கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம்

🕔 September 22, 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், இன்னும் சில நாட்களில் கலையவுள்ள நிலையில், அவற்றின் நிருவாகம் – ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வகையில், ஒரு மாகாண சபையின் பதவிக் காலம் 05 வருடம் என்பதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியுடன், கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

இதனையடுத்து, கிழக்கு மாகாண சபையின் நிருவாகம் – கிழக்கு ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படும்.

அதேபோன்று, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளும் இன்னும் சில நாட்களில் கலையவுள்ளன.

மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை காரணமாக, புதிய தேர்தல் முறையிலேயே, மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இனி இடம்பெறும்.

எனவே, அதற்கான நடவடிக்கைகள் செய்து முடிக்கப்படும் வரை கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டிய நிலைவரம் ஏற்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்