மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட்

🕔 September 7, 2017

– மப்றூக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மு.காங்கிரசின் செயலாளராகச் செயற்பட்டு வந்த மன்சூர் ஏ. காதரை நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு நிஸாம் காரியப்பரை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்துள்ளார்.

இந்த நியமனத்துக்கு முன்னதாக, கட்சியின் பிரதி செயலாளராக நிசாம் காரியப்பர் செயற்பட்டு வந்தார்.

இந்த மாற்றம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாகச் செயற்பட்டு வந்த எம்.ரி. ஹசனலியை சூழ்சிகரமாக அந்தப் பதவியிலிருந்து விலக்கிய மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ‘செயலாளர் நாயகம்’ எனும் பதவியை, மு.காங்கிரசில் இல்லாதொழித்தார்.

பின்னர் அதற்குப் பகரமாக, ‘செயலாளர்’ எனும் பதவியை கட்சிக்குள் உருவாக்கிய ரஊப் ஹக்கீம், அந்தப் பதவிக்கு மன்சூர் ஏ. காதரை நியமித்தார்.

இறுதியாக முஸ்லிம் காங்கிரசின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, கட்சியின் செயலாளர் பதவிக்கான நபரை மு.காங்கிரசின் தலைவர்தான் தேர்ந்தெடுப்பார் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும், செயலாளரை விலக்கும் அதிகாரம் கட்சியின் உயர்பீடத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக செயற்பட்டு வந்த மன்சூர் ஏ. காதரை நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு நிசாம் காரியப்பரை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்