பிணை முறி விவகாரம்: ஆணைக்குழு முன்னிலையில் ரவி ஆஜர்; மன்னிப்பும் கோரினார்

🕔 August 2, 2017

முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக சாட்சியமளிக்கும் பொருட்டு, அதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை சமூகமளித்தார்.

கடமைகளின் நிமித்தம் இரண்டு முறை ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என அறிவித்திருந்த அமைச்சர், இன்றைய தினம் ஆஜரானார்.

இந்த நிலையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆணைக்குழுவில் இன்று முற்பகல் 10.30க்கு சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.

இரண்டு முறை சமூகமளிக்க முடியாது போனமைக்கு அமைச்சர் முதலில் மன்னிப்பு கோரியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதால், தன்னால் கலந்து கொள்ள முடியாது போனது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியமை, கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க சென்றமை, அங்குள்ள வீடொன்றை கொள்வனவு செய்தமை ஆகியன குறித்து சாட்சியமளிக்க, தமது தரப்பு வாதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அரசகுலரட்ன கூறியுள்ளார்.

இதேவேளை, பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் பொறுப்பில் இருக்கும் அர்ஜூன் அலோசியஸின் கைத்தொலைபேசியின் தரவுகளை அழிக்க முயற்சிதுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தது.

அர்ஜூன் அலோசியசிஸ் 06 மாதங்களுக்கு முன்னர் இருந்து பயன்படுத்தி வந்த தொலைபேசி இலக்கத்தை ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு, கைத் தொலைபேசிகளைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களின் கைத்தொலைபேசிகளை பொலிஸார் பெற்றுக் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்