பிக் பொஸ்

🕔 July 12, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்னும் பலமிழக்காமல் இருக்கின்றார்கள். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற பெயரில், தமிழர் கட்சிகளில் கணிசமானவை ஒற்றுமைப்பட்டு இயங்கி வருகின்றமைதான் அந்தப் பலத்துக்குக் காரணமாகும். முஸ்லிம்களிடத்தில் இவ்வாறானதொரு அரசியல் பலம் இப்போது இல்லை. அஷ்ரப்பின் மரணத்துடன் தமது அரசியல் பலத்தை கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகம் இழந்து விட்டது.

அஷ்ரப்பின் காலகட்டத்தில், அவர் தலைமை வகித்த முஸ்லிம் காங்கிரஸில் இருந்த பலரும், அவரின் மரணத்தின் பிறகு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து, மெல்ல மெல்ல பிரிந்து, தனித்தனியான அரசியல் செயற்பாட்டுக்குள் நுழைந்து விட்டனர்.

அதாவுல்லா, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன், அமீர்அலி, நஜீப் ஏ. மஜீத் என்று, மு.காவிலிருந்து மிக முக்கிய நபர்கள் வெளியேறினார்கள். இப்போது அந்த வெளியேற்றமானது பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி வரை, வந்து நிற்கிறது.

முஸ்லிம் சமூகத்துக்குள் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லாவினுடைய தேசிய காங்கிரஸ் என்று, பல கட்சிகள், அரசியல் தளத்தில் இயங்கி வருகின்றன.

அப்துல் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இப்போது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்துக்குள் இத்தனை கட்சிகள் இருந்தும், முஸ்லிம் மக்களின் சிறிய, பெரிய பிரச்சினைகள் எவற்றுக்கும் அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் 63 ஆயிரம் ஏக்கர் காணிகள் அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை, இன்னும் அவர்களின் இடங்களில் மீளவும் குடியமர்த்த முடியாமலுள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென்று சவுதி அரேபிய நிதியில் கட்டப்பட்ட நுரைச்சோலை வீடுகளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் பெற்றுக் கொடுக்க முடியாமலுள்ளது. இறக்காமத்தில் மாயக்கல்லி மலைப் பகுதியில், புத்தரின் பெயரால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளுக்குள் நுழைவதற்கு, உரிமையாளர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இவ்வாறான பிரச்சினைகள் ஒன்றுக்குக் கூட, தீர்வைப் பெற்றுக் கொள்ள இதுவரை முடியவில்லை. அந்தளவுக்கு முஸ்லிம் அரசியல் பலவீனமாக உள்ளது.

இவ்வாறான விடயங்கள் ஒருபுறமிருக்க, முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இனவாதச் செயற்பாடுகளைக் கூட, உரிய தருணத்தில் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுக்க முடியாத நிலையில்தான் முஸ்லிம்களின் அரசியல் இருந்தது; இருக்கிறது.

இத்தனைக்கும் நாடாளுமன்றத்தில் 21 உறுப்பினர்கள் உள்ளார்கள். முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சமயங்களில், அதற்கு எதிராக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்காமலில்லை. ஆனாலும், அவர்களால் தீர்வுகளையும் நியாயங்களையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மேற்படி நிலைவரமானது ஓர் ஆற்றாமையை ஏற்படுத்தி விட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம்களில் பலர், அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர். அவர்களில் கணிசமானோர் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்தார். “நாம் யாரை நம்பினோமோ, யாரை ஆட்சிக்குக் கொண்டுவர எம்மை அர்ப்பணித்தோமோ அவர்கள் மீது சந்தேகம் வந்து விட்டது. அவர்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம்.  முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றுபட வேண்டியிருக்கின்றது. சமூகத்தில் உள்ள அத்தனை சாராரும் ஒருமித்துப் பேச வேண்டிய காலகட்டம் உருவாகி இருக்கின்றது. நமது சமூகத்துக்கு எற்பட்டுள்ள ஆபத்துகளையும் சவால்களையும் தாண்டிச்செல்லக்கூடிய வகையில் இளைஞர்கள் மற்றும் பல்துறை சார்ந்தவர்களை, சமூக ஒற்றுமைக்காகத் தயார்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு அப்பால், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது” என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு பேசினார்.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்து நின்று செயற்படுகின்றமையானது, ஆட்சியாளர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாகும். பிரிந்து நிற்பவர்களிடம் அரசியல் அடர்த்தியும் பலமும் இருக்காது. பிரிந்து நிற்பவர்களைக் கையாள்வது மிகவும் இலகுவான காரியமாகும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைவரத்தை அனுபவ ரீதியாக முஸ்லிம் அரசியல்வாதிகள் புரியத் தொடங்கி விட்டனர்.

அதனால்தான், “அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று, ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போன்று, முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒரு கூட்டணியாக இணைந்து செயற்பட வேண்டும் என்கிற கோரிக்கை, நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம் சமூகத்தின் பல மட்டங்களிலிருந்தும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால், அது சாத்தியப்படவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில், ஒரு கூட்டு அமைந்தது.

அரசியல் அரங்கில் இரண்டு துருவங்களாக இயங்கி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸும், ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டமைத்து, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டன.

ஆனால், அந்தத் தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவே, மேற்படி இரண்டு கட்சிகளும் அந்தத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்தன என்கிற ஒரு குற்றச்சாட்டும் அப்போது பரவலாக முன்வைக்கப்பட்டமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு இணங்கவே, இவர்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.

இதைத் தவிர, முஸ்லிம்களின் பெரிய கட்சிகள் எவையும் கூட்டணியமைத்துப் போட்டியிட்டதில்லை. ஆனால், அதற்கான தருணம் வந்து விட்டதாக இப்போது கூறப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இறுதியாக வெளியேறிய பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹசன் அலி ஆகியோர், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றைச் சாத்தியப்படுத்துவதில் முன்னின்று உழைத்து வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியே தீர வேண்டும் என்பதில், பஷீர் சேகுதாவூத் விடாப்பிடியாகச் செயற்பட்டு வருகின்றார்.

இதற்கிணங்க முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இறுதியாக வெளியேறிய அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி, உயர்பீட உறுப்பினர்களான நஸார் ஹாஜி, எம்.ஏ.எம். தாஹிர் மற்றும் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்டோர் தங்களை உள்ளடக்கிய ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொண்டு, முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் அரசியல் பிரமுகர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இதற்கிணங்க, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுடன் பஷீர் மற்றும் ஹசன் அலி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு அதாவுல்லா இணக்கம் தெரிவித்துள்ளார். இதனை, பஷீர் சேகுதாவூத் மற்றும் அதாவுல்லா தரப்புகள் உறுதி செய்துள்ளன.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக, ஒரே தரப்பாக இணைந்து செயற்படுவதில் அதாவுல்லாவுக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. “முஸ்லிம்களின் முட்டைகளெல்லாம் ஒரே கூடையில் இருக்கக் கூடாது” என்று, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தொடர்ச்சியாகக் கூறி வந்துள்ளார். அவ்வாறான ஒருவர், தற்போது முஸ்லிம் அரசியல் கூட்டமைப்புக்கு இணக்கம் வெளியிட்டுள்ளமையானது கவனிப்புக்குரியதாகும்.

இதேவேளை, அதாவுல்லாவுக்கு முன்னராகவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் பஷீர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அதன்போது, முஸ்லிம் அரசியல் கூட்டமைப்புக்கு, ரிஷாட் சம்மதம் தெரிவித்திருந்ததோடு, முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காக சில விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கு, தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார். இதையும் பஷீர் சேகுதாவூத் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து, தற்போது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடனும் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கொள்கையளவில் அந்த முன்னணி, முஸ்லிம் அரசியல் கூட்டமைப்புக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று, ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்போதே, மேற்படி தகவலை பஷீர் தெரியப்படுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய பஷீர் சேகுதாவூத், அமையவுள்ள முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பு பற்றியும் அதற்கான தேவை குறித்தும் விளக்கமளித்தார். “கிழக்கு மாகாணத்துக்குரிய முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டமைப்பு என்பது, இலங்கை முழுவதிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கான ஒரு கூட்டாக அமையும்” என்று, இதன்போது பஷீர் சேகுதாவூத் கூறினார்.

“கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள்தான் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர். ஆனாலும், அந்த மூன்றில் ஒரு பங்கினருக்குத்தான் அரசியல் அடர்த்தியும் திடகாத்திரமும் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், “பௌத்த தரப்பிலுள்ள சிலர், பௌத்த மதத்தை அரசியலாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக, முஸ்லிம்களை மதவாதிகளாகக் காட்டி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க நிறுவனங்கள் பதில் சொல்லப் போனால், அது ஆபத்தாக அமைந்து விடும். எனவே, இவ்வாறான பிரச்சினைகளின் போது, இஸ்லாமிய இயங்கங்களிடம்; ‘நீங்கள் இருங்கள், நாங்கள் இந்த விடயத்தைக் கையாள்கிறோம்’ என்று சொல்லக் கூடிய தகுதி, உருவாகவுள்ள முஸ்லிம் கூட்டமைப்புக்கு வர வேண்டும்” என்றும் பஷீர் கூறினார்.

ஆக, முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பொன்று உருவாகுதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது.

இந்தநிலையில், முஸ்லிம் அரசியல் கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதை பஷீரின் சனிக்கிழமை உரையின் மூலம் உறுதி செய்ய முடிந்தது.

“முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கி செயற்படுகின்ற காலகட்டத்தில், உண்மையான முஸ்லிம் காங்கிரஸை மீட்டுக் கொண்டால், பழையபடி முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஒற்றைக் கட்சியாக எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்படுவோம். அதாவது, முஸ்லிம் கூட்டமைப்பு என்பதே அப்போது முஸ்லிம் காங்கிரஸாகத்தான் செயற்படும் என்று, தனது உரையில் பஷீர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடைகிறது. தடங்கல்கள் எவையும் நிகழாது விட்டால், இவ்வருட இறுதிக்குள் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் களமிறங்குவற்கு முஸ்லிம் அரசியல் கூட்டமைப்புக்காக முன்னின்று செயற்படுவோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

முஸ்லிம் அரசியல் கூட்டணியானது கிழக்கு மாகாணத்தில் கோலோச்சுகின்ற முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்தளவு சவாலாக அமையும் என்பதை, ஒரு தேர்தல் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் – அதற்கான அளவு கோலாக அமையும்.

இன்னொருபுறம் அரசியலில் எல்லோரும் ஒரே தரப்பில் இருப்பது, மக்களுக்கு ஆபத்தானதாகும். மாற்றுக் கருத்துக்கு அங்கு இடமில்லாமல் போய் விடும். எனவே, முஸ்லிம் கூட்டமைப்புக்கு வெளியில் ஆகக் குறைந்தது முஸ்லிம்கள் சார்பான ஓர் அரசியல் கட்சி இருப்பதும் நல்லதுதான்.

எது எவ்வாறாயினும், ‘ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்’ அரசியல் அரங்கில் தவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு, ஒரு ‘பிக் பொஸ் (Bigg Boss) தேவையாக இருக்கிறது.

அந்த ‘பிக் பொஸ்’, முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பாக இருக்குமா என்பதற்கு, காலத்தைத் தவிர பதில் சொல்வதற்கு, இங்கு யாருமில்லை.

நன்றி: தமிழ் மிரர் (11 ஜுலை 2017) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்