மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை

🕔 August 13, 2017

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நேற்று வாக்குவாதம் மற்றும் அடிபிடி நடைபெற்ற போதும், பிரச்சினைக்கான காரணத்தையறிந்து அதனைத் தீர்த்து வைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் மேற்கொள்ளவில்லை என்று, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கணிசமானோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி கூட்டம் நேற்று சனிக்கிழமை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நிந்தவூரில் நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீருக்கும், ஒலுவில் பிரதேசத்தவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பானது.

இதன்போது, மு.கா. தலைவர் ஹக்கீம் எதுவித செயற்பாடுகளையும் வெளிப்படுத்தாமல் அனைத்தையும் அங்கு பார்த்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரச்சினை தொடர்பாக, கூட்டத்தில் கலந்து கொண்ட ஒலுவில் பிரதேசத்தவர்கள் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவிக்கையில்; ஒலுவில் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 04 கோடி ரூபாயினை – தான் ஒருக்கீடு செய்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர், அந்தக் கூட்டத்தில் கூறினார். அது பொய்யாகும். அப்படி எந்தவித ஒதுக்கீடும் ஒலுவில் வைத்தியசாலைக்கு கிடைக்கவில்லை. இதனை, நாம் அங்கு சுட்டிக் காட்டினோம். அதேபோல, ஒலுவில் பிரதேசத்துக்கு அமைச்சர் நசீர் வேறு சில சேவைகளை வழங்கியதாகவும் தெரிவித்தார். அவற்றினையும் நாங்கள் மறுத்துப் பேசினோம். அதனால், அவருடைய பிரத்தியேக பணியாட்களை ஏவி, எங்களை தாக்கினார்” என்றனர்.

எது எவ்வாறாயினும், குறித்த பிரச்சினைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லாதது போல், அங்கு ரஊப் ஹக்கீம் இருந்தமையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, பலரும் விசனப்பட்டுக் கொண்டனர்.

“ஒலுவில் வைத்தியசாலைக்கு 04 கோடி ரூபாய் ஒதுக்கியதாக அமைச்சர் நசீர் கூறியது உண்மையா? அல்லது, அப்படி எந்த ஒதுக்கீடும் வரவில்லை என்று, ஒலுவில் பிரதேசத்தவர்கள் கூறியமை உண்மையா என்பதை, அந்த இடத்திலேயே ரஊப் ஹக்கீம் விசாரித்துத் தெரிந்திருக்க வேண்டும். அதை விட்டு, அடிபிடி நடப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பது, ஒரு தலைவருக்கு பொருத்தமானதல்ல” என்று, கூட்டத்தில் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரமுகர் ஒருவர் கூறினார்.

மேற்படி விடயங்களெல்லாம் ஒருபுறமிருக்க, தனக்கு முன்னால் நடந்த அடிபிடி தொடர்பில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்த கருத்துத்தான் எல்லோரையும் தூக்கி வாரிப் போட்டதாம்.

அடிபிடி தொடர்பில் எதுவித வருத்தத்தினையும் தெரிவிக்காத ஹக்கீம்; “இந்தச் சண்டை பற்றி மீடியாக்காரனுகளுக்குத் தெரிந்தால் போச்சு… அவ்வளவுதான்” என்றாராம்.

“அம்பாறை மக்களின் எத்தனை தலை உருண்டாலும், அந்தாளுக்கு பிரச்சினையில்லை. அந்தாளின் பிரச்சினை; மீடியாவுக்குத் தெரிந்தால் அவரின் மானம் போய்விடும் என்பதுதான்” என்று சொல்லி கவலைப்பட்டார், கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகரொருவர்.

தொடர்பான செய்தி: மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்