இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

🕔 July 21, 2015
Jaffna Osmaniya college - 01
பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்  25 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர வகுப்புகள், மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

இக் கல்லூரியில், 1990 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட உயர்தர வகுப்புகள்,  அதிபர் ரி. மகேந்திர ராசா மற்றும் பிரதி அதிபர் மௌலவி எம்.ஏ. பைசர் மதனி ஆகியோரின் அயராத முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக, கலைப்பீடத்தில் மாணவர்கள் இணைக்கப்பட்டு, நாளை புதன்கிழமை உயர்தர வகுப்பு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அடுத்த ஆண்டில் ஏனைய பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,  இதன் மூலம் இப்பாடசாலையின் 01ஏபி தரத்தினை பாதுகாப்பதோடு, தரமான கல்வியை எதிர்காலத்தில் சமூகத்திற்கு பயனுள்ள முறையில் வழங்க முடியும் என்றும் அதிபர் மகேந்திர ராசா தெரிவித்தார்.

ஆரம்பிக்கப்படவுள்ள, உயர்தரம் கலைப் பிரிவில் – இஸ்லாம், அரபு, புவியியல் மற்றும் தமிழ் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ள உயர்தர வகுப்பில் இணைய ஆர்வமுள்ள வெளிமாவட்ட மாணவர்கள், உடனடியாக தொடர்பு மேற்கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்