வாக்குறுதிகளை மு.கா. தலைமை அப்பட்டமாக மீறி வருகிறது; அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்களில்லை: உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ. விசனம்

🕔 August 30, 2017

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசிப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக காலா காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்துவிட்டு,  அப்பட்டமாக மீறி வருவதாக, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.எல்.எம். பளீல் பி.ஏ. தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அட்டாளைச்சேனைக்கு வழங்குவேன் என்கிற மு.கா. தலைமையின் வாக்குறுதிகள் வெறும் பம்மாத்தும், பெறுமதியற்ற வாய்ச்சாடல்களும்தானா எனவும் அவர் கேள்ளியெழுப்பியுள்ளார்.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்த அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மு.கா. தலைவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஆகியவை தொடர்பிலும், பளீல் பி.ஏ. தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்திலேயே, மேற்படி விடயங்களை பளீர் பி.ஏ. குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பதிவு செய்கையில்;

அட்டாளையின் வரலாறு 30 வருட அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களைக் கொண்டது. இருந்தும், பொத்துவில் தொட்டு புல்மோட்டை வரையும் முகாவினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எனும் அதிகாரம், ஏன் அட்டாளைச்சேனை மக்களுக்கு தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது? அதனால் அட்டாளைச்சேனை மக்கள் அடைந்துள்ள ஆதங்கமும் விரக்தியும் விளங்குமா?

களியோடைக்கு அப்பால் தொடர்ந்தும் வாக்களித்து, பொத்துவில் வரையும் கைவிடப்பட்டுள்ள சுமார் 65 ஆயிரம் மக்களுக்கு தேவைகளும் அபிலாசைகளுமில்லையா? அவர்களின் பிள்ளைகளும் சந்ததிகளும் அரசியல் அநாதைகளா? அட்டாளைச்சேனை என்பது ஏமாளிகளையும், முட்டாள்களையும் கொண்ட பிரதேசமா?

தொடர்ந்தும் அம்பாறை  மாவட்டத்தின் பெரிய ஊர்கள் மற்றும் தொகுதிகளின் மேய்ச்சல் தரையாகத்தான் அட்டாளைச்சேனை மக்கள் இருக்க வேண்டுமா? கடந்த 2015 பொதுத் தேர்தலில் இப்பிரதேச மக்களின் தொடர் தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றால்தான் சம்மாந்துறையின் மானமும் மரியாதையும், முகாவின் தேசிய மட்டத்திலான பேரம் பேசலும் பாதுகாக்கப் பட்டது என்பது புரியவில்லையா?

மேலும், அட்டாளைச்சேனை ஊர்மக்கள் வழங்கிய பணம் மூலம் 13 அடி நிலத்தை கொள்வனவு செய்து, அதனை அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வீதியோடு இணைத்து அகலமாக்கியமை, சரித்திரம் காணாத அபிவிருத்தி மழையா?

நாங்களும் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள்தான். அதற்காக எல்லாவற்றையும் நியாயம் என்று கூறி, குருட்டுத்தனமாக வாதிட முடியாது. அட்டாளைச்சேனைக்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தாமதமடையும் ஒவ்வொரு கணமும், மு.கா.வின் சரிவை யாரும் தடுக்க முடியாது என்ற யதார்த்தம் புரியவில்லையா?

கடந்த 27ஆம் திகதி அட்டாளைச்சேனையில் தலைவர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் மு.கா. ஆதரவாளர்கள் குறைந்து காணப்பட்டமையின காணவில்லையா? இம்மண்ணில் நாம் இதுவரையும் கட்டிக்காத்த முஸ்லிம் காங்கிரஸ், அழிந்து போவதை பொறுப்பீர்களா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பான செய்திகள்: 

01) தேசியப்பட்டியலை மறக்கடிக்கும் ‘போதை’ மருந்துடன், அட்டாளைச்சேனை வருகிறார் ஹக்கீம்

02) கழுதைக்கு கரட், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலா; ஹக்கீமிடம் கேட்பதற்கு, காத்திருக்கும் இளைஞர்கள்

03) அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்