தண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள்

🕔 September 12, 2017

– மப்றூக் –

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்து விட்டு, அதை நியாயப்படுத்தும் கோதாவில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் குதித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையின் அபிப்பிராயத்தைப் பெறும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துதல்.
மாகாண சபைகளை முன் கூட்டிக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு கையளித்தல்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குதல்.

இந்த சட்ட மூலத்துக்கே கிழக்கு மாகாணத்தில் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 20ஆவது சட்ட மூலத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நகல் உச்ச நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அனுப்பி வைக்கப்பட்ட அந்த நகல் தொடர்பில் நீதிமன்றம் இதுவரை தனது கருத்தினை வெளியிடவில்லை. எனவே, அது குறித்து இப்போதைக்கு பேச முடியாது – பேசவும் தேவையில்லை.

ஆக, 20ஆவது திருத்தச் சட்டமூலம் வழியாக – மாகாண சபையிடமும், தேர்தல்கள் ஆணையாளரிடமும் இருக்கும் இரண்டு அதிகாரங்களை நாடாளுமன்றம் பறித்தெடுப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் ஆணைக்கு எதிராக, சில மாகாண சபைகளின் பதவிக் காலங்களை நீடிப்பதற்கும் இந்த சட்டமூலம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இவ்வாறானதொரு சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்; ஒன்றில் துரோகியாக இருத்தல் வேண்டும். அல்லது, முட்டாளாக இருத்தல் வேண்டும் என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.

இதனால்தான், கிழக்கு மாகாணசபையில் மேற்படி சட்ட மூலத்துக்கு ஆதரவு தெரிவித்த மு.கா. உறுப்பினர்கள், தமது செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

அதற்காக, அவர்கள் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அவிழ்த்து விட்டு வருகின்றனர். மேலும், 20ஆவது திருத்தத்தை எதிர்ப்பவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எனவும் பிதற்றத் தொடங்கியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் என்கிற சாயத்தை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பூசி விட்டால், அந்த நபரை – முஸ்லிம் சமூகத்துக்குள் பாவியாக மாற்றி விடலாம் என்று, முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷவின் கச்சைக்குள்தான் மு.காங்கிரசின் தலைவர், தனது தலையை வைத்துக் கொண்டிருந்தார் என்பதையும், மஹிந்த ராஜபக்ஷவை ஆயுள் முழுக்க ஜனாதிபதியாக வைத்திருப்பதற்கு வழி செய்யும் வகையிலான 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக, மு.காங்கிரஸ் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, கை உயர்த்தியது என்பதையும் யாரும் மறந்து விடவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எல். தவம்; தாங்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஏன் வாக்களித்தோம் என்பது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தார். அது பின்வருமாறு உள்ளது;

‘மாற்றங்களோடு 20ஆவது சரத்து, மஹிந்த ஆதரவு அரசியல்வாதிகளுக்கு ஆப்பு. 20ஆவது சரத்தில் திருத்தமாக, உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கிய 20ஆவது சரத்து, சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ஆதரவு – அரசியல் லாபம் தேடும் அரசியல்வாதிகளின் வாய்களுக்கு பூட்டாக, இத்திருத்தங்கள் அமைந்துள்ளன. உச்ச நீதிமன்றின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இத்திருத்தங்களை மீறி, இனி ஜனாதிபதியோ பிரதமரோ மாற்றங்களைச் செய்ய முடியாது.

இப்படி ஆப்பு விழும் என்று, மஹிந்த ஆதரவு அரசியல்வாதிகள் எண்ணி இருக்க மாட்டார்கள்.

20ஐ வைத்து ஒரு அரசியல் செய்யலாம் என்று எதிர்பார்த்து நாக்கை நீட்டிக்கொண்டிருந்தனர். இப்போது விழுந்திருக்கிறது ஆப்பு’.

உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு சட்ட மூலத்தின் நகலை, சட்ட மா அதிபர் அனுப்பி வைப்பதற்குக் காரணம், அது – அரசியல் யாப்புக்கு முரணாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவாகும். தற்போது திருத்தத்துடன் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட மூல நகல், அரசியல் யாப்புக்கு முரணாக இருப்பதாகச் சொல்லி, அதனை நீதிமன்றம் நிராகரிப்பதற்கும் சாத்தியமும் உள்ளது. ஆனால், தவம் இது குறித்துப் பேசவில்லை.

இன்னொருபுறம், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை தொடர்பில், முஸ்லிம் காங்கிரசில் இணைந்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தனது பேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்;

‘பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மாகாண சபைகளின் ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டமூலம், இன்று மாகாண சபையில் அங்கீகரிக்கப்படவில்லை. மாகாண சபைகளின் அங்கீகாரத்தைக் குறைக்காத பல திருத்தங்கள் – கிழக்கு மாகாண சபையால் முன்மொழியப்பட்டு, அவை உள்வாங்கப்படும் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’.

நிலைமையைப் பாருங்கள். கிழக்கு மாகாண சபையிலுள்ள முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், 20ஆவது திருத்தத்துக்கு தாங்கள் வாக்களித்தமை தொடர்பில் எழுதியுள்ள மேற்படி இரண்டு பதிவுகளும் நூறுவீதம், ஒன்றுக்கு மற்றொன்று முரணுடையவையாகும்.

மேலும், இரண்டு பதிவிலுள்ள தகவல்களும் பொய்யானவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகளின் அதிகாரங்களைத் தட்டிப் பறிக்கும் வகையிலானதும், மக்கள் ஆணைக்கு மாறு செய்யக் கூடியதுமான விடய தானங்களை உள்ளடக்கிய, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்குத்தான், கிழக்கு மாகாண சபையில் இவர்கள் வாக்களித்தார்கள் என்பதுதான் உண்மையாகும்.

ஆனால், மக்களிடம் தப்பிப்பதற்காக ஆளுக்கொரு பொய்யைச் சொல்கிறார்கள். அதேவேளை, தண்ணிக்கு ஒருவரும், தவிட்டுக்கு மற்றொருவரும் இழுக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

பொய்தான் சொல்வது என்று முடிவெடுத்த பின்னர், அதை எல்லோருமாகக் கூடிப் பேசி, மக்கள் நம்புவது போல், ஒரே மாதிரியாகச் சொல்வதற்கு இவர்களால் முடியவில்லை என்பதை நினைக்க சிரிப்பாகவும் உள்ளது.

வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்வது போல்; “எதையும் ப்ளான் பண்ணி செய்யணும். ஓகே”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்