கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி

🕔 July 24, 2017

– அஹமட் –

முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி நடவடிக்கைகள்; முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதில், பாதகமான தாக்கங்கள் எவற்றினையும் ஏற்படுத்த மாட்டாது என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்காக முன்னின்று உழைப்பவர்களில் ஒருவருமான நஸார் ஹாஜி நம்பிக்கை தெரிவித்தார்.

முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கொள்கையளவில் தமது விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா வடக்கில் தனது கட்சியை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது கட்சியை மேலும் பலப்படுத்துவற்கு எடுக்கின்ற நடவடிக்கைகளும், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கத்தில் எவ்வித இடர்களையும் ஏற்படுத்தாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், முஸ்லிம் கூட்டணியில் அங்கம் வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் கட்சிகள், தங்களுக்கிடையில் நம்பிக்கையினையும், பரஸ்பர நட்புறவினையும் கட்டியெழுப்புவது அவசியமாகும் எனவும் நஸார் ஹாஜி வலியுறுத்தினார்.

“அம்பாறை மாட்டத்தில் அரசியல் செய்வதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு உள்ள உரிமை போன்று, வடக்கில் தனது கட்சியை விஸ்தரிப்பதற்கான முழு உரிமை முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கும் உள்ளது. ஆனாலும், இந்த செயற்பாடுகளின்போது ஒருவரை ஒருவர் தூற்றியும், வசைபாடியும் அரசியல் செய்வதைத் தவிர்த்துக் கொள்வது ஆரோக்கியமாக அமையும்” என்றும் அவர் கூறினார்.

“ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் ஹசனலி உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகளின் வழிகாட்டலுக்கிணங்க நாங்கள் ‘தூய முஸ்லிம் காங்கிரஸாக’ச் செயற்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்த நஸார் ஹாஜி; முஸ்லிம் கூட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக, எத்துணை தியாகத்தினைச் செய்வதற்கும், தாம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, சமூக நலனை முன்னிறுத்தி உருவாக்கத் திட்டமிட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்புக்கு, அரசியல் பேதமின்றி முஸ்லிம் மக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென்றும், முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பில் ஆலோசனைகளை மக்கள் வெளிப்படுத்த வேண்டுமெனவும் நஸார் ஹாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்