அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட்

🕔 July 7, 2017

 

– சுஐப் எம். காசிம் –

“அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் மற்றும் பாதிப்புக்களைத் தட்டிக்கேட்டு, அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

எம்மை வெளியேற்ற வேண்டுமென்று, ஆட்சியாளர்கள் எப்போது நினைக்கின்றார்களோ, அப்போது வெளியேற்றட்டும் என்ற உணர்விலேயே எந்தவித சலனமும், அச்சமும் இல்லாமால் நாம் இவ்வாறு பேசுகின்றோம் என்றும் அவர் கூறினார்.

முசலி தேசிய பாடசாலையின் மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா, இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கூட்டத்தில் உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

அவர்அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளுராட்சித் தேர்தல் வட்டார எல்லைப்பிரிப்பு தொடர்பில், முசலி பிரதேச மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்களை, பலர் ஆக்ரோஷத்துடனும், கவலையுடனும் வெளிப்படுத்தினீர்கள். இந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் நான், இந்த அநியாயங்களை உரிய இடத்தில் தட்டிக்கேட்டு நிவர்த்தி செய்ய முயசித்து வருகின்றேன்.

கொழும்பில் நேற்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள்  பங்கு பற்றிய உயர்மட்டக் கூட்டத்தில், உள்ளுராட்சித் தேர்தல் முறையினால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து நானும், அமைச்சர் மனோகணேசனும் மிகவும் காட்டமாகவும் இறுக்கமாகவும் பிரதமரிடம் எடுத்துரைத்தோம். இந்தக் கூட்டத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பங்கேற்றிருந்தார்.

புதிய முறையில் தேர்தல் நடத்துவதால் எங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களையும் ஆபத்துக்களையும் தெளிவு படுத்தினோம்.
பழைய முறையில் தேர்தலை நடத்துங்கள். புதிய முறை பற்றி பின்னர் யோசிப்போம்என்று நான் அங்கே கூறினோம். அதன்போது, பிரதமர் இருக்கையை விட்டு எழுந்து வெளியேற முயற்சித்தார். முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்  நிமல் ஸ்ரீபால டிசில்வா ஆகியோர் புதிய முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றனர். கூட்டம் ஓர் இக்கட்டான நலையிலேயே நடந்து முடிந்தது.

அதன் பின்னர், நேற்று மாலை நானும், அமைச்சர் மனோ கணேசனும் மீண்டும் பிரதமரைச் சந்தித்து சிறுபான்மை சமூகம் இந்த ஆட்சியைக் கொண்டு வந்தமைக்கு தண்டனையாகவா, இவ்வாறான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்கின்றது? என்று கேட்டோம். அதற்கு அவர்; ‘இந்த விடயத்தில் நாங்கள் இறுக்கமாக நிற்கவில்லை. நல்லாட்சியைக் கொண்டு செல்வதில் முட்டுக்கட்டைகள் ஏற்படுமென்ற அச்சத்தில், நல்லாட்சியின் பிரதான பங்காளிக் கட்சியொன்றின் தலைவர்களே இவ்வாறான தொடர்ச்சியான அழுத்தத்தைப் பிரயோகித்து புதிய முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென அழுங்குப்பிடியாக நிற்கின்றனர்’ என்றார். எனினும், இது தொடர்பில் பேசுவதற்கு பிரதமர் நேரம் ஒதுக்கித் தருவதாக எங்களுக்கு உறுதியளித்தார்.

இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் படுகின்ற கஷ்டங்கள் போதும் போதும் என்றாகிவிட்டது. முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தொடர்ந்தும் இழுத்தடிக்கும் கைங்கரியத்தையே நாம் பார்க்கின்றோம். ‘புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இத்துடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை’ என்ற மேலான அச்சம்  எம்முன்னே எழுந்து நிற்கின்றது.

மாகாணசபை நாடாளுமன்ற தேர்தல்களிலும், புதிய
முறைகளைப் புகுத்தி, எமது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை நலிவடையச் செய்வதற்கான பிரயத்தனங்களை இவர்கள் கையாள்வார் என்ற அச்சம் உள்ளது. அதனாலேயே, சில விடயங்களில் நாம் உரத்தும் உறைத்தும் பேசவேண்டி இருக்கின்றது.

ஞானசாரர் கைது விடயத்தில் நாங்கள் எத்தனை பிரயத்தனங்களை மேற்கொண்டோம். அவரை கூட்டில் அடைப்பதற்கான போதிய அளவு ஆதாரங்களும் வலுவான சாட்சிகளும் நியாயமான காரணங்களும் இருந்தன. ஆயினும், குற்றவாளி இலகுவாக தப்பிச் செல்லும் வழி முறையை ஏற்படுத்தி கொடுத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மன்றில் பேச வேண்டிய வரைமுறையையும் சிறப்புரிமையையும் கடந்து நாம் மன்றில் கொதித்து எழுந்தோம்.
சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி நீதியை நிலைநாட்டுங்கள்என்று  ஜனாதிபதியிடம், பிரதமரிடமும், சட்ட, ஒழுங்கு அமைச்சரிடமும் வலியுறுத்தினோம். எனினும் சட்டத்தின் பிடியிலிருந்து தேரர் தப்பித்துச் சென்றார். இதுதான் இன்றைய யதார்த்த நிலை.

அமைச்சர் பதவியைத் துறந்து  ஓரத்தில் ஒதுங்கிக் கொள்ளுங்கள்’ என்று சிலர் கூறுகின்றனர்.  நாடாளுமன்றத்தில் நூற்றுக்கணக்கான எம்பிக்களுடன் நாமும் அவர்களை போல் எம்.பி.யாக இருந்து பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுப்பதை விட, அமைச்சராக இருந்து கொண்டு அரசின் நடவடிக்கைகளை தட்டிக்கேட்டு, பாதிக்கப்பட்ட சமூகத்தை அதிலிருந்து காப்பாற்றுவதற்காக கொடுக்கும் குரலில்  ஒரு பெறுமதியும், கனதியும் இருக்கின்றது என்பதை உணர்ந்ததனாலேயே தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்கின்றோம்.

பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் சவால்களுக்கு முகங்கொடுத்து
, எமது சமூகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை,  திருத்தி சரியான பாதையில் கொண்டு செல்ல நாம் முயற்சிக்கின்றோம்.

எங்கள் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு முடிவு காண வேண்டுமென, அரசாங்கத்தை இடித்துரைக்கின்றோம். போராடுகின்றோம். எம்மை வெளியேற்ற வேண்டுமென்று அவர்கள் எப்போது நினைக்கின்றார்களோ, அப்போது வெளியேற்றட்டும் என்ற உணர்விலேயே எந்தவித சலனமும், அச்சமும் இல்லாமால் நாம் இவ்வாறு பேசுகின்றோம். நாம் இவர்களை தட்டிக்கேட்கவில்லை என்றால், இறைவன் எம்மை தண்டிப்பான். நாம் இந்த விடயங்களை கூறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை கொண்டு ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்று  எவரும் எண்ணக்கூடாது.

புதிய அரசியல் அமைப்பு யோசனைகள் தொடர்பில் இப்போது பெரிய பூகம்பம் கிளம்பியுள்ளது. மகாநாயக்க தேரர்கள் இந்த யோசனையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி கண்டியில் சந்தித்துள்ளதாக பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளிவந்துள்ளன. மகாநாயக்க தேரர்களுடன் இந்த விடயத்தில் பேசவேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. எல்லாமே இடியப்பச்சிக்கலாக மாறியுள்ள நிலையில், நமது சமூகமும் நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

முசலி தேசிய பாடசாலையில் மூன்றுமாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியமை எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. விசேட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலமே இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தினோம். யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர், மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்கும் போது, இந்தப் பிரதேசம் இருந்த நிலைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். முசலி பிரதேசத்தில் பல புதிய பாடசாலைகளை உருவாக்கி இருக்கின்றோம்.

இடிந்து போன பாடசாலைக் கட்டிடங்களை மாடிக் கட்டிடங்களாக மாற்றி அமைத்தோம். பல்வேறு அலுவலகங்களின் கட்டிடங்களை மீள்கட்டியெழுப்பினோம்
வீடுகளை நிர்மாணித்து கொடுத்தோம். முடிந்தவரையில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவிகளை நல்கினோம். இன்னும் நல்கி வருகிறோம். எதிர்வரும் காலங்களில் இங்குள்ள பாடசாலைகளின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெகு விரைவில் அதற்கான பலாபலன்களை அனுபவிப்பீர்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்