மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

🕔 August 31, 2017

மியன்மார் நாட்டிலுள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர், கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியன்மார் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை ஒரு கணம்கூடப் பார்க்கச் சகிக்கமுடியாதவாறு மிகமோசமான கோரம் அரங்கேறியுள்ளது.

மியன்மார் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தபோதும், நாட்டின் மேற்குப் பகுதியான ரகைண் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மற்றும் பங்களாதேஷ் வம்சாவளியினரான ரோகிங்யா முஸ்லிம்கள் இன – மத வெறித் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மியன்மார் ராணுவமே ரோகிங்யா மக்களை இனப்படுகொலை செய்துவருவதாகப் பிரச்னை எழுந்துள்ளது.

கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாள்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்ட ரோகிங்யா முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் முதல் மூவாயிரம்வரை இருக்கும் என்று ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் மியான்மர் ராணுவம் உள்ளது என்றும் அந்தக் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

ரகைண் மாநிலத்தில் ராத்தெடங் நகரத்துக்கு அருகில் உள்ள சோக்பரா என்னும் ஊரில் ‘கடந்த ஞாயிறன்று மட்டும் 900 முதல் ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும்’ என்றும், அதில் ஒரே ஒரு சிறுவன் மட்டுமே உயிர்பிழைத்தான் என்றும்  இவ்வமைப்பின் பேச்சாளரான மருத்துவர் அனிதா சுக் கூறியுள்ளார்.

ரகைண் மாநிலத்தில் ரொகிங்யா முஸ்லிம்கள் மீது அண்மையில் துப்பாக்கியால் சுடும் உத்தரவை அந்த நாட்டு அரசாங்கம் பிறப்பித்ததை அடுத்தே, அங்கு ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் விவரிக்கமுடியாத கொடூரமாக அரங்கேறி வருகிறது. மியன்மார் ராணுவமானது ரோகிங்யா முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், மதரசாக்களை தாக்கி அழித்துள்ளது. தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து 20 ஆயிரம் அப்பாவி மக்கள் அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேறினர். பங்களாதேஷ் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் 60 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளனர். ஆனாலும் பங்களாதேஷ் அரசாங்கம் அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்துவருகிறது.

இதுவரை, ரகைண் மாநிலத்திலிருந்து ஒரு லட்சம் பேர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். இரண்டாயிரம் ரோகிங்யா இனத்தவர் மியன்மார் – பங்களாதேஷ் எல்லையில் மாட்டிக்கொண்டுள்ளனர். பங்களாதேஷுடனான எல்லையை மியன்மார் அரசாங்கம் மூடி வைத்துள்ளது.

ரகைண் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவும், மனித உரிமைகள் மீறல் நடக்காமல் உறுதிப்படுத்தவும், ரோகிங்யா முஸ்லிம் மக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதை நிறுத்தவும், ரோகிங்யா முஸ்லிம்கள் பாதுகாப்பாக நாடுதிரும்பவும் ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ், இந்தியா, சீனா ஆகிய நாடுகள், மியான்மர் அரசாங்கத்தின் மீது அழுத்தம் தரவேண்டும் என்றும் ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, 2012 ஆம் ஆண்டில் பெரும்பான்மை புத்த மதவாத சக்திகளுக்கும் ரகைண் மாநிலத்தில் வாழும் ரோகிங்யா முஸ்லிம் மக்களுக்கும் மோதல் உருவானது. அப்போது முதல், ரோகிங்யா முஸ்லிம்கள் தரப்பில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் வாழ்வாதார இழப்பும் தொடர்ந்துவருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரகைண் மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத மதவாத ராணுவத் தாக்குதல்கள், வங்கமொழி பேசும் ரோகிங்யா முஸ்லிம்கள் அனைவரின் வாழ்க்கையையுமே மீண்டும் கதிகலங்கச் செய்துள்ளது. சர்வதேச சமூகமானது மானுடத்துக்கு எதிரான மியன்மார் ராணுவத்தின் குற்றங்களை உடனே தடுத்துநிறுத்த வேண்டும் என்று, ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் மோங்டவ் எனும் ஊரில் ராணுவச் சோதனை எனும் பெயரில் நடத்தப்பட்ட கடும் நடவடிக்கையில், குழந்தைகளையே வெறிகொண்டு படுகொலை செய்வது, கூட்டு வல்லுறவுக் கொடுமை செய்வது உட்பட மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று ஐநா குழு ஆய்வுசெய்யும் அளவுக்கு நிலைமை மிக மோசமானது.

ஐநாவின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனானின் ரகைண் மாநில அறிவுரைக் குழுவின் இறுதி அறிக்கையானது, ரோகிங்யா முஸ்லிம்களின் குடியுரிமை, சுதந்திரமான வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் கல்வி உரிமைகள், மனிதாபிமான உதவிகள் பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அந்த அறிக்கையானது அண்மையில் வெளியிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்