மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை

🕔 August 29, 2017

மாணவர் ஒருவரை தரம் ஒன்றுக்கு வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, லஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று செவ்வாய்கிழமை மேற்படி தண்டனையினை விதித்து தீர்ப்பளித்தது.

பாணந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, குறித்த அதிபர் 25,000 ரூபா பணத்தை பெண் ஒருவரிடம் லஞ்சமாக பெற்றுக் கொண்டார்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட இந்த வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க மேற்படி தீர்பினை வழங்கினார்.

2009ம் ஆண்டு, தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்வதற்காக, 2008ம் ஆண்டு நொவம்பர் மாதம் 16ம் திகதி மேற்படி லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட அதிபர் 25 ஆயிரம் ரூபாவினை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மேலதிகமாக இன்னும் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இதன்போது நீதிபதி உத்தவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்