கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு

🕔 August 5, 2017

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு மாகாண சபைக்காக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலின் போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, வடக்கு முஸ்லிம்களது நலன்களை மையமாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டது.

இதன் பிரகாரம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கைகள் மற்றும் ஒழுங்கு விதிகளை ஏற்று, கட்சியினது பிரதிநிதியாக செயற்படும் உடன்பாட்டின் அடிப்படையில், அய்யூப் அஸ்மின் வட மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் NFGG செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைத்த போனஸ் ஆசனம் மூலமே இந்த நியமனம் செய்யப்பட்டது.

இவ்வாறு நியமிக்கப்பட்டு இரண்டரை வருடங்களின் பின்னர், கடந்த 2016 மார்ச் மாதம் வட மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டது. இதில் குறிப்பாக, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய நலன்கள் குறித்த விடயங்களில் வட மாகாண சபையின் நடவடிக்கைகள், எமது பிரதிநிதியான அய்யூப் அஸ்மினின் செயற்பாடுகள் ஆகியன விரிவாக ஆராயப்பட்டன.

இதனுடன் தொடர்புபட்ட ஆறு விடயங்களில் திருப்தியடையக் கூடிய முன்னேற்றங்கள் எவையும் காணப்படாததால், குறித்த பதவியில் எமது பிரதிநிதி தொடர்ந்தும் இருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வந்தது.

இந்தப் பின்னணியிலேயே எமது பிரதிநிதியினை மீளழைப்பதற்கான முடிவினை தலைமைத்துவ சபை அன்று மேற்கொண்டது. இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கூட்டத்தில் அய்யூப் அஸ்மினும் கலந்து கொண்டிருந்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் பதவியை அய்யூப் அஸ்மின் ஏற்கும் போது, “தலைமைத்துவ சபை எடுக்கும் எந்தவொரு தீர்மானத்துக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு, எனக்கு வழங்கப்பட்ட 19 அம்ச ஒழுக்க நடைமுறை விதிகளை மீறாத வகையிலும் நடந்து கொள்வேன்” என்று கூறி, மக்கள் முன்பாகவும் இறைவனின் பெயராலும் பகிரங்க உறுதிப் பிரமாணம் எடுத்திருந்தார்.

எனினும், நடைமுறையில் அவர் அதற்கு மாற்றமாக, கட்சியின் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமலேயே நடந்து கொண்டார். குறிப்பாக, கட்சியின் மக்கள் நலன் சார்ந்த சுயாதீன கொள்கை நிலைப்பாடுகளைப் பேணுதல், பதவி மூலமாகக் கிடைக்கும் நிதிகளை முறையாக கையாளுதல், மீளழைக்கும் தீர்மானத்திற்கு ஒத்துழைத்தல் , கிடைத்த தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் மூலமான நன்மைகளை வடக்கு மக்களுக்காகப் பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்கு அவர் ஒத்துழைக்கவில்லை.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இது குறித்துப் பேசி, எமது மீளழைத்தல் தீர்மானத்தை சுமுகமாக நிறைவேற்றுவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அவ்விடயத்தை செய்து முடிப்பதற்கு நாம் எதிர்பார்த்தை விடவும் கூடுதலான காலம் எடுத்துவிட்டது. இந்தத் தாமதத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முக்கிய காரணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இடைப்பட்ட காலப் பிரிவில் பல்வேறு சந்தர்ப்பங்களில், அய்யூப் அஸ்மின் தொடர்பான தொடர்ச்சியான அவதானங்கள் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவரிடம் கலந்துரையாடவும், அது சம்பந்தமான விளக்கங்ளைப் பெறவும் அவருக்கு பல அழைப்புகள் விடுக்கப்பட்டன. இவற்றிற்கு எந்தவொரு சாதகமான பதிலையும் தராமல் அவர் தொடர்ந்தும் ஒத்துழைக்காமலே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ( 04.08.2017) கொழும்பில் கூடிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை, இது விடயமாக விரிவாக ஆராய்ந்ததுடன், அய்யூப் அஸ்மின் தொடர்பாக பின்வரும் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

1. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தீர்மானங்களுக்கு, தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்காமை,

2. கட்சியின் அடிப்படைக் கொள்கைகள், நிலைப்பாடுகள், விழுமியங்கள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றுக்கு முரணாக கருத்துக்களை வெளியிட்டும் செயற்பட்டும் வந்தமை,

3. கட்சியின் ஒழுங்கு விதிகளை – குறிப்பாக நிதிசார் ஒழுங்கு விதிகளை – உரிய முறையில் பின்பற்றாமை

ஆகிய காரணங்களின் அடிப்படையில், அய்யூப் அஸ்மினை கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்குவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. எனவே, அய்யூப் அஸ்மின் – இதன் பின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபைப் பிரதிநிதியாகவோ, கட்சி தொடர்பான ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்படமாட்டார். இந்தத் தீர்மானம், ரகசிய வாக்கெடுப்பின் மூலம், தலைமைத்துவ சபையினால் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அவருடைய அரசியல் கருத்துக்கள், நிலைப்பாடுகள், மற்றும் அரசியல் செயற்பாடுகள் எதற்கும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்