சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி; பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில்

🕔 August 4, 2017
– அகமட் எஸ். முகைடீன் –

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக, வாழ்வாதார உதவி வழங்கும் முதற்கட்ட நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு, சுய தொழிலை மேற்கொள்வதற்கு ஏதுவாக கோழி வளர்ப்புக்கான கோழிக்குஞ்சு, கோழித்தீன் மற்றும் கோழி வளர்ப்பு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அடுத்த வாரமளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இரண்டாம் கட்ட நிகழ்வின்போது, வேறு வகையிலான சுயதொழிலை மேற்கொள்வதற்குரிய வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர், கணக்காளர் ஏ.எம். நஜிமுத்தீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் கால்நடை வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்