கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார்

🕔 August 3, 2017

– மப்றூக் –

கிழக்கு மாகாகணத்தில் முஸ்லிம்கள் மீது  1990 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று, விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்ட முடியாது என, வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு, பாசிசப் பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் மரணமான 27ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இவ்வாறானதொரு நாளிலேயே, மேற்கண்ட கருத்தினை அய்யூப் அஸ்மின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

முஸ்லிம்கள் மீது 1990 களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை புலிகள்தான் செய்தார்கள் என, உரிய விசாரணைகளின் படி நிரூபிக்கப்படவில்லை என்றும், அதனால், அந்தக் கொலைக்கு காரணம் புலிகள்தான் என்று கூறுவதை விடவும், ஆயுதாரிகள் என்று கூறுவதுதான் பொருத்தமானது எனவும், தனது பதிவில் அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உரிய விசாரணைகளின் பின்னர்தான் 1990களில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைத் தாக்குதல்களுக்கு காரணம் யார் என்பதைக் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி அய்யூப் அஸ்மின் என்பவர் – வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார்.

வடக்கு மாகாண சபையில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனத்துக்காக இவர் நியமிக்கப்பட்டார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்து கொண்ட தேர்தல் ஒப்பந்தத்துக்கு இணங்க, வடக்கு மாகாண சபையில் தனக்குக் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றினை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. அந்த ஆசனத்துக்கு அய்யூப் அஸ்மினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நியமித்தது.

எவ்வாறாயினும், குறிப்பிட்டதொரு காலத்துக்கு மட்டுமே பதவி வகிக்கும் வகையில்தான், அய்யூப் அஸ்மினை மேற்படி மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நியமித்தது.

இந்த நிலையில், அய்யூப் அஸ்மினை மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கேட்டுக் கொண்டபோதும், அவர் பதவி விலக மறுத்து வருகின்றார்.

இப்படியானதொரு காலகட்டத்தில்தான், புலி ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தும் வகையில், மேற்படி கருத்தினை அஸ்மின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் இவ்வாறானதொரு கருத்தினை அய்யூப் அஸ்மின் பதிவிட்டமையினை அடுத்து, அவரை கடுமையாக விமர்சித்து, பலரும் அவரின் பதிவின் கீழ் கருத்துக்களை எழுதியிருந்தனர். அந்த விமர்சனங்களையெல்லாம் நீக்கிக் கொண்டிருந்த அஸ்மின், இறுதியாக தனது பதிவினை பேஸ்புக் பக்கத்திலிருந்தும் நீக்கியுள்ளார்.

தொடர்பான செய்தி: வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்