பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி

🕔 September 27, 2017

பெண்கள் வாகம் செலுத்துவதற்கான அனுமதியினை சஊதி அரேபியா வழங்கியுள்ளது. இதுவரை காலமும், சஊதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி இல்லாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஊதி அரேபியாவின் மன்னர் சல்மானின் ஆணைக்கிணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

சஊதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இந் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இதற்கிணங்க, சஊதி அரேபியாவிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

பெண்கள் வானமோட்டுவதற்கான அனுமதியினை இன்னும் 30 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்துமாறும், அடுத்த ஆண்டு ஜுன் மாதத்துக்குள் இந் நடைமுறையினைப் பூரணப்படுத்துமாறும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சஊதி அரேபிய தொலைக்காட்சிகளில் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக பெண்கள் தமது பாதுகாவலர்களிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளில் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள பெண்களும், சஊதி அரேபியாவில் வாகனமோட்டுவதற்கு அனுமதிக்கப்படுவர் என, அந்த நாடு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்