சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

🕔 July 20, 2017

ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியை  கொள்கலனிலிருந்து, இறக்குவதற்கு முன்னதாகவே, அதிலிருந்த கொகெய்ன் கண்டு பிடிக்கப்பட்டதாாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.

பொருட்களை இறக்குவதற்கு முன்னர், வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டதாகவும், அதனையடுத்து, பொலிசாருக்கு சதொச நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

ரத்மலான சதொச களஞ்சியசாலையில் 100 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கொக்கெயினை, பொலிசார் கண்டு பிடித்தமை தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு கொழும்பு சதொச தலைமையகத்தில் இன்று வியாழக்கிமை இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட விடயங்களை அவர் தெளிவுபடுத்தினார்.

“எமது நிறுவன ஊழியர்கள் சீனிக் கொள்கலனை திறந்தனர். இதன்போது, வித்தியாசமான பொதிகள் இருந்ததனால் அதனை மீண்டும் மூடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர், பொலிசார் சீனியுடன் இருந்த பொதிகள் கொக்கெயின் என கண்டுபிடித்தனர். அநாமதேய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிசார்  இதனைக் கண்டுபிடிக்கவில்லை. இந்த விடயம், தெரியவந்த போது நாங்களே பொலிசாருக்கு தெரிவித்தோம்” என்று, சதொச நிறுவன தலைவர் விபரித்தார்.

சதொச நிறுவனத் தலைவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;

“சதொசவின் விற்பனைக்கென நேரடியாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நாங்கள் சீனியை இறக்குமதி செய்வதில்லை. வாரா வாரம் விலைமனுக்கோரலின்  அடிப்படையிலேயே எமது நிறுவனத்துக்குத் தேவையான சீனியை கொள்வனவு செய்கின்றோம். அதற்கிணங்க இந்த வாரம் ரஞ்சிதா பல்ஸ் நிறுவனம்விலைமனுக் கோரலில் தெரிவாகியிருந்தது.

எனினும் இரத்மலானை களஞ்சியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கொக்கெயின் தொடர்பாக, சேறு பூசும் நடவடிக்கையில் சில ஊடகங்கள் ஈடுபட்டமை குறித்து வருத்தம் தெரிவித்தமளிக்கிறது. இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற இலங்கை சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“ரத்மலான களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்த சீனிக்கொள்கலன் பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பிரேசில் நாட்டின் சீனி  ஏற்றுமதியுடன் சர்வதேச போதை மாபியாக் குழுக்களின் ஈடுபாடு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பில் கடந்த காலங்களிலும் பிரேசில் நாட்டிலிந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கொள்கலன்களில் கொக்கெயின் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் பிரேசிலிருந்து சீனி இறக்குமதி செய்வதில்லையென்று எமது சங்கம் முடிவு செய்திருந்தது.

பிரேசிலிலிருந்து தற்போது சமரக்கோன் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சீனியின் ஒரு தொகுதியையே,  ரஞ்சிதா பல்ஸ் நிறுவனம் உள்நாட்டில் கொள்வனவு செய்துள்ளது. அந்த சீனியே சதொச களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்று விளக்கமளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்