அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

🕔 August 22, 2017

மைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸ ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு, விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஐ.தே.கட்சி அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

மேலும், நேற்று திங்கட்கிழமைக்குள் அமைச்சர் விஜேதாஸ ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற குழு காலக்கெடு ஒன்றினை விதித்திருந்தது.

இந்த நிலையில், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை அலறி மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, தனது ராஜிநாமாவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்றைய கூட்டத்துக்கு சமூகமளிக்காத அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, இதுவரை தனது ராஜிநாமா குறித்து பேசவில்லை.

இதனையடுத்தே, அமைச்சுப் பதவியிலிருந்து அவரை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளை விஜேதாஸ ராஜபக்ஷ வகித்து வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்