் என்று, ஹாபிஸ் நசீர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபை கலைந்தாலும், அதன் நிருவாகத்தை ஆளுநரிடம் கையளிக்காமல் தற்போதுள்ள அமைச்சரவையிடம் கையளிக்குமாறு மத்திய அரசாங்கத்தைக் கோரும் பிரேரணை ஒன்றை, இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் சமர்ப்பிப்பதற்கான முயன்சியொன்றினை ஆளுந்தரப்பினர் மேற்கொண்டனர்.

ஆனாலும், உரிய நடைமுறையின்படி அந்தப் பிரேணை சபைக்குக் கொண்டுவரப்படவில்லை எனத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தமை காரணமாக, அந்த முயற்சி கைவிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்