அக்கரைப்பற்றும், அதாஉல்லாவும்; தவம் என்கிற கோட்சேயின் தம்பியும்

🕔 August 30, 2017
– முல்லக்காரன் –
 
ட்டாளைச்சேனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழையோடு குடைபிடித்த கூட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் ஆற்றிய உரை, கல் நெஞ்சு படைத்தவர்களின் உள்ளங்களையும் கரைய வைத்திருக்கும்.

“அதாஉல்லா நீண்டகாலமாக நோயாளியாக இருப்பவர். அவருடை நோய்க்குப் பாவிக்கும் குளிசைகள் அவரைப் பைத்தியமாக்கி விட்டது. அவருக்கு என்ன பேசுவது என்பதே புரிவதில்லை” என்று மிக ஆக்ரோஷமாக தனது உரையில் தவம் கூறினார். மேலும் அதாஉல்லா ஓர் ஊழல்வாதி என்றும் குறிப்பிட்டார்.

அதாஉல்லா ஏன் சிக்கவில்லை

அதாஉல்லா ஊழல்வாதி என்றால், தேர்தல் முடிந்து 02 வருடங்கள் கழிந்த நிலையில், மஹிந்தவையும் அவரது குடும்பத்தவரையும் ஏனைய பிரமுகர்களையும் விசாரணை செய்யும் நிதிமோசடிப் பிரிவு, அதாஉல்லா மீது – ஏன் வழக்குத் தொடரவில்லை? இத்தனைக்கும், எல்லாக் கூட்டங்களிலும் ரணிலை அதாஉல்லா
விமர்சிக்கின்றார்.

அரசியல் ரீதியாக தனக்குப் பகையாளியான அதாஉல்லாவை, ஹக்கீம் ஏன் காட்டிக் கொடுத்து தண்டனை பெற்றுக் கொடுத்து வாக்குரிமையையும் பறிக்கவில்லை.

தவம் அவர்களே, உங்கள் தலைவரை நீங்கள் வைத்துக் கொண்டுதானே இதையெல்லாம் கூறினீர்கள். அதாஉல்லா ஊழல்வாதி என்றால் நீங்கள் சும்மா விடுவீர்களா?

உங்கள் தலைவர் ஹக்கீமைப் போல் நீங்களும் மக்களை ஏமாற்றுகின்றீர்கள் என்பதற்கு மக்களே சாட்சி. நமதூர் சாதாரண மக்களுக்கே கொழும்பில் விலை உயர்ந்த வீடுகள் இருக்கின்றன. 16 வருட அரசியலில் எம்.பியாக, அரை மந்திரியாக, மந்திரியாக, அமைச்சரவை மந்திரியாக இருந்த ஒருவருக்கு, வளவுத் துண்டொன்று இருப்பதில் என்னதான் ஆச்சரியம்? லங்கா ஹொஸ்பிட்டல், நாரேஹன்பிட்டயில் உள்ள வளவை, தொட்டம காட்டுக்குள் அதாஉல்லா மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றாரா?

சட்டியும், அகப்பையும்

சாதாரண இருமல் தடிமலுக்கு போடுகின்ற ஒரு குளிசையே, உடம்பை சில மணி நேரம் ஆட்டுவிக்குது என்பதை நீங்கள் அறியவில்லையா?

உங்களுடைய தந்தை மிகவும் கண்ணியமானவர்.எப்போதும் மக்களோடு சிரித்த முகத்தோடு பேசுவார். அப்படிப்பட்ட ஒருவரின் மகன் நன்றி கெட்டதனமாக எங்கள் மத்தியில் உலா வருவதையிட்டு நாம் கவலை அடைகின்றோம்.

‘சட்டியிலிருப்பது அகப்பையிலே, புத்தியிலிருப்பது வார்த்தையிலே’  என்ற, சந்திர பாபுவின் பாடல் வரிகளுக்கேற்ப, மக்கள் மத்தியில் நெறி தவறிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள முற்படுங்கள்.

ஹுக்கும்

பல்கலைக்கழக மாணவனாக இருந்து மாணவர்களை உசுப்பேற்றி, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து பிரகடனம் என்ற போர்வையில் நீங்கள் போட்ட நாடகம் எல்லோரும் அறிந்ததே.

1.  இந்த நாடகத்தில் பங்கெடுத்து, கல்முனை மைதானத்தில் தலைமை தாங்கிய ஹனிபா மௌலவிக்கு நீங்களும் உங்கள் சண்டியன்மாரும் சேர்ந்து, பின்னர் ஒரு காலத்தில் செய்த அநியாயம் ஞாபகமிருக்கிறதா? நீங்கள் மௌலவிக்கு நன்றியுடையடையவராக இருந்திருக்க வேண்டுமே?

2.  ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த இப்தார் வைபவ கஞ்சிப் பானைக்குள் மண் அள்ளிப் போட்ட” ஹூக்கும்”, கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஹனீபா மௌலவியின் கண்ணெதிரே நீங்கள் அடிபட்டுக் கொண்டு கன்னம் வீங்கி, இடுப்பு அடிபட்டு நொந்து நடக்க முடியாமல், சிறைக் கைதியாக ஊர் மக்கள் வைத்திருந்ததை ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா?

3. முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸடீன் உங்களுக்குச் செய்த உதவிகளையும் அரசியல் பாடங்களையும் மறந்து, அவரை நீங்கள் தூசித்த நன்றி கெட்ட தனத்தை என்னவென்று சொல்வது.

4. உங்களின் எண்ணற்ற அரசியற் கனவு மூட்டைகளுடன் அதாஉல்லாவிடம் தஞ்சமடைய, ஊருக்குத் தலைவனாக்கி (தவிசாளர்) அழகு பார்த்தவரைப் பார்த்து, பைத்தியம் என்று கூறிய வார்த்தை நிச்சயம் வானங்கள் பலதைக் கடந்திருக்கும்.

தோல்வி அவமானமல்ல

அகில இந்திய காங்கிரசுக்கு காமராஜர் தலைவராகிய நிலையில், இந்தியாவின் பிரதமர் பதவியை பாரம் எடுக்கும்படி காங்கிரஸார் கூறிய போது; “ஐயோ, எனக்கு வேண்டாம். நான் 04ஆம் கிளாஸ் கூடப் படிக்காதவன்” என்று கூறிய கர்ம வீரர் காமராஜர் கூட, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்ட சபைத் தேர்தலில், சாதாரண கல்லூரி மாணவனிடம் தோல்வி கண்டவர். நமது நாட்டில் ஜே.ஆர். ஜெயவர்தன, என்.எம். பெரெரா, கொல்வின்.ஆர்.டீ. சில்வா, பீற்றர் கெனமன், ஆர். பிரேமதாஸ, சீ.பி.டி. சில்வா, ஏன் மட்டக்களப்பில் பதியுத்தீன் கூட நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றவர்கள்தான். பிற்காலத்தில் ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாஸ போன்றவர்கள் ஜனாதிபதியானார்கள்.  அரசியலில் வெற்றி தோல்வி சகஜமாகும்.

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர், ஹக்கீமை துப்பாக்கி வேட்டுக் களத்துக்கு மத்தியில் இணைத் தலைவனாக்கி, சாய்ந்தமருது பிரதேச செயலக திறப்பு விழாவின் போது, மர்ஹூம் தொப்பி மொஹிதீனையும் மேடைமுன் கொண்டு வந்து தலைவனாக்கிய பெருமை அதாஉல்லாவைச் சாரும்.

அதாஉல்லாவின் முயற்சியினால் திருமலையில் பாயிஸ், சம்மாந்துறையில் அமீர், மருதமுனையில் துல்ஸான், நிந்தவூரில் ஆரிப் சம்சுடீன், அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பைஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுபினராயினர். இவர்களில் கிழக்கு மாகாண சபையில் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை வகித்த உதுமாலெப்பையைத் தவிர, மற்ற அனைவரும் அதாஉல்லாவைக் கைவிட்டவர்கள். மேலே சொன்னவர்களில் யாருமே அதாஉல்லாவைக் கௌரவக் குறைவாகப் பேசியதில்லை. மக்கள் முன்பாக எதைப் பேச வேண்டுமென்று, படித்தவர்கள் அறிந்து தெரிந்து பேசுவார்கள்.

கோட்சேயின் தம்பி

காந்தியைச் சுட்டால் வரலாற்றில் மக்களால் போற்றப்படுவோம் என்று நாதிராம் கோட்சே எண்ணியதால், தனது தலைவன் காந்தியைச் சுட்டான். முடிவு, காந்தி மகாத்மாவானார். கோட்சே தூக்குக் கயிற்றில் தொங்கினார். அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் அதாஉல்லாவை அவமானப்படுத்திப் பேசியதால், அந்த மக்கள் அதாஉல்லா மீது அனுதாபத்தைத் தெரிவிக்கின்றனர். (இது எனது கருத்தல்ல அந்த ஊர் நண்பர்கள் சிலர், என்னிடம் கூறியவை).

அடுத்து அதாஉல்லாவில் குறைகள் இருக்கட்டும். ஏன் உங்களிடமும் உங்கள் தலைவனிடமும் குறைகள் இல்லையா? அதற்காக அக்கரைப்பற்று மக்கள் அவருக்கு முட்செருப்பு மாட்டி – சிலுவையை தூக்கி வரச் சொல்ல மாட்டார்கள்.

அதாஉல்லா நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள், இங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒரு பிராந்தியக் காரியாலயம், நூற்றுக் கணக்கானவர்களுக்குத் தொழில் வாய்ப்பு. நீர்வழங்கல் வடிகால் அமைச்சராக இருந்தமையினால், அக்கரைப்பற்றில் நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்திய நிலையம், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள விடுதி மட்டும் உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும் அவசியத் தேவையாக உள்ளது.
உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்தமையினால், அக்கரைப்பற்றில் மேலதிகமாக மாநகர சபை உருவாக்கப்பட்டது, பலருக்கு தொழில்கள் கிடைத்தன. இவ்வாறு அடிக்கிக் கொண்ட போக ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன.

அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு வந்த ஓர் அமைச்சின் செயலாளர் கூறினார்; “அக்கரைப்பற்றுக்குள் நுழையும் போது, முகலாய சக்கரவர்த்திகள் ஆண்ட பாரத தேசத்தில் நிற்கின்றேனோ என்று எண்ணினேன்” என்று. தவம் அவர்களே, இன்னும் பல மேடைகள் ஏறுங்கள். உங்கள் தூற்றுதலை மக்களிடம் அள்ளி வீசுங்கள். கோட்சேயின் தம்பியாக மட்டும் மாறிவிடாதீர்கள். ஏனெனில் அதாஉல்லா மகாத்மாவாகப் போய்விடுவார்.

எங்கள் மண்ணை அயல் ஊர்களில் வீசாதீர்கள். அது அவர்களின் கண்களைக் கரிக்கும். முடியுமானால் அக்கரைப்பற்று மண்ணில் உள்ளூராட்சித் தேர்தலில் ஏதாவது ஒரு வட்டாரத்தில் போட்டியிட்டுப் பாருங்கள். வெற்றி பெற்றால் அது உங்கள் சாதனையாகும் . அதாஉல்லா உங்கள் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பார்.

அரசியல் பரதேசிகள்

தவம் அவர்களே, தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபுக்கு நீங்கள் கல்லெறிந்து கொண்டிருந்த காலத்தில், அக்கரைப்பற்று பழைய யூனியன் முன்றலில் நடைபெற்ற கூட்டமொன்றில் “எனது பெரிய மனக்குறை ஒன்று தீர்ந்துவிட்டது. இனி நான் நிம்மதி அடையலாம்.
அந்த அளவுக்கு என் எண்ணப் பதிவுகள், நனவுகள் எல்லாம் அதாஉல்லாவின் உள்ளக் கிடங்கில் குவிந்து கிடக்கின்றன” என்ற பொருள்பட, அஷ்ரப் கூறிய வார்த்தைகள், அஷ்ரப்பினால் அதாஉல்லா புடம் போடப்பட்டவர் என்பதை நிரூபிக்கும். இதை ஹக்கீம் கூட நன்கு அறிவார். காங்கிரஸ் தொண்டர்கள் சமைத்த புரியாணி கிடாரத்தில், சிலர் அடிச்சட்டியைச் சுரண்டித் திண்ட அரசியல் பரதேசிகள் என்பதை அனைவரும் அறிவர்.

அதாஉல்லா மட்டும் தவத்துக்கு கசந்து போனது ஏன்? அக்கரைப்பற்றை சவக்காலை என்றும், அந்த சவக்காலக்குள்தான் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி செயற்படுவதாகவும் தவம் கூறியது எந்த வகையில் நியாயம்? அக்கரைப்பற்றில் பிரதேச தவிசாளராகவும், அக்கரைப்பற்று மாநகர  சபையில் உறுப்பினராகவும் தான் பதவி வகிக்கத் தகுதி பெற்றது, தேசிய காங்கிரஸ் மூலம்தான் என்பதை தவம் ஒரு கணம் நினைத்தால், அவர் அட்டாளைச்சேனையில் எடுத்த வாந்தியை மீண்டும் தொண்டைக்குள் அள்ளிக் கொள்ள வேண்டிவரும்.

சிறுநீத்தை வட்டைக்குள் விவசாயிகளிடம் சோறு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்ட கையோடு, அன்னமிட்டவன் நெஞ்சிலே ஏ.கே. 47 மூலம் குண்டு பாய்ச்சிய பயங்கரவாதியை விடவும், அதாஉல்லா பற்றி – நன்றி மறந்து பேசும் தவம் மிகக் கொடுமையானவர் .
இதைத்தான் சொல்வது வளர்த்த கிடா மார்பில் பாய்வது என்று. இனி, கிடாவை அதாஉல்லா கட்டுல போட்டுவிடுவார்.

ஆசிரியர் குறிப்பு: கட்டுரையாளர், தனது பெயரை புனை பெயரில் பதிவிட விரும்பியதால், அதை அனுமதித்துள்ளோம். இந்தப் பதிவுக்கு மாற்றுக் கருத்துகள் இருக்குமாயின், அவற்றினையும் வரவேற்கின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்