பாலமுனை வைத்தியசாலைக்கு பொதுமக்கள் பூட்டு; வீதியில் இறங்கியோர், மறியல் போராட்டம்

🕔 September 17, 2017

– றிசாத் ஏ காதர் –

பாலமுனை பிரதேச வைத்தியசாலையிலுள்ள சில ஊழியர்களின் மோசமான நடத்தைகளைக் கண்டித்தும், வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்க்க கோரியும், அப்பிரதேச மக்கள் பூட்டி, மறியல் போராட்டமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

இந்த வைத்தியசாலையில் நேற்றிரவு கடமையிலிருந்த ஆண் தாதி உத்தியோகத்தர் ஒருவர் குடிபோதையுடன் காணப்பட்டமையினால், வைத்தியசாலைக்குள் புகுந்த பொதுமக்கள் குறித்த தாதியுடன் முரண்படும் நிலைமை காணப்பட்டது. இதனையடுத்து, நேற்றிரவு வைத்தியசாலைக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

மேற்படி தாதி உத்தியோகத்தர் அடிக்கடி இவ்வாறு போதையுடன் கடமைக்கு வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினார்.

மேலும் இங்குள்ள சில பணியாளர்கள், வைத்தியசாலையின் கடமை நேரத்தில் அடிக்கடி சொந்த வேலை நிமித்தம் வெளியில் செல்வதை வழமையாகக் கொண்டுள்ளனர் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையை பூட்டிய பொதுமக்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மறியல் போராட்டமொன்றிலும் ஈடுபட்டனர். 

வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளும் குறைபாடுகளையும் தாம்  நீண்டகாலமாக அவதானித்துவருவதாகவும், அவற்றினை சுகாதார சேவை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியமையினாலேயே, மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டியேற்பட்டதாகவும் அப்பிரதேச மக்கள் கூறினர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்; ‘குடிகார உத்தியயோகத்தர் வேண்டாம்’ , ‘நல்லாட்சியிலும் எமது வைத்தியசாலைக்கு அநீதியா’ துருப்பிடித்த தளபாடங்களை எமது வைத்தியசாலையில் இருந்து அகற்று’, ‘மாவட்ட வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையாக தரம் தாழ்த்தியது யார்?’ போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியை மறித்து அமர்ந்திருந்தனர்.

பாலமுனை வைத்தியசாலையினுடைய பிரச்சினைகளை உரிய அதிகாரிகள் வருகை தந்து தீர்க்காவிடின் தமது நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தமையினை அடுத்து, கிழக்கு மாகாண சுகாதார  அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் மற்றும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்ஏ.எல். அலாவுதீன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு  வருகை தந்தனர்.

இந்த நிலையில் குறித்த உயர் அதிகாரிகளுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசல் முன்றலில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதனையடுத்து, பாலமுனை வைத்தியசாலையில் பிரச்சினைக்குரிய தாதி உத்தியோகத்தர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இடம்மாற்றுவதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளார் உறுதியளித்தார். மேலும் வைத்தியசாலைக்கான தளபாட கொள்வனவுக்கான கேள்விமனு கோரப்பட்டுள்ளதாகவும், அவை கொள்வனவு செய்யப்பட்டவுடன் பாலமுனை வைத்தியசாலைக்கு வழங்கும் பொறுப்பு தன்னுடையது எனவும் செயலாளர் வாக்குறுதி வழங்கினார்.

இதேவேளை வைத்தியசாலை வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யுமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கோரினார்.

இதனையடுத்து, மக்களின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும், சுகாதார பிரதி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகிபோரின் வசிப்பிடத்திலிருந்து சில கிலோமீற்றர் தூரத்திலே, மேற்படி மறியல் போராட்டம் நடைபெற்ற போதும், குறித்த அமைச்சர்கள் இருவரும் அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்