ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

🕔 September 7, 2017
– சலீம் றமீஸ் –

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ரோஹிங்யவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், மியன்மார் அரசாங்கத்தினையும் இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் 83வது அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை கண்டித்து, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை அவசர பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றினார்.

அந்த உரையின் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மனித உரிமைகளை மீறி அரச படைகளும், கடும் போக்குவாத அமைப்புகளும் இணைந்து மேற்கொண்டு வரும் மனிதப் படுகொலைகளில் இது வரை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். அதேபோன்று ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக தப்பிச்சென்றுள்ளனர். உலகில் சமாதானத்தை உருவாக்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையானது, ரோஹிங்ய முஸ்லிம்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் மௌனமாக செயற்படுவது குறித்து இலங்கை முஸ்லிம் மக்கள் கவலையடைகின்றனர்.

ரோஹிங்ய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளினால் இதுவரை ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வியாபார நிலையங்களிலும் ராணுவத்தினர் திட்டமிட்டு கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றனர்.

‘ஆன் சாங் சூகி’ தலைமையிலான புதிய அரசாங்கம் 2016ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது நிலமைகளில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ரோஹிங்ய மக்கள் இருந்தனர்.

ஆனால் புதிய அரசாங்கம் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை செய்து வருகின்றது. ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளில் சிறுவர்கள், குழந்தைகள் கூட மிருகத்தனமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வுகளுக்கு எதிராக துருக்கி நாட்டின் தலைவர் மாத்திரம் குரல் கொடுத்துள்ளார். ஏனைய நாடுகள் மௌனம் காத்து வருகின்றன. பெரும்பான்மையான பௌத்தர்கள் வாழும் மியன்மார் நாட்டில் 50 மில்லியன் சனத் தொகையில் 1.1 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகிலேயே மிக மோசமான அடக்கு முறைக்கு உள்ளாகும் சிறுபான்மை இனமாக ரோஹிங்ய முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மியன்மார் நாட்டில் 135 உத்தியோகபூர்வ இனக்குழுக்கள் வாழ்கின்றனர். இந்த இனக்குழுக்களில் முஸ்லிம்கள் உள்வாங்கப்படவில்லை. 1982ம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட மியன்மார் பிரஜா உரிமை சட்டத்தின் பிரகாரம் ரோஹிங்ய முஸ்லிம்களை நாடற்றவர்களாக அந்த நாட்டின் அப்போதைய அரசாங்கம் பிரகடனம் செய்தது.

முஸ்லிம்கள் பிரஜா உரிமை பெற வேண்டுமாயின் 60 வருடங்களுக்கு மேலாக மியன்மார் நாட்டில் வாழ்ந்து வருவதற்கான சான்றுகளை நிரூபிக்க வேண்டும் என ரோஹிங்ய முஸ்லிம்களிடம் அந்த நாட்டு அரசாங்கம் கோரியது. ரோஹிங்ய முஸ்லிம்கள் சார்பில் அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் தாங்கள் சுதேசிகள் என நிறுவப்பட்டும் அவை ஏற்கப்படவில்லை. பிரஜா உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக ரோஹிங்ய மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. நில உரிமை, கல்வி, போக்குவரத்து உட்பட பல உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

2012ம் ஆண்டில் இருந்து இன்று வரைக்கும் ஒரு லட்சத்திற்கு அதிகமான ரோஹிங்ய முஸ்லிம்கள் அயல் நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடல் மார்க்கமாக ஆபத்தான சிறுபடகுகளில் தப்பிச் சென்றுள்ளனர்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை முன்வைத்த மேற்படி பிரேரணை, கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்