ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

🕔 August 21, 2017

– நேர்கண்டவர்: ரி. தர்மேந்திரன் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறியதாக, தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு:

கேள்வி:- நீங்கள் அரசியலில் பிரவேசித்தது குறித்து கூறுங்கள்?

பதில்:- எனது சொந்த ஊரான அக்கரைப்பற்று மண்ணில் இருந்து 2005 ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக தேசிய காங்கிரஸ் எழுந்து நின்றது. தேசிய காங்கிரஸை உருவாக்கிய முன்னோடிகளில் நானும் ஒருவன். 2003 ஆம் ஆண்டில் இருந்து ஏ.எல்.எம். அதாவுல்லாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு தேசிய காங்கிரஸின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிக காத்திரமான பங்களிப்புகளை வழங்கி இருந்தேன்.

கேள்வி:- தேசிய காங்கிரஸின் உருவாக்கத்துக்கு உழைத்த நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைய நேர்ந்தது ஏன்?

பதில்:- 2004 ஆம் ஆண்டு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இதில் அக்கரைப்பற்று மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு நிர்க்கதி அடைந்தனர். அனர்த்தம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே எனது மக்களுக்கு வேண்டிய மனிதாபிமான, நிவாரண உதவிகளை நானாகவே முன்வந்து மேற்கொள்ள தொடங்கினேன். எனது அன்பு, அரவணைப்பு, தன்னலம் அற்ற சேவை ஆகியவற்றை அடையாளம் கண்ட ஊர் மக்கள், நான் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளராக வர வேண்டும் என்கிற அபிலாஷையை வெளிப்படுத்தி நின்றனர்.

தேசிய காங்கிரஸ் அதன் முதலாவது தேர்தலை 2005 ஆம் ஆண்டிலேயே எதிர்கொண்டது. அது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல். அத்தேர்தலில் ஊர் மக்களின் அபிலாஷைக்கு மதிப்பு கொடுக்கப்பட்டு நான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அப்போது தேசிய காங்கிரஸில் அங்கம் வகித்த தவம், பிரதேச சபை தவிசாளர் பதவியில் கண் வைத்து காணப்பட்டார். இதனால். என்னை போட்டியாக நினைத்து புழுங்கினார்.

எனது ஊரில் இருந்து எழுந்த அரசியல் கட்சி, என்னால் அசௌகரியங்களுக்கு உள்ளாக கூடாது என்று முடிவெடுத்த நான்; அதாவுல்லாவின் அனுமதியையும் பெற்று கொண்டு உச்ச பட்ச ஜனநாயக விழுமியத்தை பேணியவனாக தேசிய காங்கிரஸில் இருந்து அமைதியாக வெளியேறினேன். இரு வருடங்களுக்கு மேல் இவ்விதம் ஒதுங்கி காணப்பட்டபோதிலும் அரசியல் நடப்புகளை மிக நெருக்கமாக அவதானித்து வந்தேன். அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளராக வந்த தவம், பாரிய லஞ்ச ஊழல் மோசடி பேர்வழியாக நடந்து கொண்டார். இதனால் நான் வெறுப்படைந்தேன்.

இதே நேரம், நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்பட வேண்டும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழு எனக்கு அழைப்பு விடுத்தது. தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என்னை நேரில் பல தடவைகள் சந்தித்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தினார். என்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்துக்கு விசேட விருந்தாளியாக அழைத்து சென்றார். இவர் என்னுடன் பேசி ஏற்கனவே இணக்கம் கண்டிருந்தபடி என்னை கட்சியின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிப்பது என்றும், பொது தேர்தலில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக நிறுத்துவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற சிறப்பு பதவியுடனேயே நான் இக்கட்சியில் 2008 ஆம் ஆண்டு இணைந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் இக்கட்சியின் உயர்பீட உறுப்பினராக நியமிக்கப்பட்டேன்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுகின்ற வகையில் நீங்கள் நடந்து கொண்டீர்களா?

பதில்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நான் இணைந்தபோது, ஏ.எல்.எம். அதாவுல்லா சகல அதிகாரங்களுடனும் கூடிய, அரசாங்கத்தில் செல்வாக்கு மிகுந்த அமைச்சராக காணப்பட்டார். அதே நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் வரலாற்றிலேயே எதிர் கட்சியாக இக்காலத்தில்தான் காணப்பட்டது. பிற்பாடு ரவூப் ஹக்கீம் பெயரளவில் அமைச்சராக பதவி வகித்ததும் இதே கால பகுதியில்தான். எனவே கட்சியின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நான் செயற்பட தொடங்கியபோது, பாரிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அவற்றை எல்லாம் மிக லாவகமாக முறியடித்தேன். குறிப்பாக அதாவுல்லாவின் கோட்டையாக காணப்பட்ட அக்கரைப்பற்று மண்ணுக்கு காலடி எடுத்து வைக்க 07 வருட காலமாக அஞ்சி கொண்டிருந்த ரவூப் ஹக்கீமை அழைத்து வந்து, விழா நடத்திய இமாலய சாதனை எனக்கே உரியது.

முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அக்கரைப்பற்று மண்ணில் இருந்து 902 வாக்குகள் வரையே கிடைத்து இருந்தன. ஆனால் நான் பதவியேற்ற பிற்பாடு, சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது, அவரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்த நிலையில் இத்தொகையை 4800 ஆக மாற்றி கொடுத்தேன்.

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றுக்காக எனது சொந்த நிதியில் இருந்துதான் பல மில்லியன் ரூபாயை செலவு செய்தேன்.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில், அரசாங்க ஆதரவுடன் கூடிய பாதாள உலக தாதாக்களின் செயற்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்திய நம்பிக்கை வேட்பாளர்கள் பலரும் வாபஸ் பெற்றனர். பலர் ஒளிந்து கொண்டனர். தேர்தல் கேட்க எவரும் முன்வராத நிலையில், தலைவர் செய்வதறியாது திகைத்து நின்றார். தொழில் நிமித்தம் கொழும்பில் வசிப்பவனாகிய நான் 46 வேட்பாளர்களை அத்தேர்தலில் எனது துணிவு, செல்வாக்கு மற்றும் பண பலம் ஆகியவற்றை மாத்திரம் முற்றிலும் நம்பி இறக்கினேன்.  எனது சொந்த சகோதரனையும் அத்தேர்தலில் போட்டியிட வைத்தேன். அத்தேர்தலில் என்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு ஆசனங்களை வென்றது.

கேள்வி:- 2010 ஆம் ஆண்டு பொது தேர்தலில் நீங்கள் எவ்வித பங்களிப்புகளையும் கட்சிக்கு வழங்கி இருக்கவில்லை என்று குற்றம் சாட்டுபவர்கள் உள்ளனரே?

பதில்:- என்னை கட்சிக்குள் சேர்த்தபோது ரவூப் ஹக்கீம் வழங்கி இருந்த வாக்குறுதிகளில் ஒன்று, என்னை 2010 ஆம் ஆண்டு பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட வைப்பது என்பது. இதை கட்சி உயர்பீடமும் அப்போது ஏற்று அங்கீகரித்து இருந்தது. ஆனால் என்னை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமிப்பேன் என்று, வேட்பு மனு தாக்கல் செய்கின்ற கடைசி தருணத்தில் ஹக்கீம் சொன்னார். தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியலில் எனது பெயரையும் சேர்த்து அனுப்பினார். ஆயினும் இவரின் தேசிய பட்டியல் வாக்குறுதியில் எனக்கு அறவே நம்பிக்கை இருக்கவில்லை. நான் அத்தேர்தலில் போட்டியிட முடிந்திராத நிலையில் அக்கரைப்பற்று மண்ணை சேர்ந்த உலமாக்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என்னை சந்தித்து, அக்கரைப்பற்று மண்ணுக்கு வழமையாக கிடைத்து வருகின்ற நாடாளுமன்ற பிரதித்துவத்தை நானாக இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம் என்று கண்டிப்பாக கேட்டு கொண்டனர். அவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை நான் ஏற்று கொண்டேன்.

இதே நேரம் அத்தேர்தலில் வேட்பாளர்களாக தங்களை நிறுத்தவில்லை என்பதற்காக, ஜெமில், ஜவாத், எஸ்.எஸ்.பி. மஜித் மற்றும் மசூர் சின்னலெப்பை ஆகியோர் கோபித்து கொண்டு கட்சியை விட்டு வெளியேறினர். நான் அவ்வாறு வெளியேறவில்லை என்பதுடன், இவர்களுடன் 08 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி, இவர்களை மீண்டும் கட்சி உயர்பீடத்துக்கு கொண்டு வந்தேன்.

கேள்வி:- கடந்த மாகாண சபை தேர்தலில் ரவூப் ஹக்கீம் உங்களை வேட்பாளராக நிறுத்தி இருந்தாரே?

பதில்:- உண்மைதான். அக்கரைப்பற்று மண்ணில் இருந்து மூவரை வேட்பாளராக நிறுத்தி இருந்தார். இவர் உண்மையில் ஒரு வேட்பாளரை மாத்திரமே அக்கரைப்பற்றில் இருந்து நிறுத்தி இருக்க வேண்டும். அது நானாகவே இருந்திருக்க முடியும். இவர் மூன்று வேட்பாளர்களை நிறுத்திய காரணத்தால் எனது வெற்றி நழுவி போனது. நான் வெற்றி அடைய கூடாது என்பதற்காகவே இவர் திட்டமிட்டு, சதி செய்து, மூன்று வேட்பாளர்களை அக்கரைப்பற்றில் நிறுத்தி இருந்தார் என்று இப்போது உணர்கின்றேன். இவ்வேட்பாளர்களில் ஒருவர் தவம் என்பது இவ்விடயத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றது. இத்தேர்தலில் தவத்துக்கு மாத்திரம் வேலை செய்யுமாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச அமைப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் இவர் கூட்டம் போட்டு அறிவித்து இருந்தார். இருப்பினும் எனக்கு 4900 வாக்குகள் வரை கிடைத்தன.

கேள்வி:- நீங்கள் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியில் இணைந்து கொண்டது ஏன்?

பதில்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னை வெளியில் போடவில்லை என்பதையும், நானே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சுயவிருப்பத்தின் பெயரில் வெளியேறி வந்து உள்ளேன் என்பதையும் இவ்விடத்தில் முதலில் சொல்லி வைக்க விரும்புகின்றேன். இவ்விதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சுயமாக வெளியேறி, தூய முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள முன்னோடியும் நானே ஆவேன்.

கடந்த மூன்று வருடங்களாக ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பனவாகவே உள்ளன. பெருந்தலைவர் அஷ்ரப் அம்பாறை மாவட்டத்தில் இருந்து உருவாக்கி கொடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ரவூப் ஹக்கீம் கட்சி யாப்பு மாற்றம், சர்வதிகாரம், குடும்ப ஆட்சி, தனிப்பட்ட ஒழுங்கீனம் மற்றும் தனிப்பட்ட பலவீனம் ஆகியவற்றின் மூலம் அழித்து கொண்டு இருக்கின்றார்.

இவரின் நிகழ்ச்சி நிரலுக்கு இடைஞ்சலாக இருந்ததால்தான் கட்சியின் முதுசமும்,முதுகெலும்புமான ஹசன் அலியை, அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவியில் இருந்து இல்லாமல் செய்தார். கடைசியில் அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவியையே இல்லாமல் செய்து பெயரளவிலான செயலாளர் பதவியை கடந்த பேராளர் மாநாட்டுக்கு முந்திய கட்டாய உயர்பீட கூட்டத்தில் உருவாக்கி, இவரிடம் சம்பளம் பெறுகின்ற கொத்தடிமை ஒருவரை செயலாளராக நியமித்தார்.

ஹசன் அலிக்கு செயலாளர் பதவியை ஹக்கீம் வழங்குவார் என்று, பல சுற்று பேச்சுவார்த்தைகளின்போது பல பல சத்தியங்களை இறைவனின் நாமத்தில் செய்திருந்தபோதிலும், மாறாகவே நடந்து கொண்டார். ஹசன் அலி மனம் உடைந்து கட்டாய உயர்பீட கூட்டத்தில் இருந்து வெளியே சென்றபோது, கூடவே நானும் வெளியேறினேன். ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்று, அன்று முதல் முன்னின்று போராடி வருகின்றேன். ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத், நஸார், அன்சில், தாஹிர் ஆகிய ஐவரும் சேர்ந்து தூய முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி, எமது லட்சியத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்.

பேரினவாதமும், பெருமதவாதமும் அரசாங்க ஆதரவுடன் எமது சமூகத்துக்கு எதிராக போர்க் கொடி தூக்கி உள்ள நிலையில், இவற்றுக்கு எதிராக குரல் எடுத்து எமது சமூகத்தை பாதுகாக்கின்ற பணியையும் தூய முஸ்லிம் காங்கிரஸ் இதய சுத்தியுடன் மேற்கொள்ளும். தூய முஸ்லிம் காங்கிரஸின் நடத்துனராக மூத்த சகோதரர் ஹசன் அலி செயற்படுகின்றார். முஸ்லிம் காங்கிரஸுக்காக பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கிய யாப்பையே தூய முஸ்லிம் காங்கிரஸ் அதன் சாசனமாக கொண்டு உள்ளது. மேலும், தூய முஸ்லிம் காங்கிரஸ் மசூரா அடிப்படையிலான ஒரு தலைமைத்துவ சபையை கொண்டிருக்கும். அரசியலில் சம்பந்தப்படாத கல்விமான் ஒருவரை செயலாளராக நியமிக்க தீர்மானித்து உள்ளோம். மிக விரைவில் எமது கொள்கைகள் மக்கள் முன் வைக்கப்படும். தூய முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான முதலாவது மத்திய குழு தெரிவு கூட்டம், ஹசன் அலியின் இல்லத்தில் கடந்த மாதம் இடம்பெற்றது.

தொடர்ந்து ஒவ்வொரு பிரதேசத்துக்குமான மத்திய குழுவை தெரிவு செய்கின்ற வேலைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. அக்கரைப்பற்றுக்கான மத்திய குழு தெரிவு கூட்டம் எனது தலைமையில் இடம்பெற்றது. ரவூப் ஹக்கீம் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மாத்திரம் அன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்தில் தற்போது அங்கம் வகித்து கொண்டிருக்கின்ற பலரும் உரிய நேரத்தில் எமது கட்சியில் வந்து இணைவார்கள் என்பது திண்ணம் ஆகும். ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸ் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பது பெருந்தலைவர் அஷ்ரப்பை நேசிக்கின்ற அனைவரினதும் பேரவா ஆகும். தூய முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ளுமாறு தற்போதைய அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அன்றி, முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம்.

கேள்வி:- உங்களுக்கு பஷீர் சேகு தாவூத் மீது அன்பு, மரியாதை, அனுதாபம் இருப்பதாக தெரிகின்றதே?

பதில்:- பெருந்தலைவர் அஷ்ரப்பால் முஸ்லிம் காங்கிரஸுக்குள் மிக மரியாதையாக அழைத்து வரப்பட்ட மேன்மகன், புத்திஜீவி பஷீர் சேகு தாவூத். கடந்த 17 வருடங்களாக கட்சியை காப்பாற்றி கொடுத்தவர். கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கட்சி தலைமையை பாதுகாத்தவர். கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட ஒழுங்கீனங்கள், பலவீனங்கள் ஆகியவற்றால் கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் ஆபத்துகள், அவமானங்கள் நேர்ந்தபோது அவற்றை எல்லாம் எதிர்கொண்டு முறியடித்த தளபதி இவரே ஆவார். இதற்காக இவர் சுய மரியாதையை இழந்து அவமானப்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம். மேற்கொண்ட தியாகங்கள் ஏராளம். ஆனால் ரவூப் ஹக்கீம், செய் நன்றி மறந்த துரோகி ஆகி விட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் கடந்த கட்டாய உயர்பீட கூட்டத்தில், கட்சியின் வரலாற்றில் முன்னெப்பொழுதும் நடந்திராத ஒரு அதிசயம் இடம்பெற்றது. என்னவென்றால் தவிசாளர் பதவியில் இருந்து பஷீர் சேகு தாவூத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற தீர்மானத்தை எடுப்பதற்காக, கை உயர்த்தி காட்டும்படி உயர்பீட உறுப்பினர்கள் தலைவரால் கோரப்பட்டனர். நன்றி உணர்வு கொண்ட உறுப்பினர்களில் சிலர், கை உயர்த்த மறுத்தனராயினும், தலைவரால் பெயர் சொல்லி அடையாளம் காட்டப்பட்டு மன சாட்சிக்கு விரோதமாக கை உயர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆயினும் இறை அச்சம் கொண்டவனாகிய நான், கை உயர்த்தாமல் இப்பாவச் செயலில் இருந்து தப்பித்து கொண்டேன். எனக்கு இன்னுமொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. என்னவென்றால் தவிசாளர் பதவியை ஏற்று கொள்ள வேண்டும் என்று ஹசன் அலியை ரவூப் ஹக்கீம் கோரினார். ஆனால் ஹசன் அலி திட்டவட்டமாக மறுத்து விட்டார். அவரும் என்னை போலவே அல்லாஹ்வுக்கு பயந்தவர் என்பதை அத்தருணத்தில் கண்டு கொண்டேன்.

கேள்வி:- தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரான நீங்கள் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குகின்ற முன்னெடுப்புகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றீர்கள். இம்முயற்சி வெற்றி பெறுமா?

பதில்:- முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக முஸ்லிம் கட்சிகள் பலவற்றுடனும் தூய முஸ்லிம் காங்கிரஸ் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றுடன் அடிக்கடி பேசி வருகின்றோம்.

இப்பேச்சுவார்த்தைகளில் வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள், நில பிரச்சினைகள், அரசியல் அமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம் போன்ற விடயங்களில் ஒருமித்து குரல் கொடுப்பது என்று முதல் கட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் கட்சிகள் தேர்தலை எப்படி முகம் கொடுக்க வேண்டும்? என்பது தொடர்பாக அடுத்த கட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும். கூட்டமைப்பாக இயங்குவது என்று உறுதியான பிற்பாடு நல்லெண்ண உடன்படிக்கை கைச்சாத்திடப்படும். அனைத்து தலைவர்களும் கூட்டணியாக இயங்க ஒன்றுபடுவார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உள்ளது. றிசாத் பதியுதீன், அதாவுல்லா ஆகியோர் அபிவிருத்தி அரசியலை செய்து வருகின்ற நிலையில், சொன்ன சொல் தவறி நடந்ததாக இது வரை சம்பவம் எதுவும் நடக்கவில்லை. எனவே ஒன்று சேர்கின்ற விடயத்தில் தூய முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி இருக்கின்ற வாக்குறுதிகளை இவர்கள் மீறவே மாட்டார்கள் என்று விசுவாசிக்கின்றோம்.

தனிமனித தலைமைத்துவம் இல்லாத, தலைமைத்துவ சபையை கொண்ட கூட்டமைப்பில் இணைய தயார் என்றால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இக்கூட்டமைப்பில் சேர முடியும். வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை பெருந்தலைவர் அஷ்ரப் அரசியல்மயப்படுத்தி உள்ளார். எனவே இம்மக்கள் அரசியலில் மிகுந்த தெளிவு உடையவர்களாக விளங்குகின்றனர். முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்பதே இவர்களின் அபிலாஷையாக உள்ளது. எமது சமூகத்துக்காக மறைந்த தலைவர் அஷ்ரப் கண்ட கனவுகள் அனைத்துக்கும் உயிர் கொடுக்கின்ற கூட்டமைப்பாக முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு மிளிரும்.

கேள்வி:- முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு என்ன?

பதில்:- வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக வடக்கு, கிழக்கு முஸ்லிம் தலைவர்களுடன் பேசித்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட முடியும். இதற்காக இம்முஸ்லிம் தலைவர்கள் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட வேண்டியது அடிப்படையான, அவசியமான விடயமாக உள்ளது. வடக்கு, கிழக்கு முஸ்லிம் தலைவர்களுக்கும், தமிழர் தரப்புக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.

தமிழ் கூட்டமைப்புக்கும், முஸ்லிம் கூட்டமைப்புக்கும் இடையில்தான் இப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இணக்கம் காணப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். பின்னர் மத்திய அரசாங்கத்துக்கு இம்முடிவுகளை ஒன்றாக சேர்ந்து அறிவிக்க வேண்டும். இவ்வணுகுமுறைதான் உண்மையான தீர்வை பெற்று தரும்.

நன்றி: ஞாயிறு தினக்குரல் (20 ஓகஸ்ட் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்