அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 July 28, 2015


001
(முன்ஸிப்)

ம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்பது – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், ஐ.ம.சு.முன்னணியை வெற்றிபெறச் செய்வதற்கு உதவியாகவும் அமையுமென்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.தேசியக் கட்சியை மு.காங்கிரசிடம் தங்கியிருக்க வைப்பதென்பது பிரதானமான விடயமாகும் என்றும், எனவேதான், அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தினை, மு.காங்கிரஸ் தூரநோக்குடன் மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசின் மூன்று வேட்பாளர்களையும் ஆதரித்து, இறக்காமம் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது.

இதில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

‘எதற்கெடுத்தாலும் சிலர் இனவாதத்தினைத்தான் பேசுகின்றனர். அவ்வாறானவர்கள், அருகிலுள்ள தீகவாபி புனித பிரதேசத்தினை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும் அடிக்கடி கூறுகின்றனர். தீகவாபியினை முஸ்லிம்கள் எவரும் ஆக்கிரமிக்கவில்லை. சரியாகக் சொன்னால், தீகவாபி பிரதேசத்தை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளனர். மு.காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள், தீகவாபிக்காக கோடிக்கணக்கில் நிதியுதவியினை வழங்கியிருந்தார். தொடர்ந்தும் அவ்வாறான உதவிகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

இனவாத விடயங்களை தூக்கிப் பிடிக்கின்ற தரப்பினர், இரண்டு பிரதான கட்சிகளுக்குள்ளும் இருக்கின்றனர். ஒரு விதமான பீதி மனப்பான்மையே இனவாதம் பேசுவதற்கான காரணமாகும்.

இவ்வாறான இனவாதிகளையெல்லாம் ஓரங்கட்டி, அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தினை கையிலெடுப்பதற்காகவே, ஐ.தே.கட்சியோடு இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதன் மூலம், மு.கா.வின் ஆசனங்களை அதிகமாக வென்றெடுப்பதோடு, எங்களுடன் இணைந்து போட்டியிடுகின்ற ஐ.தே.கட்சியையும் அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்ய முடியும். இந்தச் செயற்பாடு மூலம் மு.காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குள் அம்பாறை மாவட்டத்தினைக் கொண்டு வரலாம்.

இந்த நிலையில், மு.காங்கிரசின் இவ்வாறான திட்டங்களைக் குழப்பும் வகையில், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ்; கட்சியினர், அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட வந்துள்ளனர். இந்த மயில் சின்னக்காரர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வேட்பாளரைக் களமிறக்கி கொஞ்சம் வாக்குகளைப் பிரிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் எதை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்? அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியினர் மயில் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸ் காரர்கள் பிரித்தெடுக்கும் வாக்குகள், ஐ.ம.சு.முன்னணியிரை வெற்றிபெறச் செய்வதற்கே உதவியாக அமையும்.

அ.இ.ம.காங்கிரசினர் ஐ.தே.கட்சின் தேசியப்பட்டியலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆட்களைப் போட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியினை தோற்கடிக்கும் நோக்குடன் களமிறங்கியிருக்கும் அ.இ.ம.காங்கிரசுக்கு ஐ.தே.கட்சி தனது தேசியப்பட்டியலில் ஒருபோதும் இடம் வழங்காது.

மு.காங்கிரசும் சில இடங்களில் தனித்துப் போட்டியிடுகின்றது. ஆனாலும், மு.கா. தனித்துப் போட்டியிடும் மாவட்டங்களில், ஐ.தே.கட்சி வெற்றி பெறுவதற்கு எவ்வித வாய்ப்புகளும் இல்லை. அதனால்தான், மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. விகிதாசார தேர்தல் முறைமையினூடாக, இந்த இடங்களில் மு.கா.வுக்கு ஆசனங்கள் கிடைக்கும்.

ஆனால், அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரசினர் போட்டியிடுவதன் மூலம் மு.காங்கிரசின் அரசியல் அந்தஷ்தினைப் பலவீனப்படுத்தலாமென நினைக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் தனித்துப் போட்டிடுவததென்பது, எனக்கும் உற்சாகமான விடயம்தான். அப்படிப் போட்டியிட்டால், மாவட்டத்தினை வென்றெடுக்கும் வாய்ப்பினை எதிர்த்தரப்பினருக்குக் கொடுக்கும் நிலை உருவாகியிருக்கும். அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து அ.இ.ம.காங்கிரஸ் போட்டியிடுவதற்கான ஒரு சந்தர்ப்பமும் உருவாகியிருக்கும்.

ஐ.தேசியக் கட்சியை மு.காங்கிரசிடம் தங்கியிருக்க வைப்பதென்பது பிரதானமான விடயமாகும். எனவேதான், அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தினை தூரநோக்குடன் எடுக்க வேண்டியிருந்தது’ என்றார்.

இக் கூட்டத்தில், வேட்பாளர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எம்.ஐ.எம். மன்சூர், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குநருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், மு.காங்கிரசின் ஸ்தாபகச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.003002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்